கதை அப்படி ஒன்றும் புதிதானதல்லதான். அர்ஜுன், அவரது மனைவி (அபிராமி), மகள் (ப்ரீத்தி முகுந்தன்), ஒரு தம்பி (விவேக் பிரசன்னா) என்று ஒரு நடுத்தரக் குடும்பம். தற்காப்புக் கலை தெரிந்த அர்ஜுன், கராத்தே வகுப்பு நடத்துகிறார். தம்பி விவேக் ஒரு மெடிகல் ஷாப் வைத்திருக்கிறார். மகள் ப்ரீத்தி ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார். அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி மூவரும் தற்காப்புக் கலையில் தேர்ந்தவர்கள். மகளுக்குக் கராத்தே சொல்லிக் கொடுத்து, ஒரு தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டுமென்ற ஊக்கத்தோடு மகளை வளர்க்கிறார் அர்ஜுன்.
இன்னொரு புறம் வழக்கமான ஒரு கார்ப்பரேட் வில்லன் மலையைக் குடைந்து, பணம் பார்க்கும் ஆசையில், ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு பிராஜக்டை எடுக்கிறான். ஒரு கார்ப்பரேட் வில்லனாக இருந்தாலும், ஒரு ஆயிரம் கோடியைப் புரட்டுவதற்குள் எவ்வளவு சிரமப்படுகிறான் என்று ஒரு பகுதி வருகிறது. அது இதுவரை எந்தப் படத்திலும் வராத ஒரு சுவாரசியம். அவனுக்கு ஸ்டெப் 2, ஸ்டெப் 3, என வில்லன்கள் பல பேர் இருக்கிறார்கள். ஒரு ஸ்டெப் 4 அடியாள் நமது அர்ஜுன் குடும்பத்தை அந்த ஆபத்தான கும்பலுடன் மோத வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டுவிடுகிறான். அங்கே கதை சூடுபிடிக்கிறது. அதன்பிறகு நடப்பது உயிர் பிழைப்புக்கான ஒரு போராட்டம். இந்தக் கதையை எழுதி இயக்கியிருப்பவர் சுபாஷ் கே ராஜ். அவருடைய முதல் படம் இது!
ஒரு நல்ல ஆக்ஷன் படம் என்றால் என்ன? ஹீரோ பத்து பேரை அடித்துப் போடுவதா? திரைத்துறையின் ஆலமரமான ரஜினியில் தொடங்கி, நேற்று முளைத்த பிரதீப் ரங்கநாதன் வரை எல்லோரும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் வேறென்னதான் வேண்டும்? அந்த சண்டைகளுக்குப் பின்னால் ஓர் உணர்ச்சி இருக்க வேண்டும். கதாபாத்திரங்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். பார்வையாளனுக்கு ’இவங்க ஜெயிக்கணும்’ என்ற ஆர்வம் வர வேண்டும். அந்த உணர்வைச் சரிவர திரையில் கொண்டு வந்திருக்கிறது இந்த பிளாஸ்ட். அதனால்தான் பலரின் கவனம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் படம்.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகள். பல தமிழ் படங்களில், கதையை நிறுத்திவைத்துவிட்டு, டூயட் பாடலுக்குப் போவது போலத்தான், சண்டைக்காட்சிகளும் வலுவில் திணிக்கப்பட்டிருக்கும். ஆனால், எனக்கு நினைவு சரியாக இருந்தால், குறைந்தது இடைவேளைக்கு முன்பாக ஒரு 5, பின்பாக ஒரு 5 என 10 சண்டைகள் இந்தப் படத்தில் இருக்கலாம். தனித்தனியாக, குழுவாக என அனைவருக்கும் சண்டைகள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் சண்டையிட்டால் அது அத்தனை நம்பும்படியாக இருக்காது. அதுவும் ப்ரீதியும், அபிராமியும் நம்மால் சண்டைக் காட்சிகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கான நடிகைகள்தான். ஆனால், ஒரு சரியான ஆக்ஷன் கொரியோகிராபரும் (ஃபீனிக்ஸ் பிரபு), ஒளிப்பதிவாளரும் (அருண் ராதாகிருஷ்ணன்), ரசமான இயக்குநரும் அமைந்துவிட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கான உதாரணமாக இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன.
