ஆணாதிக்கமும், பழமைவாதமும் இன்னும் மண்டிக்கிடக்கும் ஒரு கிராமத்துச் சூழலில் கணவனை இழந்த ஒரு கைம்பெண் தன் இரண்டு மகன்களோடு வாழ்கிறாள். மிகுந்த போராட்டத்தோடு அவர்களை வளர்த்தெடுக்கிறாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு மறுமணத்தின் மீது ஒரு ஈடுபாடு வருகிறது. மூத்த பிள்ளைக்கு அப்போது 18 வயதிருக்கலாம், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கலாம். அவனது சம்மதம் இருந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்றவொரு மனநிலையில் இருக்கிறாள். ஆனால், அந்த வயதுக்கே உரிய முதிர்ச்சிக் குறைபாட்டில் இருக்கும் அவன், அதைத் தீவிரமாக மறுத்துவிடுகிறான். மிகுந்த வலியோடு அதைப் பொறுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தைக் கடக்கிறாள் அந்த பெண். ஆனால், அதே பையன் அடுத்த சில ஆண்டுகளில் கல்லூரிப்படிப்பு, வேலை என்று ஆனபிறகு, தான் தன் தாய்க்குச் செய்த தவறை உணர்கிறான். அதைச் சரி செய்ய முயற்சி செய்கிறான். இப்போது அந்தத் தாய்க்கு அதில் விருப்பமில்லை, அவள் தாம் அந்த வயதை கடந்து விட்டதாகக் கருதுகிறாள். ஆனாலும், எந்தக் காலமும் கடந்து விடவில்லை என்பதை அவளுக்கு புரிய வைத்து, தாயை மறுமணத்துக்கு சம்மதிக்க வைத்தானா, இந்தச் சமூகம் அவனை அதைச் செய்ய அனுமதித்ததா என்பதே படத்தின் கதை.
நிச்சயமாக இந்த 2026-லும் இப்படியான மறுமணக்கதைகளை பேசவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. 1856-ல் இந்து விதவைகள் மறுமணச்சட்டம் ஏற்றப்பட்டு, இந்தியாவில் அங்கொன்று, இங்கொன்று என அதிசயமாய் மறுமணங்கள் நடந்துகொண்டிருந்தாலும், அது சமூகத்தின் அறிவில் ஏற்றப்பட்டு ஒரு சமூக மாற்றம் நிகழ நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அதுவும் தமிழ்நாட்டில் ’சுயமரியாதை இயக்கம்’ 1920க்குப் பிறகான விதவை மணத்தை முன்னிறுத்திய சுயமரியாதைத் திருமணங்களைத் தீவிரமாக முன்னெடுத்த நிலையில்தான் அது சாத்தியமாயிற்று. ஆயினும், சமூகத்தின் ரத்தத்தில் ஊறிப்போயுள்ள பிற்போக்கு சக்திகளின் பலம் அளப்பறியது. மனித பலவீனங்களின் மீதான, அவற்றின் அறிவுக்கு எதிரான உள்ளடி வேலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அதனால், இன்னும் விதவை மறுணத்துக்கான கதைகளின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கின்றன. 25 வயதுக்குள் கணவனை இழந்துவிட்டாளா, அதிகபட்சம் 30 வயதுக்குள் இழந்துவிட்டாளா? போனால் போகிறது என்று மறுமணத்துக்கு நம் மனங்கள் இரங்கி வருகின்றன. அதுவும் படித்த, பணக்கார, நகர்ப்புற பெண்களுக்கு மட்டும்தான் இந்தச் சலுகை. இதெல்லாம் இல்லையென்றால் வயது சின்னதாக இருந்தாலும் இந்தச் சமூகம் இரங்காது. பெண்கள் எதற்காக சமூகத்தின் இந்த இரக்கம், இந்த அனுமதியையெல்லாம் இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? இதற்கான பதிலைக் கண்டடைய, இந்தக் கேள்வி எழும் சூழலையே மாற்றிட இன்னும் ஏராளமான ’நூறுசாமி’க் கதைகள் தேவைப்படுகின்றன.
