சென்ற மாதம் திரையரங்குகளில் வெளியான ‘மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்’ கொஞ்சம் விரைவாகவே அமேசான் ஓடிடியில் வெளியாகிவிட்டது. வாரயிறுதிகளில் குழந்தைகளோடு பார்க்க ஏற்ற கலர்ஃபுல்லான ஆக்ஷன் படமாக இது இருக்கும். அதே நேரம், அதே குழந்தைகளின் அப்பாக்கள், குழந்தைகளாக இருந்த போதே ஹி-மேனை நன்கறிவார்கள். அவர்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளும், இந்தப் படத்துக்காக விழித்துக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது.
90-களில் தூர்தர்ஷனின் ஞாயிறு காலை நேரத்தை ஆக்கிரமித்த அந்த எட்டர்னியாவின் மாயாஜால உலகத்தை 90’ஸ் கிட்ஸ் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. டிசி காமிக்ஸையும், மார்வெல் காமிக்ஸையும் அறிந்துகொள்வதற்கு முன்னால், இந்த மாஸ்டர்ஸ்தான் அவர்களுக்கு சூப்பர் ஹீரோக்களாக இருந்தார்கள்! "கிரேஸ்கல் கோட்டையின் மாய சக்தியே!" என்ற அந்த ஒற்றைக் கம்பீரக் குரல் ஒலிக்கும்போது, கூஸ்பம்ப்ஸ் பற்றிக்கொள்ளும். ஹீரோ தரப்பில் ஹி-மேன், டன்கன், டீலா, பயந்த சுபாவம் கொண்ட பச்சைநிறப் புலி, ஃபிஸ்டோ, ரேம்-மேன், வில்லன் தரப்பில் எலும்புக்கூடு முகம் கொண்ட மெயின் வில்லன் ஸ்கெலடர், ஈவிலின் என கதாபாத்திரங்கள் அனைத்தும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக வில்லன் ஸ்கெலடரின் முகமும், குரலும் உருவாக்கிய பயம் இன்னும் நமக்குள் இருக்கிறது.
1980-களில் பொம்மைகளாக (Action Figures) அறிமுகமாகி, காமிக்ஸ், அனிமேஷன் சீரியல்கள் என உலகெங்கும் வரவேற்பைப் பெற்ற 'மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்' (Masters of the Universe)தான், இப்போது இந்த நவீன லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
வில்லன் ஸ்கெலிடரின் (Skeletor) கொடூரத் தாக்குதலால், எட்டர்னியா அழிவின் விளிம்பில் இருக்கிறது, மன்னர் சிறைபிடிக்கப்படுகிறார். அப்போது சிறுவனாக இருக்கும் இளவரசன் ஆடம் (Prince Adam) பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அவனோடு The power of Grayskull fort எனப்படுகிற மாயசக்தி கொண்ட அவனது வாளும் அனுப்பப்படுகிறது. 15 ஆண்டுகள் வரை தன் உண்மையான பின்னணி தெரியாமல், பூமியில் ஒரு சாதாரண மனிதனாக வளரும் ஆடம், தொலைந்து போன அவனது மாய வாளையும் தேடிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் வாள் கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணரும், எட்டர்னியா வீராங்கனை டீலா பூமிக்கு வந்து அவனை மீண்டும் அழைத்துப் போகிறாள். அங்கே பழைய வீர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு, ஆடம், 'ஹீ-மேன்' அவதாரமெடுத்து, ஸ்கெலடரின் பிடியிலிருந்து மீண்டும் எட்டர்னியாவை மீட்கும் போராட்டமே இப்படத்தின் கதை.
எட்டர்னியாவை மிகச் செறிவான, கலர்ஃபுல்லான விஷுவல்களாக வடிவமைத்திருக்கிறார்கள். 'கேஸில் கிரேஸ்கல்' (Castle Grayskull) கோட்டையின் கம்பீரமும், சண்டைக் காட்சிகளும் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
'மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் (2026)' என்பது வெறும் சூப்பர் ஹீரோ திரைப்படம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் சிறுவயதுக் கனவுகளுக்குத் தரப்பட்ட நவீன வண்ணம். படம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்று தெரியவருகிறது. ஆனாலும், ஓடிடியில் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாய்ப்பிருக்கிறது.