நிழலுருவம் (Silhouette) என்பது வெறும் நிழல் வடிவம் மட்டுமல்ல; அது சமயங்களில் மாபெரும் ஆளுமைகளின் முத்திரைகளாகவும் திகழ்கின்றன. சில பிரபலங்களை அவர்களின் முகம், ஆடை, மற்றும் முழுத் தோற்றம் எதுவுமில்லாமலேயே, அவர்களின் நிழல் வடிவத்தை வைத்தே நம்மால் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். அந்த அளவுக்கு அவர்கள் நம்மை பாதித்திருக்கிறார்கள்.
உதாரணமாக, சினிமா துறையில், சார்லி சாப்ளின். அவரின் அந்தத் தொப்பி, கையில் வளைந்ததொரு கைத்தடி, சற்றே பெரிய காலணிகள். உலகையே சிரிக்க வைத்த இந்த மனிதனை அடையாளம் காண அவர் முகமோ, சிரிப்போ நமக்குத் தேவைப்படுவதிவில்லை. சினிமா வரலாற்றின் மிகப் பெரிய நிழல் இவருடையது!
தொங்கு சதை கொண்ட முகம், தடித்த உதடுகள், சற்றே பெரிய தொப்பையுடன் பக்கவாட்டில் தெரியும் நிழலுரு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்குக்குச் சொந்தமானது. மிரட்டலான த்ரில்லர் படங்களின் பிதாமகன். தன் படங்களின் தொடக்கத்திலேயே தன் சொந்த நிழலுருவத்தை ஒரு லோகோவாகப் பயன்படுத்தி, திரையுலகில் நிழலுரு எனும் கலைக்கே ஒரு தனி அந்தஸ்தை உருவாக்கியவர்.
அடுத்து இசைத்துறையின் பேரரசன் மைக்கேல் ஜாக்சன். ஒரு கையில் கிளவுஸ், தலையில் சாய்ந்த தொப்பியுடன் ஒற்றைக் காலில் விரல்களை ஊன்றி நிற்கும் (Toe Stand) அவரது போஸை அடையாளம் காணமுடியாத ஆட்களே இருக்கமுடியாது. புவி ஈர்ப்பு விசையையே தன் நடனத்தால் கேள்விக்குள்ளாக்கியவர். உலகை மிக ஈர்த்த நிழல் இவருடையது.
இந்த வரிசையில் சினிமா, அரசியல் என உலகெங்கும் ஏராளமான நிழலுருக்கள் உள்ளன. இந்தியாவுக்கு வந்தால் முதலில் மகாத்மா காந்தியின் உருவம். கையில் நீண்ட தடி, வட்டக் கண்ணாடி, அரையாடை. அமைதி மற்றும் அகிம்சையின் உலகளாவிய சின்னமாக அவரது நிழலுரு பார்க்கப்படுகிறது.
இன்னும் சில உருவங்களை இணைத்திருக்கிறோம். அடையாளம் தெரிகிறதா பாருங்கள்.
இவர்களின் நிழல்கள் எல்லாம் இவ்வளவு ஆழமாக நம் மனதில் பதிந்திருப்பதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் தோற்றம் மட்டுமேயல்ல; அவர்கள் தங்களின் துறையில் தங்கள் உழைப்பால், திறமையால் செதுக்கிய 'ஆளுமை' (Personality)தான். நம் நிழலும் ஒருநாள் வரலாற்றில் பதிய வேண்டுமெனில், நம் நிஜங்கள் முதலில் உழைப்பால் நிரம்ப வேண்டும்!