The Odyssey 2026 
சினிமா

The Odyssey 2026: படம் பார்க்கும்முன் படித்துவிடுங்கள்!

ஒடிஸி போன்ற கிரேக்கப் புராணக்கதைகள், நமது மகாபாரதம், ராமாயணம் போன்ற இந்தியப் புராணக்கதைகளுக்கு ஒப்பானவை. அளவிலும் மிகப் பெரியவை. ஒரு சினிமாவின் கதையை முன்பே தெரிந்துகொள்வது சரியல்ல என்றாலும், அது இத்தகைய சினிமாக்களுக்குப் பொருந்தாது.

ஆதி தாமிரா

வரும் ஜூலை 17ம் தேதி உலகெங்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிஸி’ திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டிய எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. டிராய், ஒடிஸி போன்ற கிரேக்கப் புராணக்கதைகள், நமது மகாபாரதம், ராமாயணம் போன்ற இந்தியப் புராணக்கதைகளுக்கு ஒப்பானவை. அளவிலும் மிகப் பெரியவை. ஒரு சினிமாவின் கதையை முன்பே தெரிந்துகொள்வது சரியல்ல என்றாலும், அது இத்தகைய சினிமாக்களுக்குப் பொருந்தாது. ஏற்கனவே பல வடிவங்களில் இவை கிடைக்கின்றன என்பது ஒருபுறம் என்றால், இந்தக் கதைகளின் அடிப்படை தெரியாமல் போனால், தலை எது, வால் எது என்பது புரியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. என்னதான் நோலன் ஒரு தனித்துவமான ஸ்கிரிப்டை உருவாக்கியிருப்பார் என்பது நிச்சயம் என்றாலும், ஓரளவுக்குக்s கதையைத் தெரிந்துகொள்வது சினிமாவை இன்னும் ரசிக்க உதவிடும் என்பதில் சந்தேகமில்லை.

தலைசிறந்த உலக இலக்கியங்களுள் ஒன்றாக, கிரேக்கக் கவிஞர்  ஹோமரின் 'தி ஒடிஸி' (The Odyssey) பார்க்கப்படுகிறது. இதன் நாயகன் ஒடிஸியஸ்! இந்த ஒடிஸியஸ் யார்?

கிரேக்கப் புராணங்களின்படி, டிராய் (Troy) எனப்படுவது மகாபாரதம் போன்ற பல கிளைக் கதைகளின், பல கதாபாத்திரங்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதன் கதைப்படி, டிராய் எனும் பலமிக்க கோட்டை நகரத்தை மையமாகக் கொண்டு டிரோஜன்களின் ராஜ்யம் அமைந்திருக்கிறது. எதிரே இருப்பது கிரேக்கப் பகுதிகளிலிருக்கும் கூட்டு ராஜ்யம்! அதன் பகுதிகளுள் ஒன்றான ஸ்பார்ட்டாவின் மன்னன் மெனிலாஸின் (Menelaus) மனைவி, ராணி ஹெலனை, அவளின் அழகில் மயங்கி டிராய் நகரத்து இளவரசன் பாரிஸ் கவர்ந்து சென்றுவிடுகிறான். இதனால் கோபமடைந்த மொத்தக் கிரேக்க மன்னர்களும் ஒன்றிணைந்து, ஹெலனை மீட்பதற்காக டிராய் மீது போர் தொடுக்கிறார்கள். அவர்களுள் ஒருவன்தான் இதாகாவின் அரசன் ஒடிஸியஸ்! பத்து ஆண்டுகள் நீடித்த அந்தப் பெரும்போரால், இரு அணிகளுமே பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன. ஏராளமானோர் கொல்லப்படுகிறார்கள். அதன் முடிவில், கிரேக்கர்கள் ஒரு தந்திரத்தைக் கையாள்கிறார்கள். ஒரு பிரம்மாண்டமான மரக்குதிரையை (Trojan Horse) உருவாக்கி, அதற்குள் தங்களது சிறந்த வீரர்களை ஒளித்து வைத்துவிட்டு, போரில் தோற்றுப் பின்வாங்குவதைப் போல நடிக்கிறார்கள். இந்த யோசனையே ஒடிஸியஸினுடையது என்று சொல்லப்படுகிறது. டிராய் வீரர்கள் அந்த மரக்குதிரையைத் தங்களது வெற்றிப் பரிசாகக் கோட்டைக்குள் இழுத்துச் செல்கிறார்கள். அன்றிரவு, குதிரைக்குள் இருந்த கிரேக்க வீரர்கள் வெளியே வந்து கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட, கிரேக்கப் படை டிராய் நகரத்தை முற்றிலும் அழித்துச் சாம்பலாக்குகிறது. இதுவே புகழ்பெற்ற டிராயின் போர்க் கதையாகும்.

