Life On Earth BBC
சினிமா

இயற்கையின் குரல்: டேவிட் அட்டன்பரோ 100

ஒரு சீரிய முன்னுரையை வழங்கிவிட்டு, படத்துக்குள் நுழையும்போது, ‘Welcome to our Planet Earth’ என்று நம்மைக் கைபிடித்து, நம் உலகுக்குள் கூட்டிச் சென்ற அந்தச் சிலிர்ப்பூட்டும் குரல் டேவிட் அட்டன்பரோவுடையது!

ஆதி தாமிரா

பொதுவாக எதற்கும் அத்தனை எளிதில் வியப்படையாத நான், 2008 சமயத்தில் ஒரு பணக்கார நண்பர் வீட்டில் முதன்முறையாக ஒரு எல்சிடி டிவியைப் பார்க்கிறேன். அதற்கு முன்னர் திரையரங்கிலும், டிவியிலும் பார்த்திராத துல்லியமான காட்சிகள் அதில் ஓடிக்கொண்டிருந்தன. இயற்கையை அப்படியே அள்ளிக்கொண்டு வந்த பேரழகு. இவ்வளவு துல்லியமாக ஆழ்கடலையும், அடர்வனத்தையும் படம் பிடிக்கும் கேமிராக்களும், தொழில்நுட்பமும் நம் காலத்திலேயே வந்துவிட்டதா என்றெண்ணி மனம் மயங்கிப்போனேன். அந்த நிகழ்ச்சி, பிளானட் எர்த் (Planet Earth) எனும் பிபிசியின் ஆவணப்படம். அதன் சிடித் தொகுப்பைக் கையில் ஏந்திப் பார்த்த போதுதான் இந்த உலகம் எத்தனைப் பெரியது எனும் உணர்வு எனக்குள் விரிந்தது. அந்த நிகழ்ச்சியின் பின்னணியில் ஈர்க்கும் குரல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது. ஒரு சீரிய முன்னுரையை வழங்கிவிட்டு, படத்துக்குள் நுழையும்போது, ‘Welcome to our Planet Earth’ என்று நம்மைக் கைபிடித்து, நம் உலகுக்குள் கூட்டிச் சென்ற அந்தச் சிலிர்ப்பூட்டும் குரல் டேவிட் அட்டன்பரோவுடையது! 

1950களின் தொடக்கத்திலிருந்து சுமார் 75 ஆண்டுகளாக இயற்கையின் குரலாக நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கும் டேவிட் அட்டன்பரோ (David Frederick Attenborough), இந்த மே மாதம் தனது 100வது வயதை நிறைவு செய்திருக்கிறார். இயற்கையின் மீதான தீராத காதலுடன் இயங்கி வரும் சர் டேவிட் அட்டன்பரோ, நவீன உலகின் மிகச்சிறந்த இயற்கை ஆர்வலர் மற்றும் ஆவணப்படக் கலைஞர் ஆவார்.

லண்டனில் பிறந்த டேவிட், சிறுவயது முதலே படிமங்கள் (Fossils) மற்றும் அரிய வகைக் கற்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். பிபிசி (BBC) நிறுவனத்தில் ஒரு சாதாரணத் தயாரிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தின் முகமாகவே மாறிப்போனார். ஆரம்பத்தில் விலங்குகளைக் கூண்டில் அடைத்துவைத்துக் காட்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, ஆய்வுகளை, ஆவணங்களை மாற்றி, விலங்குகளின் வாழ்விடத்திற்கே சென்று அவற்றை ஆய்வு செய்து படம் பிடிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். ஆவணப்படங்களின் போக்கையே மாற்றியமைத்தார்.

