Titan ad by Prakash varma 
சினிமா

பிரகாஷ் வர்மா: 30 விநாடிகளில் ஒரு சினிமா #Ad films

ஒரு நல்ல விளம்பரம் என்பது மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து ரசிக்கும்படியான, உணர்வுப்பூர்வமான ஒரு நல்ல கதையாகவும், அந்த விற்பனைப் பொருள் அந்தக் கதையின் இயல்பான ஒரு பகுதியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆதி தாமிரா

சமீபத்தில் வெளியான ‘துடரும்’ மலையாளப் படத்தில், வில்லனாக நடித்திருந்தவர் பிரகாஷ் வர்மா. தேர்ந்த நடிகரான லாலேட்டனுக்கு, இணையாக மிரட்டலாக நடித்திருந்தார் அவர். பலரும் அவரை ஒரு புதுமுக நடிகர் என்றே நினைத்தனர். ஆம், பிரகாஷ் வர்மா நடிப்புக்குப் புதுமுகம்தான். ஆனால், அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கேமிராவுக்குப் பின்னால் கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர். ஓ, சினிமா இயக்குநரா என்று ஆச்சரியப்பட்டுப்போய், அவரது ஃபிலிமோகிராபியைத் தேடிப் பார்த்தால் அப்படி ஒன்று கூட கிடைக்காது. ஏனென்றால் அவர் இயங்கிக் கொண்டிருப்பது சினிமாவில் அல்ல, விளம்பரப்பட உலகில்!

Prakash Varma in Thudarum

பிரகாஷ் வர்மா தனது சினிமா மொழியை லோகிததாஸ் மற்றும் ப்ளெஸ்ஸி போன்ற இயக்குநர்களிடம், உதவி இயக்குநராக இருந்த காலத்தில் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். ஒரு விளம்பரத்தை இயக்கும்போதும் அதை 30 அல்லது 60 விநாடி விளம்பரமாக அவர் நினைப்பதில்லை; அது ஒரு திரைப்படக் காட்சியாகவே அவருக்குத் தோன்றுகிறது. கதை சொல்லலுக்கு இலக்கணம் இருக்கிறது, ஆனால் விதிகள் இல்லை என்பது அவரது கருத்து. செலிபிரிட்டிகளை வைத்து விளம்பரம் எடுப்பதைப் பற்றி, அவர் கூறும் கருத்து சுவாரசியமானது. ஒரு நட்சத்திரம் வந்து "இந்தப் பொருளை வாங்குங்கள்" என்று சொல்வது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும், அதனால் அந்த பிராண்டுக்கும் பெரிதாக பயன் இல்லை. அதற்குப் பதிலாக, அந்த மனிதரின் தனிப்பட்ட குணம், உறவு, நகைச்சுவை உணர்வு போன்றவற்றைக் கதைக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் விளம்பரம் காண்பவரின் ரசனையைக் கிளறி, அவர்களின் நினைவில் என்றைக்கும் நிற்கும் என்கிறார்.

ஃபகத் ஃபாசில்- நஸ்ரியா நடித்த கேமரி ஐஸ்கிரீம் விளம்பரங்களில், ’காதல் பல வடிவங்கள் கொண்டது’ என்ற கருத்தை அந்த நடிகர்களின் நிஜ வாழ்க்கை உறவின் இயல்போடு இணைத்துக் காட்சிப்படுத்தினார். தம்பதிகளுக்கிடையிலான சிறிய சண்டைகள், அமைதிகள், சமரசங்கள் ஆகியவையே காதலின் வடிவங்கள் என்று காட்டினார். அதனால் அந்த விளம்பரங்கள், ஒரு விளம்பரத்தைப் போல அல்லாமல், அழகான ரொமாண்டிக் குறும்படங்களைப் போல மக்களை மிக எளிதாகச் சென்றடைந்தன.

Vodofone ad by Prakash Varma

வோடபோனுக்காக இவர் உருவாக்கிய ஸூஸூ வெண்பொம்மை போன்ற உருவங்கள், ஹட்ச் நெட்வொர்க்குக்காக பக் வகை நாய்களைக் கொண்டு உருவாக்கிய விளம்பரங்கள் போன்றன மிகவும் புகழ்பெற்றவை. ஏர் இண்டியா, பஜாஜ், கேட்பரி சாக்லெட்ஸ், இண்டியன் ரயில்வேஸ், நெட்பிளிக்ஸ், ஆப்பிள் உட்பட மிகப்பெரிய பிராண்டுகளுக்காக இவர் விளம்பரப் படங்களை உருவாக்கியிருக்கிறார். பெரிய பிராண்டுகள் பல இவருக்காகக் காத்திருக்கின்றன. பிரஹலாத் காக்கர், ராஜீவ் மேனன், ராம் மத்வானி, வினில் மாத்யூ போன்ற இந்தியாவின் தலைசிறந்த விளம்பரப்பட இயக்குநர்களுள், பிரகாஷ் வர்மாவுக்கும் முக்கியமான ஓரிடம் உண்டு.

"ஒரு நல்ல விளம்பரம் என்பது பொருளை மட்டுமே பிரதானப்படுத்தித் தகவல்களைச் சொல்லும் ஒரு கருவியாக இருக்கக்கூடாது. மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து ரசிக்கும்படியான, உணர்வுப்பூர்வமான ஒரு நல்ல கதையாகவும், அந்தப் பொருள் அந்தக் கதையின் இயல்பான ஒரு பகுதியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்."

இந்தப் பார்வையே பிரகாஷ் வர்மாவின் பெரும்பாலான விளம்பரங்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை என்பதை நம்மால் உணரமுடிகிறது.