தேனி மாவட்டத்தின் அல்லிநகரைச் சேர்ந்தவர் சின்னசாமி என்ற பாரதிராஜா. தொடக்கத்தில், சுகாதாரத்துறையில் ஆய்வாளராக வேலை பார்த்த பாரதிராஜா, சினிமாவின் மீதுள்ள காதலால் சென்னைக்கு வந்தார். அவருடன் சேர்ந்து வந்தவர்கள்தான் பாவலர் வரதராஜன், இளையராஜா மற்றும் கங்கை அமரன். தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படும் '16வது வயதினிலே' என்ற படம்தான் இயக்குநர் இமயத்தின் முதல் படமாகும். 1977ல், இந்த முதல் படத்திலேயே, தன்னைப் பற்றி பேச வைத்து விட்டார் பாரதிராஜா. இந்தப் படத்தால் மயிலு, சப்பாணி, பரட்டை போன்ற கேரக்டர்கள் தமிழ் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற எஸ்.ஜானகி பாடிய 'செந்தூரப் பூவே... செந்தூரப் பூவே' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த பாடலுக்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருதும் கிடைத்தது.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம்புதிது, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட தலைசிறந்த படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார். இவற்றில், பல படங்கள் சூப்பர்ஹிட். விருதுகளை அள்ளியவை. இவற்றில், பெண் சிசுக்கொலையை எதிர்த்து, அவரின் தாயாரின் பெயரில் எடுத்த படம்தான் கருத்தம்மா!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளியான பாரதிராஜா ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது .இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். ரேவதி, ரேகா, ராதிகா, ராதா, ரஞ்சிதா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். தான் அறிமுகப்படுத்தும் நடிகைகளுக்கு 'ஆர்' என்ற முதல் எழுத்தில் பெயர் தொடங்குவதை பாரதிராஜா ஒரு சென்டிமென்டாக வைத்திருந்தார். பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் சோடை போனதும் இல்லை.
பாரதிராஜா 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர், பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக, மோகன்லாலின் ‘துடரும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார். ஸ்டன்ட் மாஸ்டர் பழனிசாமி என்ற கேரக்டரில் 'துடரும்' படத்தில் பாரதிராஜா நடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணத்திற்குப் (25 மார்ச் 2025) பிறகு, முற்றிலுமாக முடங்கிப் போனார். மனதளவில் வெகுவாக உடைந்தும் போனார். உடல் நிலையும் சரியில்லாமல் போனது. கடந்த ஒரு சில மாதங்களாக மலேசியாவிலுள்ள தனது மகள் வீட்டில் பாரதிராஜா வசித்து வந்தார். அதன் பிறகு, மீண்டும் சென்னை திரும்பினார்.
கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு வயது 84.
பெரும்பாலான படங்கள் செட்கள் போட்டு ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில், வெளிப்புறப் படப்பிடிப்புகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவையே சேரும். பாரதிராஜாவிடத்தில் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான் பாக்கியராஜ், மணிவண்ணன் போன்றோர். 'நிழல்கள்' படத்தில் நடிகர் ரவியை அறிமுகப்படுத்தினார். அவர்தான், 'நிழல்கள் ரவி' ஆனார்.
இந்தப் படத்தில் 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடல் வழியாக கவிஞர் வைரமுத்து அறிமுகம் ஆனார். 'மண்வாசனை' படத்தில் நடிகர் பாண்டியன் அறிமும் செய்யப்பட்டார். 'அலைகள் ஒய்வதில்லை ' படத்தின் வழியாக நவரச நாயகன் கார்த்திக்கும் நடிகை ராதாவும் தமிழ்சினிமாவுக்கு கிடைத்தனர்.
தமிழ்சினிமாவின் இமயமாக நின்றவரின் மறைவு பேரிழப்புதான்... ஆனால், அவரது சினிமா வாயிலாக என் இனிய தமிழ் மக்களே... என்ற கனத்த குரல் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.