”உறுப்பினர்களுக்காகத்தான் சங்கமே தவிர, சங்கத்துக்காக உறுப்பினர்கள் இல்லை. நான் வாடகைக்கு சமையல் பாத்திரங்களைக் கொடுக்கும் ஒரு கடையை நடத்தி வருகிறேன். சமையல் வேலை செய்பவர்கள்தான் என்னுடைய வாடிக்கையாளர்கள். அவர்களை நம்பித்தான் எனது தொழில் நடக்கிறது. ஆனால், என்னவோ என்னால்தான் அவர்களுடைய தொழில் நடப்பது போலவே, ’முதலாளி, முதலாளி’ என்று என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். காரணம் என்னிடமிருந்து கிடைக்கும் சொற்ப டிப்ஸ் பணம்.
ஒரு நாள் ஒரு சமையல்காரர், என்னிடம் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய், ஒரு விசேஷ நிகழ்ச்சியில் சமைத்துக் கொடுத்துவிட்டு மறுநாள் கொண்டு வந்து ஒப்படைத்தார். ஆனால், அவருக்குச் சேர வேண்டிய சமையல் கட்டணத்தை வாங்கிக் கொண்டாரே தவிர, எனக்கான வாடகைப் பணத்தை வாங்கித் தரவில்லை. அவரைக் கேட்டதற்கு ’எப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாம், நாளைக்கு எனது பெயர் அல்லவா கெட்டுப் போகும்? உடனே வாங்க போகலாம்!’ என்று பெரிய நியாயவான் போல கஸ்டமரைப் பார்க்க என்னையும் அழைத்துப்போனார். அவரை உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியே காத்திருந்தேன். உள்ளே போன சில நிமிடங்களில், வெளியே ஓடி வந்தார் சமையல்காரர். அவசரமாக ஒரு காலி குவாட்டர் பாட்டில் தேவைப்படுகிறது என்று தேடிக் கொண்டிருந்தார். அதாவது அந்த கஸ்டமர் வைத்திருந்த முழு பாட்டில் மதுவில் இருந்து, பரிசாக கால்வாசி பெறுவதற்கான போராட்டம் அது. ’எனது கட்டணத்தைப் பற்றிக் கேட்டாயா’ என்பதற்கு, ’அது எங்கே போய் விடப்படுகிறது, நம்ம அண்ணாச்சிதான், மெதுவாக வாங்கிக் கொள்ளலாம்’ என்று பதில் வந்தது. குவார்ட்டர் செய்யும் மாயம்! இப்படித்தான் நாங்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறோம்…’
இப்படிக் கலகலப்பாகப் பேசி அரங்கைச் சிரிக்க வைத்தார் எழுத்தாளர் ம.காமுத்துரை. கரு. பழனியப்பன் இயக்கத்தில், அவர் எழுதிய குதிப்பி நாவல் குக்கர் எனும் திரைப்படமாகவிருக்கிறது. அந்தக் குதிப்பி நாவலுக்கான அறிமுக விழா அரங்கம்தான் அது. தேனியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான இவர் கனா, பூமணி, கப்பலில் வந்த நகரம் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும்; கோட்டை வீடு, முற்றாத இரவொன்றில் போன்ற நாவல்களையும் எழுதியிருக்கிறார். திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு நூலக ஆணைக்குழு, ஆனந்தவிகடன் சிறந்த நாவலாசிரியர், சுஜாதா-உயிர்மை விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை தனது படைப்புகளுக்காக வென்றிருக்கிறார். இவர் எழுதிய நாவலான, குதிப்பிதான் தற்போது இயக்குனர் கரு. பழனியப்பன் இயக்கத்தில், காளி வெங்கட் நடிப்பில் குக்கர் எனும் திரைப்படமாக உருவாகவிருக்கிறது.
குதிப்பி என்றால் மதுரை வட்டார வழக்கில், கரண்டி என்று பொருள்படும். இந்த நாவலில் சாரதி என்ற முதன்மைக் கதாபாத்திரம் விசேஷங்களுக்கு சமைத்துக் கொடுக்கும் ஒரு சமையல்காரராக இருக்கிறார். அதே நேரம் அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானவர். அவர், அவரது சமையல் குழு, குடும்பம், பையன் என விரிகிறது இந்த கதை. முழுக்க மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சமையல் கலைஞனின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்த நாவல் 2019-ம் ஆண்டின் பிரபஞ்சன் நினைவுப் பரிசை வென்றிருக்கிறது.
கரு. பழனியப்பன் 2003-ல் வெளியான பார்த்திபன் கனவு படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை உட்பட ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக பார்த்திபன், விமல் நடிப்பில் 2013ல் வெளியான ஜன்னல் ஓரம் என்ற படத்துக்குப் பின்னர் அவர் படம் எதையும் இயக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த குக்கர் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் காளி வெங்கட், சங்கீதா, சுப்ரமணிய சிவா முதலானோர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இறுகப்பற்று, சிறை போன்ற தமிழ்ப் படங்களுக்கும், சர்வம் மாயா, ஹிருதபூர்வம் போன்ற மலையாளப் படங்களுக்கும் இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
அறிமுகவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் அமீர், கவிஞர் யுகபாரதி, நடிகர் காளி வெங்கட், ஸ்டாண்டப் ஆர்ட்டிஸ்ட் அலெக்ஸாண்டர் பாபு, எழுத்தாளர் ம.காமுத்துரை ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.