கடந்த சில நாட்களாக தமிழ் விடியோ கேம் ரசிகர்களுக்குள் ஒரு பரபரப்பான செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அது சென்னையை அடிப்படையாகக் கொண்ட அயலட் ஸ்டுடியோஸ் (Ayelet Studios) தயாரிப்பில் உருவாகும் ‘சன் ஆஃப் தஞ்சை’ (Son of Thanjai) எனும் முதல் தர விடியோ கேம் பற்றிய செய்தி. சென்ற வாரம் வெளியான சன் ஆஃப் தஞ்சையின் தரமான டிரெயிலர் இப்படியான பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
கணினி அடிப்படையிலான விடியோ கேம்களின் வரலாறு மிகப் பெரியதென்றாலும், உயர்தொழில்நுட்பத்தில் உருவாகும், டிரிபிள்-ஏ என்று சொல்லப்படும் முதல் தர பிஎஸ்5 (Playstation), எக்ஸ்பாக்ஸ் (X-Box), ஸ்டீம் (Steam) போன்ற கான்சோல்களின் மூலம் விளையாடப்படும் விடியோ கேம் துறை என்பது 1990-களில் அறிமுகமாகி, 2000-க்குப் பிறகு விஸ்வரூபம் எடுத்த ஒரு துறையாகும். இதன் சந்தை மதிப்பானது, உலகளாவிய இசை மற்றும் சினிமாவின் கூட்டுச்சந்தை மதிப்பை விட மிகப் பெரியது. இசை மற்றும் சினிமாவின் கூட்டு மதிப்பு 8 லட்சம் கோடிக்குள் இருக்கும் நிலையில், விடியோ கேம் சந்தையின் மதிப்பு 2026-ல் 28 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இப்படியான பிரம்மாண்டமான விளையாட்டுத் துறையில் கேம்கள் என்பன, டாஸ்க் அடிப்படையிலான பொழுதுபோக்கு வடிவம் என்ற நிலை இப்போது மாறியிருக்கிறது. இப்போது உலகளாவிய அளவில் பலதரப்பட்ட இனக்குழுக்களின் புராணம், வரலாறு, அறிவியல், சமூகக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, கேம்கள் ஒரு கலாச்சார வெளிப்பாட்டுத் தளமாகவும் உருவெடுத்து நிற்கிறது. வழக்கம் போல அமெரிக்க, ஐரோப்பிய கதைகளங்களில் தொடங்கிய கேம்கள் பின்னர் ஜப்பானிய, சீன, ரஷ்ய நிலங்களின் கதைகளையும் பேசத்தொடங்கின. ஆனால், இந்தியா எனும் பெருநிலப்பரப்பில் பொருளாதார நிலைகாரணமாக இந்த விடியோ கேம்களுக்கான சந்தை சிறியதாகவே இருந்து வருகிறது. அதனால், நமது கதைகளும் இந்த விளையாட்டுகளில் இதுவரைப் பேசப்பட்டதில்லை.
மும்பையிலிருந்து ஒரு சில நடுத்தர வகை விடியோ கேம்கள் ஏற்கனவே முயற்சிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் தடவையாக சென்னையிலிருந்து, ஒரு மண் சார்ந்த கதையுடன், தமிழ் இளைஞர்களிடமிருந்து ‘சன் ஆஃப் தஞ்சை’ உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமிங் விடியோ அவுட்புட்டுடன் வெளியிடப்பட்டுள்ள டிரெயிலரைப் பார்த்து, தமிழிலும் ஒரு முதல் தர விடியோ கேம் சாத்தியமாகியிருப்பதைப் பார்த்து பலரும் வியந்து போயிருக்கின்றனர்.
இந்த கேமின் அடிப்படைக் கதை (The Plot), 11ம் நூற்றாண்டில் அரண்மனைச் சுகபோகங்களில் வளர்ந்த 'விண்ணேந்திர சோழன்' என்ற 19 வயது இளவரசன், துரோகிகளால் நாட்டை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவன் சாதாரண மக்களைச் சந்தித்து, நிஜ உலகைப் புரிந்து கொண்டு, கற்றுக்கொண்டு, ஓர் உண்மையான அரசனாக தன் வீரத்தால் எப்படித் தன் அரியணையை மீட்டெடுக்கிறான் என்பதாகும். இதன் கதையாக்கத்தில் பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி பணிபுரிந்துள்ளார். இப்படியான புகழ்பெற்ற கேம்களின் நாயகர்களுக்கென்று தனித்துவமான ஆயுதம் என்று ஒன்றிருக்கும். விண்ணேந்திரனுக்கு தமிழர்களின் பாரம்பரிய சுருள் வாள், அரிவாள், வளரி போன்ற ஆயுதங்கள் முதன்மைப் படுத்தப்பட்டுள்ளன. இது உலகளாவிய கேமர்களுக்கு ஒரு புதிய அனுபத்தைத் தரும்.
இந்த கேமுக்காக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சாவூர் அப்படியே உயிரோட்டமாக (Living Open-World) வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விவசாயிகள், விளைநிலங்கள், வணிகர்கள், வணிகத்தலங்கள், கோவில்கள், பூசாரிகள், கிராமங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் அவற்றுக்கிடையே இருந்த அமைப்பு நுட்பங்கள் என எல்லாமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பாளர்கள் கருத்துப் பகிர்கிறார்கள். அய்லெட் ஸ்டுடியோவின் மார்கெட்டிங் பிரிவைச்சேர்ந்த வெங்கட் சுப்ரமணியன் இதுகுறித்துக் கூறும்போது, “எங்கள் ஸ்டுடியோ சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘அன்சங் எம்பயர்ஸ்: தி சோழாஸ் I’ என்ற கேமை ஒரு சோதனை முயற்சியாகத் உருவாக்கிய போது, அது வெறும் நான்கு பேர் கொண்ட ஒரு குழுவாக மட்டுமே இருந்தது. நாங்கள் அனைவரும் கேமர்கள் (Gamers), நம் மண்ணின் கதைகளைக் கொண்டு ஒரு கேமை உருவாக்க வேண்டும் என்ற ஒரு உன்னதமான மையக் கருத்தால், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம். அதன் பெரும் வரவேற்புக்குப் பின்னர், இந்த சன் ஆஃப் தஞ்சை உருப்பெற்றுள்ளது, இந்த கேமின் நம்பகத்தன்மைக்காக, தஞ்சையின் மீளுருவாக்கத்துக்காக பெரிய அளவில் ஆய்வு மேற்கொண்டு கடுமையாக உழைத்துள்ளோம். உலகளாவிய ஆக்ஷன் அட்வென்சரஸ் பிரிவு கேம் ரசிகர்கள் கொண்டாடத்தக்க வகையிலும், இந்திய ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்க வகையிலும் சன் ஆஃப் தஞ்சை இருப்பான்” என்கிறார் உற்சாகமாக!
இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில், இந்த கேம் பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், ஸ்டீம் போன்ற கான்சோல்களுக்கான வடிவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெற்றி இந்தியாவையும், தமிழ்நாட்டையும் உலகச் சந்தையை திரும்பிப் பார்க்கவைக்கும். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் உலகத் தரத்திலான விடியோ கேம்கள் உருவாக அது வழிவகுக்கும். அதனால், இந்த முன்னெடுப்பு பெருவெற்றி பெற வேண்டும், அது மிகப்பெரிய எதிர்காலத்துக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.