Exam Webseries 
சினிமா

EXAM - வெப்சீரிஸ் விமர்சனம்

துஷாரா விஜயன், அதிதி பாலன் நடித்து, சற்குணம் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது EXAM வெப் சீரிஸ். க்ரியேட்டிவ் ப்ரொட்யூசர்களாக புஷ்கர் காயத்ரியும் இருப்பதால் இந்த வெப்சீரிஸுக்கு ஒரு கவனம் குவிந்துள்ளது.

ஆதி தாமிரா

டிஎஸ்பியான அதிதி பாலன், ஒரு மலைப்பிரதேசப் பகுதிக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறார். வரும் வழியிலேயே அவரைக் கடத்தி ஒரு மறைவிடத்தில் அடைத்து வைத்துவிட்டு, அவரது இடத்தில் டிஎஸ்பியாகச் செல்கிறார் துஷாரா. ஒரு டிஎஸ்பியையே கடத்திவிட்டு அவரது இடத்தில் ஆள்மாறாட்டம் செய்வது அத்தனை எளிதான காரியமா என்ன? ஆனால், அதை ஓரளவுக்கு நம்பும்படியான காட்சியமைப்புகளுடன் காண்பித்து, விறுவிறுப்பாகத் தொடங்குகிறது இந்த சீரிஸ்! துஷாரா யார்? அவர் ஏன் இதைச் செய்தார்? அவரது நோக்கமென்ன? அவருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று 7 எபிசோடுகளாக விரிகிறது இந்த எக்ஸாமின் கதை!

இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம் அதன் கதைக்களத் தேர்வு. இந்தியாவில் NEET, UPSC, போன்ற அரசுத் தேர்வுகளில், வினாத்தாள் வெளியாவது, கோச்சிங் மாஃபியாக்களின் திருவிளையாடல்கள் என எத்தனையோ விசயங்களைக் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். அந்த சமூகப் பதற்றத்தையே இந்தத் தொடர் தனது மையமாகக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்தத் தொடர் பார்க்க வேண்டிய ஒன்றாகிறது. அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் இந்த எக்ஸாம் (Exam) வெப்சீரிஸ், ஒரு சாதாரண கிரைம் திரில்லராக மட்டுமல்லாமல், நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கிற போட்டித் தேர்வுகளுக்குள் ஊழல் எப்படிப் புகுந்து நாசமாக்குகிறது என்பதையும் பேச முயற்சிக்கிறது.

இந்தத் தொடரை களவாணி, வாகைசூட வா போன்ற தரமான படங்களை இயக்கிய, ஏ.சற்குணம் இயக்கியிருக்கிறார். சுழல், வதந்தி போன்ற முக்கியமான சீரிஸ்களின் பின்னணியிலிருந்த புஷ்கர்-காயத்ரி இணைதான் இந்த சீரிஸின் கிரியேடிவ் தயாரிப்பு. முக்கிய வேடங்களில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், சரவணன் சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். அதிதிக்கு குறைவாக பகுதிகளே இருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருக்கிறார். ஆனால், துஷாராதான் இந்த அளவுக்கு மல்டி லேயர்கள் கொண்ட கதாபாத்திரத்துக்கு தேவையான உணர்வுப்பூர்வமான நடிப்பை எல்லா இடங்களிலும் கொடுக்க முடியாமல் திணறுகிறார். பல நுணுக்கமான காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகளுக்குள் சிக்கிக்கொள்கிறார்.

ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் வரும் ப்ரீலூட் காட்சிகள் போல சீரிஸ் நெடுக சில சுவாரசியங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, ஒரிஜினல் டிஎஸ்பியின் அம்மாவும், குழந்தையும் ஸ்டேஷனுக்கே வந்துவிடும் காட்சியில் துஷாரா அவர்களைச் சமாளிக்கும் இடம் சுவாரசியம். வில்லனுக்கான பின்னணிக்கதையும் நன்று. ஆனால், சீரிஸில் சிலபல பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆள்மாறாட்டச் சிக்கலை துஷாரா எப்படி எதிர்கொள்கிறார் எனும் தொடக்கப்பகுதிகள் சுவாரசியமாக இருந்தாலும், அதையே இரண்டு மூன்று எபிஸோடுகளுக்கு நீட்டித்து மெயின் கதைக்கு வர ரொம்பவே நேரமெடுத்துக்கொண்டது பெரிய சிக்கலாக இருக்கிறது. போலவே, துஷாரா நிஜ டிஎஸ்பி இல்லை என்று தெரிய வந்த பிறகும், சில போலீஸ்காரர்கள் அவரது நோக்கமுணர்ந்து அவருக்கு உதவுகிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், அதன் பிறகும், ’எஸ் மேடம்’, ’ஓகே மேடம்’ என்று அவர்கள் இவரது கட்டளைக்குக் காத்திருப்பதெல்லாம் ரொம்பவே டூமச்! போலவே, வில்லன் உட்பட பல கதாபாத்திர வடிவமைப்புகள் முழுமையடையாது நிற்கின்றன.

மொத்தத்தில், Exam-ஐ ஒரு தரமான திரில்லர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், தமிழில் தொடர்ந்து ஒரே விதமான கொலை மற்றும் அதைத் துப்பறியும் பாணி திரில்லர்களே வந்துகொண்டிருக்கும் OTT சூழலில், ஒரு சமூகப் பிரச்சினையை திரில்லர் வடிவில் பேச முயன்றிருப்பதே வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.