warrant 
சினிமா

WARRANT – வெப்சீரிஸ் விமர்சனம்

வழக்கமாக, போலீஸ் கதை என்றாலே, ஒரு கடினமான கேஸ், அதைத் துப்பறியும் ஹீரோ, அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்பதாகத்தான் கதை நகரும். ஆனால், ஒரு கான்ஸ்டபிள், கொஞ்சம் கொஞ்சமாக வேலையைக் கற்றுக்கொண்டு...

ஆதி தாமிரா

கோட்டை கருப்பசாமி எனும் ஓர் இளைஞனின் அப்பா, தன் ஒற்றைப் பிள்ளையின் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார். அவன் எப்படியாவது ஓர் அரசுப் பணியில் செட்டிலாகிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். எத்தனையோ தேர்வுகளில் தோற்கும் கருப்புவால், இறுதியில் ஓர் இரண்டாம் நிலைக் காவலர், அதாவது போலீஸ் கான்ஸ்டபிள் பணியில்தான் சேரமுடிகிறது. அந்த இடத்தில் தொடங்குகிறது இந்தத் தொடரின் கதை. கருப்பு, ஓர் எளிய, அப்பாவியான ஆள். ஸ்டேஷனில் தரப்படும் சாதாரண வேலைகளைக் கூட செய்யமுடியாமல், மிக எளிதாகச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். சும்மாவே அவமானங்களுக்குப் பெயர் போனது, காவல்துறை! லேசில் விடுமா? கருப்பு பணியிடத்தில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறான், கிட்டத்தட்ட ஓர் எடுபிடியாகவே நடத்தப்படுகிறான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமானவனாக நிற்கும் அவன், ஒரு கட்டத்தில் திணறிப்போகிறான். 

அந்த நேரத்தில், அவனது தந்தை, ‘முகமது அலி’யின் புகழ்பெற்ற ‘Who Am I?’ தத்துவத்தைச் சொல்லி அவனைச் சரியான பாதையில் வழி நடத்துகிறார். தன்னுணர்வு பெறும் கருப்பசாமி, அவனுடைய காவல் நிலையத்தில், சக காவலர்களிடமிருந்து, தான் இழந்த மரியாதையையும், பெயரையும் மீட்டெடுக்கக் களமிறங்குகிறான். அவன் அதைச் சாதிக்க எப்படியெல்லாம் போராடினான் என்பது கதை! 

வழக்கமாக, போலீஸ் கதை என்றாலே, ஒரு கடினமான கேஸ், அதைத் துப்பறியும் ஹீரோ, அவர் எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்பதாகத்தான் கதை நகரும். ஆனால், ஒரு கான்ஸ்டபிள், கொஞ்சம் கொஞ்சமாக வேலையைக் கற்றுக்கொண்டு, NBW (Non-Bailable Warrant) எனப்படும் பழைய கேஸ்களுள் சிலவற்றைப் புலனாய்வு செய்து தன்னுடைய மரியாதையை எப்படிக் காப்பாற்றிக்கொள்கிறான் எனும் இந்தக் கதையே புதுமையாக இருக்கிறது. இந்தக் கதையைக் கிட்டத்தட்ட களத்தில் இறங்கி, ஒரு நிஜ காவல் நிலையத்தில் புகுந்து, ஒரு நிஜ கான்ஸ்டபிளைப் படம் பிடித்தது போல படமாக்கம் செய்திருக்கிறார்கள். கதை நாயகன் கருப்புவாக, இயக்குநர் பிராசாந்த் பாண்டியராஜ் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இவர், சூரி நடித்த மாமன் திரைப்படத்தையும், விமல் நடித்த விலங்கு எனும் தரமான வெப்சீரிஸையும் இயக்கி நம்மைக் கவனிக்க வைத்தவர். முதன் முறையாக நடிகராகக் களமிறங்கியுள்ளார். இந்தத் தொடரை எழுதி, இயக்கியிருப்பது இவரது உதவியாளர் விக்னேஷ் நடராஜன். 

தொடரின் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. நாயகன் கருப்புவின் தொடக்க நிலையும், பின் மெல்ல மெல்ல நிகழும் அவனது ஆளுமை மாற்றமும், இறுதியில் காவல்துறை எனும் சிஸ்டத்தின் ஓர் அங்கமாக அவனும் மாறி நிற்கும் இடமும் பார்வையாளர்களைக் கொஞ்சமும் தொய்வடைய வைக்காமல், எட்டு எபிஸோடுகளையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கிறது. அவனது கடுமையான போராட்டத்துக்கு நடுவே, பெற்றோருடன் கோபமும், பாசமுமான அவனது உறவு, திருமணத்துக்காக பார்க்கப்பட்ட பெண்ணோடு ஏற்படும் நட்பு மற்றும் பிரிவு, அடுத்து அப்பாவைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸோடு ஏற்படும் காதல் என எல்லாம் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. அந்தப் பெண் நீதிபதி வரும் காட்சிகளெல்லாம் சுவாரசியம். கருப்புவின் கைங்கர்யத்தில் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி, எஸ்பி என வரிசையாக மூவரும் வந்து நீதிபதியிடம் சிக்கிக்கொள்ளும் காட்சி அழகு.

