'சின்ன சின்ன ஆசை' புதுமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமாகும். இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. இந்திரன்ஸ், மதுபாலா இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூன் 19 ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. படம், வாரணாசியில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் டிரெய்லரில், வாரணாசியின் தெருக்கள், படித்துறைகள், கோயில்கள் போன்ற காட்சிகளுடன் படம் தொடங்குகிறது; பின்னணியில், "அவள் இதயத்தில் எண்ணற்ற கதைகள் உள்ளன, ஆனால், வெளியுலகம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது'' என்ற குரல் ஒலிக்கிறது. ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள நடுத்தர வயதுப் பெண்ணாக மதுபாலா இந்தப் படத்தில் நடித்துள்ளார். பயணத்தின்போது, வழிதவறி, தனது குழுவைப் பிரிகிறார். அந்தப் பழமையான நகரத்தில் வழிதவறிய மதுவுக்கு உதவ முன்வரும் மலையாளியாக இந்திரன்ஸ் நடித்துள்ளார். வாரணாசியை இருவரும் இணைந்து வலம் வரும்போது, அவர்களுக்குள் உருவாகும் ஆழமான நட்புதான் கதைக்களம். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக, Pearle Maaney Show- யூடியூப் நிகழ்ச்சியில் நடிகை மதுபாலா பங்கேற்றார். அப்போது, தனது திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் பற்றி பேசினார். நடிகை மதுபாலா சொன்ன அந்த சம்பவம் என்ன?
''1992ம் ஆண்டு மலையாளத்தில் யோதா (Yoddha) என்ற படத்தில் நடிகர் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்தேன். மலையாளத்தில் ஹிட் அடித்த படம் இது. இந்த படத்தில் இடம் பெற்ற "Kunu Kune Cheru Kuru Nirakal" என்ற பாடலின் படப்பிடிப்பு நோபாளத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டது. காத்மண்டுவிலுள்ள மார்க்கெட் ஒன்றின் அருகில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பகலில் நல்ல அமைதியாக காணப்பட்ட அங்கிருந்த தொழிலாளர்கள் மாலை 6 மணிக்கு மேல் வேறு மாதிரியாக மாறியிருந்தனர். அங்கிருந்த, அத்தனை பேரும் மது குடிக்கத் தொடங்கியிருந்தனர். மார்க்கெட்டில் இருந்த அமைதியான சூழலே மாறிப் போனது. அந்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை நெருங்கத் தொடங்கியது. நான், நடனக்கலைஞர்கள், மோகன்லால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கும்பல் எங்களை நெருங்கியதை கவனித்த நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த சமயத்தில், சட்டென்று மோகன்லாலும் ஒளிப்பதிவாளர் பிஜோயும் எங்களை அந்தக் கும்பல் நெருங்க முடியாதபடி தடுத்தனர்.
அந்தக் கும்பலில் இருந்த அனைவரும் குடித்திருந்தனர். கட்டுப்படுத்த முடியாத ஒரு கும்பலவாக இருந்தது. ஆனாலும், லாலேட்டனும், பிஜோயும் அந்த கும்பல் எங்கள் மீது கை வைக்க முடியாமல், தடுத்துப் போராடிக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகள் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது. பின்னர், அருகிலிருந்த போலீஸ் நிலையத்துக்குள் சென்று தஞ்சமடைந்தோம். அந்தக் கும்பலில் இருந்த எவரின் கையும் என் மீது படாமல் லாலேட்டனும், பிஜோயும் பார்த்துக் கொண்டனர். எனது, திரைப்பட வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் இதுவாகும். 'யோதா' படம் மலையாளத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. அதுபோலவே , என் வாழ்க்கையில் இந்தச் சம்பவத்தையும் மறக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு 'தேஜாவு' என்ற தமிழ்படத்தில் கடைசியாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். இதே, ஆண்டில் வெளியான' தலைவி 'படத்திலும் ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மதுபாலா நடித்திருந்தார்.