Alka Yagnik Welco
சினிமா

காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்ட கானக்குயில்! #Alka Yagnik

பல இனிமையான பாடல்களைப் பாடி, இந்திய ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட பாடகி , அல்கா யாக்னிக்கு காது கேளாமை பாதிப்பால் அவதிப்படுகிறார். அவருக்கு என்ன நடந்தது?

எம். குமரேசன்

பிரபல இந்திப்ப் பாடகி அல்கா யாக்னிக் (Alka Yagnik) பாடிய பாடல்களை கேட்காத இந்தியர்களே இருக்க முடியாது. கடந்த 2022 ம் ஆண்டில் யூடியூப்பில் மட்டும் இவரது பாடல்கள் மொத்தம் 15.3 பில்லியன் பார்வைகளை கடந்துள்ளன. இது நாள் ஒன்றுக்கு 42 மில்லியன் ஸ்ட்ரீம்கள் ஆகும். கடந்த 2020-ஆம் ஆண்டில் 16.6 பில்லியன், 2021-ஆம் ஆண்டில் 17.7 பில்லியன் ஸ்ட்ரீம்களைப் பெற்று, உலகளவில் யூடியூப் தளத்தில் அசைக்க முடியாத பாடகியாக அல்கா உள்ளார். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ், பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களை அல்கா யாக்னிக் பின்னுக்குத் தள்ளி, இத்தகைய அசாத்திய சாதனையை படைத்துள்ளார்.

கொல்கத்தாவில் பிறந்த அல்காயாக்னிக், குமார் சானு, உதித் நாராயண் போன்ற பாடகர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவற்றுள், Ae Mere Humsafar, Kuch Kuch Hota Hai, Chura Ke Dil Mera, Baazigar O Baazigar, Tip Tip Barsa Paani, Ladki Badi Anjani Hai, Taal Se Taal போன்ற சூப்பர் ஹிட் பாடல்களும் அடங்கும். இப்படிப் பல அருமையான பாடல்களைப் பாடி இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவுள்ள இசைப்பிரியர்கள் மனதைக் கொள்ளை கொண்ட, அல்கா யாக்னிக், இனிமேல், தான் பாடிய பாடல்களைக் கூட கேட்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதுதான் சோகத்திலும் சோகம். ஆம்... அப்படி ஒரு சூழலுக்கு வாழ்க்கையும் விசித்திர நோயும் அவரைத் தள்ளியுள்ளது.

President confers Padma Bhushan Alka Yagnik

மத்திய அரசு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவித்திருந்தது. அல்காவுக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வீல் சேரில்தான் அல்கா வந்திருந்தார். விருதப் பெற அல்கா சென்ற போது, அவரை பெண் பாதுகாவலர் ஒருவர் கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்து வந்தது, 'அல்காவுக்கு என்ன ஆச்சு?' என்கிற கேள்வியை எழ வைத்தது. இந்த விருதைப் பெற்ற பிறகு, தனது இன்ஸ்டா பக்கத்தில், உணர்வூபூர்வமாக அல்கா கூறியிருந்ததாவது, ''கடந்த சில வருடங்களாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன். எனது, உடல் நிலை அத்தகைய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில் உங்களின் ஆதரவும், பிரார்த்தனையும் மட்டுமே எனக்கு உறுதுணையாக இருக்கிறது. எனது அர்த்தமுள்ள வாழ்க்கையின் பயனாக எனக்குக் கிடைத்த இந்த கௌரவமான விருதைப் பெற நோயின் தாக்கத்தை மீறிதான் வந்துள்ளேன்.

எனக்காக மட்டுமல்ல, எனது ரசிகர்களுக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இந்த விருது எனது உழைப்புக்காக மட்டும் வழங்கப்பட்டது அல்ல. என்னுடன் பயணித்த அனைவருக்குமானது. நோய்க் கொடுமையை தாண்டி, வழக்கமான, வாழ்க்கைக்குத் திரும்ப முயன்று கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த விருதை அளித்து கௌரவித்த குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி'' என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

அல்காவுக்கு என்ன ஆச்சு?

கடந்த 2024ம் ஆண்டு அல்காவுக்கு Sensorineural hearing loss (SNHL) என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, உள் காதிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், 'சென்சோரினியூரல்' (Sensorineural) வகை செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, நிரந்தரமான செவித்திறன் இழப்பு என்றும் கூறுகிறார்கள். இந்த பாதிப்பை முழுமையாகச் சரிசெய்ய முடியாது. எனினும், செவித்திறன் கருவிகள் (hearing aids) மூலம் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்ள முடியும். இந்தப் பிரச்னை காரணமாக அல்கா யாக்னிக் தற்போது பாடுவதை நிறுத்தி விட்டார். பொது மேடைகளிலும், இசைக் கச்சேரிகளிலும் கூட பங்கேற்பதில்லை. எனினும், இப்போதும் அவரை பல இயக்குநர்கள் பாடல்களைப் பாடுவதற்காக அணுகுவதாகவும், அவர்களுக்கு தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அல்கா யாக்னிக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தற்போது, அல்காவுக்கு 60 வயதாகிறது.