கருப்பு-வெள்ளை காலம் தொடங்கி, 4K தொழில்நுட்பம் வரை இயற்கையைத் திரையில் கொண்டு வருவதில் இவர் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறார். ஆழ்கடலின் அமைதி முதல் பனிப்பிரதேசத்தின் கடுங்குளிர் வரை எதையும் விட்டுவைக்காத இவரது உழைப்பு பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. லைஃப் ஆன் எர்த் (Life on Earth), தி லிவிங் பிளானட் (The Living Planet), அவர் பிளானட் (Our Planet), பிளானட் எர்த் (Planet Earth) போன்ற இவரது ஆவணப்படங்கள், உலகம் அதுவரை பார்த்திராத அளவில் ஒளிப்பதிவின் உச்சத்தைத் தொட்டன.

David attenborough

தொழில்நுட்பச் சாதனைகள் ஒருபுறமிருந்தாலும், இவரது நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆழமான பொருள் பொதிந்தவை. விலங்குகளின் உணர்ச்சிகளை, அவற்றின் வாழ்க்கை முறையை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்குவது இவரது தனிச்சிறப்பு. நாமே இயற்கையின் ஓர் அங்கம்தான், இயற்கையே மனித வாழ்வியலின் ஆதாரமாக இருக்கிறது, அது ஒரு பொக்கிஷம், அதைப் பாதுகாப்பது நமது முதல் கடமை எனும் செய்தியை தனது ஒவ்வொரு முன்னெடுப்பிலும் உணர்த்தியவர் டேவிட் அட்டன்பரோ. இந்த முதிர்ந்த வயதிலும், 'காலநிலை மாற்றம்' (Climate Change) குறித்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறார். ’மனிதகுலம் இந்தப் பூமியில் இன்னும் கொஞ்ச காலம் நீடித்து வாழ வேண்டுமென்றால், நாம் இயற்கையுடன் போரிடுவதை நிறுத்த வேண்டும்’ என்பதே டேவிட் நமக்குச் சொல்லும் செய்தி.

யங் வின்ஸ்டன் (1972), காந்தி (1982), சாப்ளின் (1992) போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநரும், நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோவின் (Richard Samuel Attenborough) இளைய சகோதரர் டேவிட் அட்டன்பரோ என்பது கூடுதல் தகவல். இவர் பெற்றுள்ள விருதுகளைப் பட்டியலிட இன்னொரு தனிக் கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். ஆனால், விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் டேவிட். இவராலேயே விருதுகள் சிறப்படைகின்றன.

’டேவிட் அட்டன்பரோ: எ லைஃப் ஆன் அவர் பிளானட்’ (David Attenborough: A Life on Our Planet) எனும் அவரது சுயசரிதை ஆவணப்படம் ஒன்று, மனிதன் எப்படி இயற்கையைச் சிதைத்தான் என்பதையும், அதைச் சரிசெய்ய நம் முன்னால் இருக்கும் கடைசி வாய்ப்புகளைக் குறித்தும் உருக்கமாகப் பதிவு செய்கிறது. டேவிட் அட்டன்பரோ வெறும் ஆவணப்படக் கலைஞர் மட்டுமல்ல; அவர் அழிந்து வரும் உயிரினங்களின், தாவரங்களின் சார்பாக நம்மோடு பேசவந்த இயற்கையின் தூதுவர். அவர் காட்டிய இயற்கையின் அழகைப் பார்த்து ரசித்த நாம், அவர் விடுக்கும் எச்சரிக்கைகளையும் ஏற்று இந்தப் பூமியைப் பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்.

”இயற்கை அற்புதமானது. அதன் ஆற்றலுக்கு முன்னால், நாம் ஈர்க்கப்படாமல் தப்பவே முடியாது. நாம் இதுவரை கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் விட அதிகமாக இயற்கை தன்னுள்ளே வைத்திருக்கிறது. அதை அப்படியே நம் எதிர்காலச் சந்ததியினருக்குக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று நமக்குத் தெரியும். அது நடக்கும் என்று நான் நம்ப விரும்புகிறேன்.”
-டேவிட் அட்டன்பரோ