மூத்த நடிகரும் இயக்குநருமான கொச்சின் ஹனீஃபா மறைந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2010-ஆம் ஆண்டு, பிப்ரவரி 2-ம் கொச்சின் ஹனீஃபா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மலையாளம் கலந்த அவரின் தமிழ்ப் பேச்சும், டி.எஸ்.பாலையா பாணியிலான நடிப்பும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துவிடத் தமிழ்நாட்டிலும் முக்கிய நடிகராகிவிட்டார். ஹனீபா இயக்கிய மலையாளப் படமான "மூணு மாசங்களுக்கு மும்பு" பெருவெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கலைஞர் கருணாநிதியின் பூம்புகார் நிறுவனம் வாங்கியது. படத்தைப் பார்த்த கருணாநிதி, அந்தப் படத்தின் கதையைத் தமிழுக்கு ஏற்ற வகையில், மாற்றி வசனமும் எழுதினார். கொச்சின் ஹனீஃபாவையே படத்தை இயக்கவும் கருணாநிதி கூறி விட்டார். அந்தப் படம்தான் 'பாசப்பறவைகள்'. சிவகுமார், லட்சுமி, மோகன், ராதிகா இவர்கள் நடிப்பில் வெளியானது. இப்படித்தான் ஹனீபா தமிழுக்கு வந்தார். அருமையான குடும்பக் கதையாக இந்த படம் அமைந்தது. இளையராஜா இசையில், 'தென் பாண்டித் தழிழே என் சிங்காரக்குயிலே' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த 'எந்திரன்' திரைப்படம், கொச்சின் ஹனீஃபாவின் மறைவுக்குப் பிறகு வெளியானது. ஷங்கர் இயக்கிய அந்தப் படத்தில் அவர் ஒரு போக்குவரத்துக் காவலராக நடித்திருந்தார். 'அந்நியன் படத்திலும் நடித்து ஹனீஃபா அசத்தியிருப்பார். ஷங்கர் இயக்கிய 'சிவாஜி' படத்தில் வில்லன் சுமனிடம் 'நீங்க ஆதிசேஷன்னா, நான் அல்சேஷன்' என்று அடிபணியும் அமைச்சராக வந்து, ரஜினியிடம் கத்திக்குத்து வாங்கிகொண்டு 'ப்ரெய்னுக்கு ஒண்ணும் ஆகலையே' என்று கேட்டு நடிப்பில் அசத்தியிருப்பார்.
கொச்சின் ஹனீஃபா மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களிலும், தமிழில் 80 படங்களிலும் நடித்துள்ளார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் இத்தனை ஆண்டுக்காலம் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், இதுதான் உண்மை. கொச்சின் ஹனீஃபா இறந்து 16 ஆண்டுகளுக்குப் பின்னரே தற்போது, அவரது குடும்பத்தினர் புது வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர்.
கொச்சின் ஹனீஃபாவுக்கு ஃபாசிலா (Faseela) என்ற மனைவியும் ஷாஃபா (Safa ) மற்றும் மார்வா (Marwa) ஆகிய இரட்டைப் பெண் குழந்தைகளும் உண்டு. கொச்சின் ஹனீஃபா இறந்த போது, அவரது பெண் குழந்தைகளுக்கு நான்கு வயதே ஆகியிருந்தது. இவரது, மனைவி ஃபாசிலாவுக்கு சொந்த ஊர் தலச்சேரி. கணவர் இறந்த பிறகு, உறவினர்கள் சொந்த ஊரான தலச்சேரிக்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், தனது கணவரின் சொந்த ஊரான கொச்சியிலேயே மீதி காலத்தைக் கழித்துவிடக் கருதி, அவர் இடம் பெயரவில்லை. கொச்சின் ஹனீஃபாவுக்கு தனது தந்தை அபி முகமதுவின் பெயரில் கொச்சியில் வீடு கட்ட வேண்டுமென்ற லட்சியம் இருந்தது. ஆனால், அந்த லட்சியம் நிறைவேறாமலேயே திடீரென மறைந்துவிட்டார்.
இந்த நிலையில், கொச்சியில் சொந்த வீடு கட்டி கணவரின் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார் கொச்சின் ஹனீஃபாவின் மனைவி ஃபாசிலா. புதிய வீட்டுக்கு 'Cochin Haneefa's AB Manzil' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மூன்று மாடி கொண்ட இந்த வீட்டில் 5 படுக்கை அறைகள் உள்ளன. புதிய வீட்டில் பால் காய்ச்சி, கொச்சின் ஹனீஃபாவின் குடும்பத்தினர் குடியேறினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் திலீப்பும் பங்கேற்றார்.
கொச்சின் ஹனீஃபாவின் மனைவி ஃபாசிலா கூறுகையில், ''இந்த வீட்டைக் கட்ட பல தடைகள் இருந்தன. அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்டு, கட்டியுள்ளேன். எனது கணவரின் சேமிப்பிலிருந்து மட்டுமே இந்த வீட்டைக் கட்டியிருக்கிறேன். யாரிடமும் 5 பைசா நான் வாங்கவில்லை. எனது கணவர் சுயமரியாதைக்காரர். யாரிடமும் தலை குனிந்து , கை நீட்டி நிற்க மாட்டார். எனது கணவரின் நண்பர் திலீப்புக்கு அவரது குணம் தெரியும். இதனால், எனது கணவர் பயன்படுத்தி வந்த இன்னோவா காரை,சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்குப் பயன்படுத்தி எங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க திலீப் ஏற்பாடு செய்தார். எங்களது கடின காலத்தில் நடிகர் திலீப்தான் உதவிகரமாக இருந்தார்'' என்றார்.