அர்ஜுன் வழக்கம்போல் தனது ஆக்ஷன் அனுபவத்தை தெறிக்க விட்டிருக்கிறார். டைட்டிலுக்கு முன்பாகவே ஒரு சண்டை வருகிறது பாருங்கள், மனிதர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
பொதுவாக ஒரு படத்தில் ஹீரோவோ, வில்லனோ அடுத்து நடக்கப்போவதை சரியாகக் கணித்துக்கொண்டே இருப்பார்கள். அடியாளை மெடிகல் ஷாப்புக்கு அனுப்பினோம், அவன் திரும்பி வரவில்லை, அப்படியானால் மெடிகல்ஷாப்காரனைப் பிடிப்போம் என்று கணித்து வில்லன் சரியாக லைனுக்கு வந்துவிடுவார். ஆனால், இதில் எல்லாமே ஏனைக்கு கோணையாகவே நடக்கிறது, தப்புத் தப்பாக கணிக்கிறார்கள். கிளைமேக்ஸில் மெயின் வில்லன் சிசிடிவியைப் பார்க்கும் போதும் அதுதான் நடக்கிறது. இதுவும் இந்தப் படத்துக்கு தனித்துவமான ஒரு ஃபிளேவரை வழங்கியது என்பதை மறுக்க முடியாது.
ஆனாலும், படம் குறைகளற்றது என்று சொல்லிவிட முடியாது. திரைக்கதைப்போக்கு மிகவும் கணிக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. போலீஸெல்லாம் ஊரில் இருக்கிறதா என்பது போன்ற ஏராளமான லாஜிக் பிரச்சினைகள் படம் நெடுக இருக்கின்றன. மெயின் வில்லன் கதாபாத்திரம் (ஜான் கொக்கன்), ஓர் உள்ளீடற்ற வழக்கமான கார்ப்பரேட் வில்லனாகவே போய்விடுகிறது. ஸ்டெப் 2 வில்லனாக அர்ஜுன் சிதம்பரம் டெரராக இருக்கிறார். இவையெல்லாம் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கேஜிஎஃப் புகழ் ரவி பஸ்ரூரின் இசையில் இது முதல் தமிழ்ப் படம். அவரின் இசை படத்தின் மூடுக்கு இயன்ற அளவு ஒத்துழைத்திருக்கிறது, அவ்வளவுதான்.
வழக்கமாக, எந்தக் காட்சியையும் ஸ்பாய்லர் செய்வதில் நமக்கு ஆர்வமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. ஒரு சண்டையில், அர்ஜுன் சிதம்பரத்தின் தாக்குதலால், நிலைகுலைந்து போகும் அபிராமி, ப்ரீதியைக் காக்க அர்ஜுன் உள்ளே வருகிறார். அவரும் நிலைகுலைந்து போக, அடுத்து விவேக் வந்து எல்லோரையும் காக்கிறார். இது ஒரு ஏஜெண்ட் டீனா மொமண்ட் போல வர ஆசைப்பட்டு வைத்திருக்கிறார்கள். அதற்காக அர்ஜுனைக் காப்பாற்ற விவேக்கா? ஒரு நியாயம் வேண்டாமா? அதே மொமண்ட் விவேக், அபிராமியையும், ப்ரீதியையும் காப்பாற்ற வந்திருந்தாலும் கிடைத்திருக்குமே? அவர் திணறி நிற்கும் போது அர்ஜுன் எதிர்பாராத விதமாக வந்தால் கூட போதுமே, அதே உணர்வு கிடைத்திருக்குமே!
மொத்தத்தில், பிளாஸ்ட் தன்னை ஒரு அறிவுஜீவி திரைப்படமாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கதில்லை. ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் எண்டர்டெய்னர் என்ற வகையில், அதன் வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறது. லாஜிக் ஓட்டைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், இரண்டு மணி நேரம் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு ஆக்ஷன் படத்தை ரசிக்க வேண்டும் என்றால், பிளாஸ்ட் உங்களை ஏமாற்றாது. நிச்சயம் பார்க்கலாம்.