Warrant Web Series

இயக்கம் மிகச்சிறப்பு. இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம் அதன் மிகைப்படுத்தப்படாத உலகம். போலீஸ் ஸ்டேஷன், கிராமப்புற சூழல், கீழ்மட்ட காவலர்களின் வாழ்க்கை, அவர்களுக்குள் இருக்கும் அதிகார அடுக்குகள், குற்றவாளிகளின் இயக்கம் போன்றவை இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், இயல்பு எனும் பெயரில் மைல்டான கெட்ட வார்த்தைகளைக் கூட பயன்படுத்தலாம்தான். அதற்காக, காட்சியின் நோக்கம் முழுமையாக நிறைவேறிவிட்ட போதும் கூட, கதாபாத்திரங்களை இந்த அளவுக்கு தரங்கெட்ட வார்த்தைகளை சகஜமாக பேச வைப்பது சரியல்ல. இதெல்லாம் ஏதாவது தயாரிப்பு தரப்பு கேட்கும், சீப்பான பப்ளிசிட்டி ஐடியாவா என்று யாராவது ஆராய்ச்சி செய்யலாம். 16+ என்ற ஆலோசனையை ஏற்று, மனைவியோடும், 18 வயது மகளோடும், பார்க்க உட்கார்ந்தால் நடுவில் சில எபிஸோடுகளில் இருக்கும் வார்த்தைப் பிரயோகங்களால், வேறு வழியின்றி நிறுத்திவிட்டு தனித்தனியே பார்க்க முடிவு செய்ய வேண்டியதாயிற்று. பிரசாந்தும், விக்னேஷும் இந்தச் சிக்கலைச் சிந்திக்கலாம்! 

பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ் என எல்லோரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தார்கள். நம்ரிதா, அருள்ஜோதி, சாயா தேவி என்று மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அவர்களின் நடிப்பும் சிறப்பு, கூடுதலாக மூவருமே கண் நிறையும் அழகு. 

ஆனால், தொடரில் சில பிரச்சினைகளும் உண்டு. பிற தேர்வுகளில் தோற்கும் கருப்பு, காவல்துறைக்குள் முறையாகச் செல்வதாகவே காண்பித்திருக்கலாம். அதற்குள் அவர்கள் டீடெயிலாக போகவில்லை எனினும், சமீப பத்தாண்டுகளாக TNPSC/ TNUSRB அமைப்புகள் முழுமையான வெளிப்படைத்தன்மையோடு இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். முன்னர் இதில் சிக்கல்கள் இருந்திருக்கலாம். ஆனால், பிரதான கதை அதுவாக இல்லாதபோது, இன்னும் அதில் முறைகேடாக நுழைந்துவிட முடியும் என்று போகிற போக்கில் காட்சிகள் வைப்பது அறமான செயலல்ல. அடுத்து, பல குட்டிக்கேஸ்களின் தொகுப்பாக கதை நகர்வதால், சில கேஸ்களை நகைச்சுவையோடு அணுகியிருக்கிறார்கள். சில இடங்களில் அது சுவாரசியமும் கூட! ஆனால், நகைச்சுவை எனும் பெயரில் அந்தப் பெரிய குடும்பத்தைக் கோர்ட்டுக்குக் கொண்டு வரும் காட்சி கொஞ்சம் இழுவைதான்! குறிப்பாக கிளைமாக்ஸ். பிரதான கதையின் நோக்கமே ஒருவன் எப்படி தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு சரியான போலீஸாகிறான் என்பதுதான். ஆனால், அவன் அதையும் தாண்டிப்போய் எப்படி மோசமான போலீசாகிறான் தெரியுமா என்று கொண்டுபோய், அதனால் அவனுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தி, அறிவுரை சொல்லித் திருத்துவதெல்லாம் பொருந்தவில்லை. இந்தக் கதைக்கான கிளைமேக்ஸ் இதுவல்ல. இது நாம் உருவாக்கிய ஓர் அழகான கேரக்டரை நாமே சிதைப்பதாகத்தான் இருந்தது. 

சாம் C.S-ன் பின்னணி இசை பல இடங்களில் டென்ஷனை உருவாக்குகிறது. ஒளிப்பதிவு சிறப்பு. குறிப்பாக இரவு நேரக் காட்சிகளின் காட்சியமைப்புகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயம் பார்க்கலாம். ZEE5, தளத்தில் காணக்கிடைக்கிறது.