Diego Maradona and Boby Chemmanur 
சினிமா

ஹனி ரோஸிடத்தில் பாபி செம்மனுார் பகிரங்க மன்னிப்பு... பின்னணி என்ன?

கடந்த 2012ம் ஆண்டு கால்பந்து ஜம்பவான் மரடோனாவை செம்மனூர் ஜூவல்லர்ஸின் பிரான்ட் அம்பாசிடராக பாபி அறிவித்தார். கண்ணூருக்கு மரடோனாவை அழைத்தும் வந்தார்.

எம். குமரேசன்

மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட, தொழிலதிபர் பாபி செம்மனூர் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகையிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

மலையாள நடிகை ஹனி ரோஸ் கண்ணூரில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற போது, தொழிலதிபர் பாபி செம்மனுார் தன்னிடத்தில் தவறாக நடந்ததாகவும், தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதைய, கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை புகார் சென்றது. கொச்சி போலீசில் ஹனிரோஸ் அளித்த புகாரையடுத்து, சிறப்புத் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் கேரளா மட்டுமின்றி பல நாடுகளில் 'செம்மனுார் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வரும் பாபி செம்மனுார் கைது செய்யப்பட்டார். மனித நேயமிக்க செயல்களுக்காக அறியப்பட்ட பாபி கைதானது கேரளா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொச்சி நீதிமன்றத்தில் பாபி செம்மனுாரின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, காக்கநாடு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். பின்னர், கேரள உயர்நீதிமன்றம் பாபிக்கு ஜாமின் வழங்கியது. எனினும், பாபி செம்மனூர், சிறையில் இருந்து வெளியேற மறுத்தார். 'சக கைதிகளுக்கு ஆதரவாக, நானும் சிறையில் இருந்து விடுதலை ஆக மாட்டேன்' என்று கூறிப் பிடிவாதம் பிடித்தார். ஆனால், 'இதுவெல்லாம் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்' என்று பாபியின் வழக்கறிஞர்கள் அவருக்கு எடுத்துரைத்தனர். இதையடுத்து, காக்கநாடு சிறையில் இருந்து பாபி வெளியேறினார். கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த சம்பவம் நடந்தது.

honey rose

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடிகை ஹனி ரோஸிடத்தில் பாபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக, தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ''பொதுவாக நான் எல்லோரிடத்தில் மரியாதையாகவே நடப்பேன். ஒவ்வொருவரையும் அன்புடனும் கருணையுடனும்தான் நான் அணுகுவேன். என்னால், முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவியாகவே இருப்பேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைக்க கூடியவன் அல்ல. இந்த விவகாரத்தில் என்னால் விளைவிக்கப்பட்ட துன்பங்களுக்காக ஹனி ரோஸ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது வார்த்தைகளுக்கும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளுக்கும் நான் முற்றிலும் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மனம் திறந்து ஹனி ரோஸிடத்தில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது, மன்னிப்பை ஏற்றுக் கொண்டு வழக்கை அவர் வாபஸ் பெறுவார் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பாபி செம்மனுார் மன்னிப்பு கேட்டது குறித்து , இதுவரை ஹனி ரோஸ் எந்த பதிலும் அளிக்கவில்லை.

யார் இந்த பாபி செம்மனூர்?

திருச்சூரில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் பாபி. உழைப்பால் உயர்ந்து பாபி செம்மனூர் இன்டர்நேஷனல் குழுமத்தின் தலைவராக உள்ளார். லைஃப் விஷன் என்ற அறக்கட்டளையை நிறுவி பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார். ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கடந்த 2014ம் ஆண்டு காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை மாரத்தான் ஓடியுள்ளார். 2021ம் ஆண்டு கேரளாவின் சிறந்த தொழிலதிபர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை செம்மனூர் ஜூவல்லர்ஸின் பிரான்ட் அம்பாசிடராக அறிவித்தார். கண்ணூருக்கு மரடோனாவை அழைத்தும் வந்தார். நகைக்கடை தவிர, ஹோட்டல்கள், தீம் பார்க்குகள், தேயிலைத் தோட்டங்கள் சொந்தமாக உள்ளன. இவரது, சொத்து மதிப்பு 800 கோடி வரை இருக்கும்.