எப்போதும் அடிப்படையில் ஒரு புதிதான, நல்ல கதைக்களத்தோடு வரும் இயக்குநர் சசி, இம்முறையும் ஒரு நல்ல கதையோடு வந்திருக்கிறார். செல்வி எனும் பெண்ணின் வாழ்க்கையை, போராட்டத்தை, பிள்ளைகளின் மீதான அன்பை, மறுமணம் மீதான எண்ணத் தடுமாற்றத்தை சிறப்பாக, இறுதி வரை ஒரு கமர்ஷியல் கதைக்கான சுவராசியத்தோடும் சொல்லியிருக்கிறார். ஆனாலும், குறைகள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம் என்பது போல சின்னச்சின்னதாக அவ்வளவு சினிமா சிக்கல்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. இப்படியான கதைக்கு ஏன் சம்பந்தமே இல்லாத, இப்படியான ஒரு ப்ரீலூட் மற்றும் இடைவேளைக் காட்சிகள்? அப்படி என்ன ஏமாற்று வேலை அவசியப்படுகிறது? அப்படியென்ன பொய்யான பரபரப்பு வேண்டிக்கிடக்கிறது? ஆடியன்ஸ் மீது ஏன் இப்படியொரு அவநம்பிக்கை சசி சார்?
படம் நெடுக வரும் செல்வியாக, ஸ்வாசிகா தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். கதையின் மீதும், சசியின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி படத்தின் கடைசி அரைமணி நேரத்தில் ஒரு எக்ஸ்டெண்டட் கேமியோ பாத்திரத்தில்தான் வருகிறார். அது ஒரு நல்ல கதாபாத்திரம், அவரும் அதில் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கிறார். கமர்சியல் வெற்றிக்கான தாகமிருந்தாலும், விஜய் ஆண்டனியை சினிமாவின் மீதும், கதைகளின் மீதும் நம்பிக்கை கொண்டவராக நாம் உணர்கிறோம். ஏழ்மைதான், போராட்டம்தான்… அதற்காக படம் முழுதும் வரக்கூடிய, இயல்பிலேயே அழகான ஸ்வாசிகாவுக்கு ஏன் இப்படியொரு அழுதுவடியும் மேக்கப்? விஜய் ஆண்டனிக்கும் குளித்து பத்து நாளான நபர் போன்ற ஒரு மேக்கப்! இப்படி இன்னும் நிறைய! அந்தப் பையனின் மனமாற்றம் கதையின் மிக முக்கியமான பகுதி. அவன் என்னவோ நேற்று அம்மாவுக்கு எதிராக கருத்துச் சொல்லி சொதப்பிவிட்டு, இன்று சட்டுபுட்டென மனம்மாறி அம்மாவுக்காகப் போராடுவதான பிம்பம் ஏற்படும்படியான காட்சியமைப்புகள். அந்த இடம் நமக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படி அவசியமான காட்சிகள் மிகச்சிறியதாகவும், அவசியமற்ற காட்சிகள் மிக நீளமாகவும் இருந்து நம்மைச் சோதிக்கின்றன.
இன்னும் லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், கருணாஸ் போன்றோர் செய்திருக்கும், கவனிக்கத்தக்க வகையிலான கதாபாத்திரங்கள் படத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன. முதல் பையன் பாஸ்கராக அஜய் திஷான், இரண்டாவது பையனாக பிக்பாஸ் சக்தி ஆகியோர் நடித்துள்ளார்கள். அவர்களது பங்களிப்பும் சிறப்பு. படம் கதையாகவும் சிறப்பாக உள்ளது. சினிமாவாகவும் நம்மை திருப்திப் படுத்துகிறது. சில குறைகள் இருந்தாலும், நிச்சயம் பார்க்கலாம்!