சினிமா

குருவைத் தொடர்ந்து சிஷ்யனும்... பாக்யராஜுக்கு இதய அஞ்சலி!

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கிய 'முந்தானை முடிச்சு ' படம் படைத்த சாதனைகள் வெளியே தெரியாதது. தென்னிந்திய சினிமாவில் பல சாதனைகளை இந்தப் படம் படைத்திருந்தது.

எம். குமரேசன்

தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு ஆளுமையை இழந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு, இயக்குநர் பாரதிராஜா மறைந்தார். இப்போது, அவர் வளர்த்தெடுத்த சிஷ்யப்பிள்ளை நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார். இயக்குநர் பாக்யராஜின் திடீர் மறைவை, தமிழ் திரையுலகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்றுதான் தெரியவில்லை.

கடந்த 2025ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் தனது பொன்விழா ஆண்டை பாக்யராஜ் கொண்டாடினார்.அந்த பாக்யராஜ் இப்போது, உயிருடன் இல்லை என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்று, (ஜூன் 27) காலை நடைப்பயிற்சி முடித்து, வீட்டுக்கு வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நம்மிடம் இருந்து பிரிந்துள்ளார்.

கடந்த 1953ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அவ்வப்போது, சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 1979ம் ஆண்டு 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ஒரு கை ஓசை, மௌனகீதங்கள், இன்று போய் நாளை வா என பேசப்படும் படங்களைத் தந்தார். 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி நடித்தார். உணர்வுபூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். திரைக்கதை அமைப்பதில் 'மன்னன் ' என்று பெயர் எடுத்தவர். இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து பாக்யராஜ் எடுத்த 'ஆக்ரி ரஸ்தா ' படமும் பெரும் ஹிட்டானதே, இதற்கு சான்று.

சிவாஜி கணேசனைப் போல கம்பீரமான ஆளுமையோ அல்லது ரஜினிகாந்த்தைப் போன்றதொரு அதிரடி நடிப்போ பாக்யராஜிடம் இருக்காது. உண்மையில், திரையரங்குகளுக்கு வரும் லட்சக்கணக்கான ஆண்களைப் போலவே, அவரும் ஒரு சராசரி தென்னிந்தியர் போலவே இருப்பார். இயல்பான தென்னிந்தியப் பேச்சுவழக்கைக் கொண்டவர். தனது 'டைமிங்' நகைச்சுவை உணர்வால் தொடர்ந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவரும் கூட. இவரது, படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளும் நம்மை சிந்திக்க வைக்கும் ரகமாகவே இருக்கும்.

பாக்யராஜ் படைத்த காவியங்களில் ஒன்று 'முந்தானை முடிச்சு' படம். இந்தப் படத்தின் மூலமாக முருங்கைக்காய்ப் பற்றி தமிழகத்தையே பேச வைத்தார். ஏவிஎம்நிறுவனத்தால் 30 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 4 கோடி வருவாய் ஈட்டியது. தென்னிந்திய திரைப்பட வசூலில் இது, புதிய சாதனை ஆகும்.

சென்னை நகரில் மட்டும் நான்கு திரையரங்குகள் மற்றும் தென்னிந்தியா முழுவதும் 10 இடங்களில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதான். திருவனந்தபுரத்தில் 'வெள்ளி விழா' கொண்டாடிய முதல் தமிழ்ப் படமும் இதுதான். இந்தப் படத்தின் இந்தி உரிமம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் மறு தயாரிப்பு உரிமைக்காக பெறப்பட்ட மிக அதிகபட்சத் தொகை இதுவாகும். சுருக்கமாகச் சொன்னால், 'முந்தானை முடிச்சு' கலகலப்பான அமோகமான வெற்றிப் படமாகும். இந்தப் படத்தில்தான் நடிகை ஊர்வசியும் தமிழில் அறிமுகமானார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்கள் விநியோகஸ்தர்களால் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் பாக்யராஜ், தான் முதன்முறையாகத் தயாரித்த 'தாவணி கனவுகள்' படத்தை 1.36 கோடிக்கு விற்று சாதித்தார். இத்தனைக்கும் படத்தின் திரைக்கதையையோ நடிகர்களையோ கூட அவர் முடிவு செய்திருக்கவில்லை. அந்தளவுக்கு விநியோகஸ்தர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். பாக்யராஜ் படங்களைப் பொறுத்தவரை, கதைகளம்தான் சூப்பர்ஸடார்.

திரைக்கதை எழுதுவது , நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு, இசையமைப்பாளர் என பல துறைகளிலும் வித்தகர் பாக்யராஜ். அவரை 'மனிதத் திரைப்படத் துறை' என்றே தாராளமாக அழைக்கலாம்!

காலம் போற்றும் கலைஞனுக்கு அஞ்சலிகள்!