தேசிய விருது பெற்ற புகழ்பெற்ற மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் (56) கார்டியாக் அரெஸட் காரணமாக கொச்சியில் இரு நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
கடந்த 2010 ம் ஆண்டு வெளியான 'ஆதாமின்றெ மகன் அபூ' ('Adaminte Makan Abu ) திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சலீம் குமார் பிறப்பால் ஒரு இந்து. அப்படியிருக்கையில், சலீம் என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். இதன் பின்னணியில் சுவாரஸ்யமானத் தகவல் உள்ளது.
கேரளாவில் நாராயாணகுருவின் சிஷ்யரான சகோதரன் ஐயப்பன் என்பவர் சாதி அடக்குமுறைக்கு எதிராக தீவிரமாகப் போராடி வந்தார். இவரைப் பின்பற்றிய பல இந்து மக்களும் சாதி அடையாளங்களை மறைக்க தங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டத் தொடங்கினார். சலீம், ஜலீல், நவுஷாத், ஆயிஷா , ஜமீலா போன்ற பல பெயர்கள் இந்து மதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் சூட்டப்பட்டன.
இதனால், குழந்தைகளின் பெயரைக் கொண்டு சாதி அடையாளங்களை எளிதாக கண்டுபிடித்து விட முடியாது என்று அவர்கள் கருதினர். அந்த வகையில், சலீமின் பெற்றோர் கங்காதரன், கவுசல்யா தங்கள் மகனுக்கு சலீம் என்ற பெயரை சூட்டினர். 5 வயது வரை சலீம் என்றே அழைக்கப்பட்டார். பின்னர், பள்ளியில் சேர்க்கும் போது, சலீம் என்பது முஸ்லிம் பெயராக இருக்கிறதே... என்று யோசித்த ஆசிரியை... குமார் என்ற பெயரையும் உடன் இணைத்துள்ளார். பின்னர், அவரது பெயர் சலீம் குமார் என்று மாறிப் போனது.
நடிகர் சலீம் குமார் நடித்த 'ஆதாமின்றெ மகன் அபூ' படத்தில் தேசிய விருது கிடைத்ததற்கு, அவரது அற்புதமான நடிப்பே காரணம். இந்த படத்தில், இஸ்லாத்தின் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டளையை நிறைவேற்ற முடியாத ஏழ்மை நிறைந்த மனிதராக வாழ்ந்து காட்டியிருப்பார் சலீம் குமார். படத்துக்குக் கிடைத்த பிரமாண்ட வரவேற்பால் மகிழ்திருந்த சலீம்குமார், ஹஜ் புனித பயணம் செல்ல முடியாமல் தவிக்கும் இஸ்லாமிய முதியவர் ஒருவருக்கு மெக்கா செல்ல ஸ்பான்ஸர் செய்ய முடிவு செய்தார். படம் வெளியான அடுத்த ஆண்டே 2011ம் ஆண்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த 71 வயதான ஆலவிக்குட்டி என்பவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் தவிப்பது பற்றி சலீம்குமாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, ஆலவிக்குட்டி ஹஜ் பயணம் மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்தார்.
தொடர்ந்து, ஹஜ் பயணம் மேற்கொண்ட ஆலவிக்குட்டி மெதீனாவில் 8 நாட்கள் தங்கியிருந்தார். அதில், 3 நாட்கள் மெக்காவில் இருந்தார். ஹஜ் பயணத்தை மன நிறைவுடன் முடித்த, ஆலவிக்குட்டி, பரவூரிலுள்ள சலீம் குமார் வீட்டுக்கு சென்று மனதார நன்றி தெரிவித்தார். அப்போது, சலீம் குமாருக்கு பேரீச்சை பழங்கள், ZAMZAM புனித நீர் கொடுத்து மகிழ்ந்தார். ஹஜ் பயணத்தின் போது, கப்பாவில் எடுத்த புகைப்படத்தையும் அவரிடத்தில் காட்டி நெகிழ்ச்சியடைந்தார். இத்தனைக்கும் ஆலவிக்குட்டிக்கு தான் ஹஜ் பயணம் செல்லும் வரை , சலீம் குமார் யாரென்றே தெரியாது. அவரது படங்களையும் பார்த்தது கிடையாது. சலீம் குமாரின் நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய, 'ஆதாமின்றெ மகன் அபூ' என்ற படத்தையும் பார்த்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.