Sharuk Khan and Mohanlal 
சினிமா

புர்ஜ் கலீஃபா முகவரி... இந்திய பிரபலங்களின் லட்சியம்!

துபாயில் புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் தங்கள் முகவரி இருக்க வேண்டுமென்று பல இந்திய பிரபலங்கள் விரும்புகின்றனர். புர்ஜ் கலீஃபா முகவரியை வைத்திருக்கும் இந்திய பிரபலங்கள் யார்?

எம். குமரேசன்

துபாயின் அடையாளமாக கருதப்படுகிறது, உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபா. 163 மாடிகளுடன் 828 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கட்டடம் இதுவாகும். கடந்த 2010ம் ஆண்டு இந்த கட்டடம் திறக்கப்பட்டது. இது, ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னருக்கு சொந்தமானது அல்ல. 'எமார் பிராபர்டீஸ்' (Emaar Properties) என்ற யு.ஏ.இ நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த நிறுவனத்தின் தலைவர் முகமது அலப்பர் (Mohammed Alabbar). இவர், சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து முன்னணி ரியல் எஸ்டேட் தொழிலதிபராக உயர்ந்தவர். முகமது அலப்பரின் தந்தை பாய்மரக் கப்பலில் மாலுமியாக இருந்தவர்.

இந்தக் கட்டடத்தை முகமது அலப்பார் கட்டிக் கொண்டிருந்த போது, 2008ம் ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, அபுதாபி ஆட்சியாளர் ஷேக் கலிஃபா நிதியுதவி செய்தார். இதையடுத்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்த கட்டத்துக்கு புர்ஜ் கலிஃபா எனப் பெயர் சூட்டப்பட்டது. Burj என்றால் Tower. கலிஃபா டவர் என்ற பொருளில், Burj Khalifa என்று பெயரிடப்பட்டது. புர்ஜ் கலிஃபா துபாயின் அடையாளம் மட்டுமல்ல, சர்வதேச நாட்டு கோடீஸ்வரர்களும் வாழ விரும்பும் ஒரு கனவுக் குடியிருப்பு ஆகும்.

துபாயில் தங்கள் வீட்டு முகவரி, புர்ஜ் கலிஃபாவில் இருக்க வேண்டுமென்பது பல கோடீஸ்வரர்கள், சினிமா நட்சத்திரங்களின் இலக்காகவே உள்ளது. அவர்களில், இந்திய நடிகர் நடிகைகளும் உண்டு. அந்த வகையில், புர்ஜ் கஃலீபாவில் வீடு வைத்திருக்கும் பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Top of the burj khalifa

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

துபாயின் தூதராக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் உள்ளார். இவருக்கு புர்ஜ் கலிஃபாவில் அபார்ட்மென்ட் சொந்தமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. வானாளவிய இந்தக் கட்டத்தின் மேலடுக்கில் இவரது அபார்ட்மென்ட் இருப்பதாக சொல்கிறார்கள்.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்

உலகின் உயரமான இந்த கட்டடத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட் சொந்தமாக உள்ளது. 29வது மாடியில் துபாய் ஃபவுண்டேஷனை நோக்கி இந்த அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. மோகன்லாலின் மனைவி சுசித்ரா பெயரில் இந்த அபார்ட்மென்ட் வாங்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஜம்பவான் டேவிட் பெக்காம்

கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம், அவரது மனைவி விக்டோரியா ஆகியோருக்கு இங்கு அபார்ட்மென்ட் சொந்தமாக உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இந்த தம்பதி இந்த அபார்ட்மென்டை வாங்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி

கடந்த 2010ம் ஆண்டு தங்களது திருமண நாளை முன்னிட்டு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அவரது கணவர் ராஜ்குந்த்ரா புர்ஜ் கலீஃபாவில் அபார்ட்மென்ட் வாங்கி பரிசளித்தார். பின்னர், இந்த அபார்ட்மென்ட்டை ஷில்பா ஷெட்டி விற்று விட்டதாக கூறப்படுகிறது.

தொழிலதிபர் ஜார்ஜ் நெரயாபரம்பில்

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் வி. நெரியாம்பரம்பில் (George V. Nereamparambil) என்பவர் புர்ஜ் கலிஃபாவில் 22 குடியிருப்புகளை (Flats) சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த கட்டடத்தில் அதிக குடியிருப்புகளைச் சொந்தமாக வைத்திருக்கும் தனிநபராக இவர் கருதப்படுகிறார்.

இத்தாலிய கட்டட வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானி

இந்தியாலிய கட்டட வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானிக்குச் (Giorgio Armani) சொந்தமான அர்மானி ஹோட்டல் புர்ஜ் கலீஃபாவில் இயங்கி வருகிறது. இவருக்குச் சொந்தமாக அபார்ட்மென்ட் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்கள் தவிர அமெரிக்க நடிகர்கள் லின்ட்ஷே லோகன் (Lindsay Lohan), டாம் க்ரூஸ் ஆகியோருக்கும் புர்ஜ் கலீஃபாவில் அபார்ட்மென்ட்கள் உள்ளன.

ஒரு படுக்கையறை கொண்ட ப்ளாட் விலை எவ்வளவு?

புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை சுமார் ரூ. 7 கோடியில் இருந்து தொடங்குகிறது.

இரு படுக்கையறை கொண்ட அபார்ட்டெமென்டின் குறைந்தபட்ச விலை ரூ. 10.8 கோடியாக இருக்கும். அளவு, வெளிப்புற காட்சி ஆகியவற்றைப் பொறுத்து, விலை ரூ. 20–22 கோடி வரை உயரக் கூடும்.

இந்த கட்டத்தில் மிகவும் சொகுசான அபார்ட்மென்ட்களின் விலை குறைந்தது 200 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.