இவற்றை நாம் பிராட் பிட் நடித்து 2004ல் வெளியான சினிமா, டிராய் (Troy) மற்றும் 2018ல் வெளியான நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸான டிராய்: ஃபால் ஆஃப் அ சிட்டி (Troy: Fall of a City -2018) போன்ற பல வடிவங்களிலும் காண முடியும்.

அந்த டிராய் போரின் முடிவிலிருந்துதான் ஹோமரின் 'தி ஒடிஸி' கதை தொடங்குகிறது. போர் முடிந்து மற்ற கிரேக்க வீரர்கள் தத்தமது நாடுகளுக்குத் திரும்பத் தொடங்குகிறார்கள். ஒடிஸியஸ் தன் சொந்த நாடான 'இதாகா'வை (Ithaca) நோக்கித் தனது படையினருடன் கடல் வழியே பயணமாகிறான். டிராய் போரில் வென்ற பெருமிதத்தில் இருக்கும் ஒடிஸியஸின் மீது, கடல் கடவுளான பொசைடன் (Poseidon) தன் மகனைத் தாக்கியதற்காகக் கோபம் கொள்கிறார். இதன் விளைவாக, ஒடிஸியஸின் கடல் பயணம் சாபங்களால் நிறைந்து, திசைமாறி, கடினமான ஒன்றாகிவிடுகிறது. ஒற்றைக் கண் அரக்கனான சைக்ளோப்ஸ் (Cyclops), இசையால் மயக்கி உயிரைக் குடிக்கும் சைரன்கள் (Sirens), கடல் அரக்கிகள் எனப் பல ஆபத்துகளைக் கடக்கிறான் ஒடிஸியஸ். வழியில் தனது ஒட்டுமொத்தப் படையினரையும், கப்பல்களையும் இழந்து, பல தீவுகளில், பல விநோத சக்தி கொண்டோரிடம் பல ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடக்கிறான். மறுபுறம் சொந்த நாடான இதாகாவில் அவனது மனைவி பெனிலோப்பும், மகன் டெலிமாக்கஸும் அவன் உயிரோடு வருவான் என்று இருபது ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். இறுதியில், அனைத்து சோதனைகளையும் வென்று, தன் நாட்டுக்குத் திரும்பும் ஒடிஸியஸுக்கு, தன் மனைவியை அடையத் துடிக்கும் துரோகிகள் வடிவில் அங்கும் பிரச்சினை காத்திருக்கிறது. எப்படி அவர்களையும் வீழ்த்தி, தன் அரியணையை மீட்கிறான் என்பதே ஒடிஸியின் முடிவு.

மகாபாரதத்தில் கிருஷ்ணன், கர்ணன், அர்ஜுனன் போன்றோருக்கென்று தனிக்கதைகள் இருப்பது போல, டிராயின் ஸ்பின் -ஆஃப் என்று கருதத்தக்க வகையில் ஒடிஸியஸின் கதை அமைந்திருக்கிறது. போலவே, கிரேக்கர்கள் தரப்பிலிருந்த மாவீரன் அக்கிலிஸ்க்கு (Achilles) தி இலியாட் எனும் கதையும், டிராயின் வீழ்ச்சிக்குப் பின்னர், டிரோஜன் தரப்பில் உயிர்தப்பிய முக்கியமான வீரன் ஏனிஸ்க்கு (Aeneas) தி ஏனிட் எனும் கதையும் உண்டு. போலவே டிராயின் முக்கியமான கதாபாத்திரங்களான ஹெக்டர் (Hector), பாரிஸ் (Paris), ஹெலன் (Helen), மெனிலஸ் (Menelaus) போன்றோருக்கும் தனிப்பட்ட கதைகள் இருந்தன, காலத்தால் அவை அழிந்துபோய்விட்டன என்றும் கருதப்படுகிறது.

நோலன் நிச்சயமாக, ஒடிஸியில் இருக்கும் ஃபேண்டஸி அம்சங்களுக்காக இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கப் போவதில்லை. அதைத் தாண்டியும் உணர்வுப்பூர்வமான, தத்துவப்பூர்வமான ஒரு கதையைச் சொல்ல முயற்சிப்பார் என நிச்சயம்! காத்திருப்போம்!