Lovers Gemini AI
சினிமா

முற்றுப்பெறாத காதல்கள்!

முடிவடைந்த கதைகளை விட முடியாமல் போன கதைகளையே நாம் காலத்துக்கும் சுமக்கிறோம். தமிழ் சினிமா வரலாற்றில், 2000த்துக்குப் பிறகு வெளியாகி, அப்படித் தடம் பதித்த சில மறக்க முடியாத காதல் கதைகளுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஆதி தாமிரா

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றக் காதல்களை விட, தோல்வியடைந்த காதல்களே மக்களின் மனதிற்கு மிக நெருக்கமானவையாகவும், காலத்தால் அழியாத காவியங்களாகவும் மாறியிருக்கின்றன. மனித மனம் நிஜத்தில் மட்டுமின்றி, கதைகளிலும் மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளெல்லாம் தற்காலிகமானவை. தியேட்டரோடு அவை முடிந்து போய்விடுகின்றன. துயரத்தை மனிதர்கள் விரும்புவதில்லை எனினும், துயரம் அவர்களைப் பாதிக்கிறது, அதன் காயம் அவர்களின் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றுவிடுகிறது. முடிவடைந்த கதைகளை விட முடியாமல் போன கதைகளையே நாம் காலத்துக்கும் சுமக்கிறோம். தமிழ் சினிமா வரலாற்றில், 2000த்துக்குப் பிறகு வெளியாகி, அப்படித் தடம் பதித்த சில மறக்க முடியாத காதல் கதைகளுள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1. அழகி (2002)


குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வளர்ந்த ஒரு பெண்ணின் மீதான ஈர்ப்பு, ஒருவனுக்குக் காதலாக மாறுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தின் சமூகச் சூழல் காரணமாக அது சொல்லப்படாத காதலாகவே போய்விடுகிறது. காலத்தால், இருவரும் இருவேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காதலன், யாரும் தன் காதலியைப் பார்க்கவே கூடாத வகையில், வறுமையின் பிடியில், ஒரு நடைபாதைவாசியாகக் காண்கிறான். அந்தத் துயர் மிகுந்த இடம் பார்வையாளர்களின் மனதை இறுக்கிய, யாராலும் மறக்க முடியாத ஒரு காட்சியாக தமிழ்சினிமாவில் எப்போதும் நிலைபெற்று நிற்கும்.

2. காதல் (2004)


ஒரு வசதியான வீட்டுப் பெண்ணும், ஏழைப் பையனும் காதலிக்கிறார்கள் என்பது கதைகளிலும், சினிமாக்களிலும் காலம் காலமாக சொல்லப்படும் ஒரு கதைதான். ஆனால், அதை அத்தனை நிஜமாக, வீரியமாக தமிழ் மண்ணுக்கே உரிய தனித்துவத்தோடு திரையாக்கம் செய்த முதல் படம் காதல் என்றே குறிப்பிடலாம். முதிராத அந்தக் காதலர்கள் ஒரு கட்டத்தில் ஓடிப்போகிறார்கள். அப்படிச் செய்தால், அவர்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக, கசப்பானக் காட்சிகளாக விவரித்திருந்தது இந்தப்படம். படத்தின் இறுதியில் அந்த நாயகனுக்கு ஏற்படும் நிலை, பார்வையாளர்களை உறைய வைத்துவிடுகிறது.

3. 7G ரெயின்போ காலனி (2004)

7G Rainbow Colony

பொறுப்பு, கல்வி என எதன் முக்கியத்துவத்தையும் அறியாத ஒரு சாதாரண இளைஞன், ஓர் அழகான காதலில் விழும் போது தன்னை எப்படி மேம்படுத்திக் கொள்கிறான் என்பதைக் காட்டிய படம் இது. தாங்கமுடியாத இழப்பு ஒரு மனிதனை எப்படி மாற்றும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம். காதலி இறந்த பிறகு, அவளது நினைவுகளோடு வாழ அவன் முடிவெடுக்கும் இறுதிக்காட்சி பார்வையாளர்களை உலுக்கியது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்தப் படத்தை ஓர் உன்னதமான இடத்திற்குக் கொண்டு சென்றது.

4. விண்ணைத்தாண்டி வருவாயா (2010)


நவீன காலத்துக் காதல் தோல்வியின் அடையாளமாக மாறி நிற்கிறாள் இந்தப் படத்தின் நாயகி 'ஜெஸ்ஸி'. ’உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருந்தும், நான் ஏன் ஜெஸ்ஸியை காதலித்தேன்?’ என்ற கார்த்திக்கின் விடையில்லாக் கேள்வி, எத்தனையோ இளைஞர்களின் வலியைப் பிரதிபலித்தது. கவித்துவமான ஒளிப்பதிவு இந்தப் படத்தின் காட்சியழகை பன்மடங்கு பெருக்கிக் காட்டியது. க்ளைமாக்ஸில் அவர்கள் பிரிந்து சென்று, தத்தமது வாழ்க்கையைத் தொடரும் எதார்த்தமான முடிவு அனைவரையும் கலங்கச் செய்தது.

5. 96 (2018)


பள்ளிப் பருவத்தில் உருவான காதல், காலங்கள் கடந்தும் மாறாமல் இருப்பதைச் சொன்ன காவியம் 96. சூழ்நிலை ராமையும், ஜானுவையும் பிரித்ததும், எல்லோரையும் போல ஜானு தவிர்க்க முடியாமல், ஒரு மணவாழ்க்கைக்குள் போகிறாள். ஆனால், ராம் வேறு முடிவெடுக்கிறான். இருவரும் பல்லாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். அவர்களால் இணைய முடியாது என்ற அந்த உண்மை எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும், அவர்கள் என்ன பேசிக்கொள்ளப் போகிறார்கள் என்பதை மட்டுமே முன்வைத்து முழு கதையையும், ஒரு திரில்லர் கதைக்கு இணையாகச் சொல்லியது இந்தப்படம். இறுதியில் அந்த 'ஏர்போர்ட்' காட்சியில், ஜானு சென்றவுடன் ராம் தனித்து நிற்கும் அந்த விநாடிகள், தமிழ் சினிமா வரலாற்றில் கண்ணீரை வரவழைத்த மிகச்சிறந்த க்ளைமாக்ஸ்களில் ஒன்று.

ஏன் இந்தத் தோல்விகள் ரசிக்கப்படுகின்றன?


ஒரு கதாபாத்திரம் காதல் துயரில் கஷ்டப்படும்போது, பார்வையாளர்கள் தங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பதால், ஒரு அனுதாபம் உருவாகிறது. எல்லா காதல்களும் திருமணத்தில் முடிவதில்லை என்ற நிஜத்தை இத்தகைய படங்கள் பிரதிபலிப்பதால், இவை பார்வையாளர்களோடு எளிதில் ஒன்றிப்போகின்றன. மேலும், பெரும்பாலான காதல் தோல்விப் படங்களின் பலமாக, மிக வலிமையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் (BGM & Songs) அமைந்திருக்கின்றன. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், யுவன்சங்கர் என அனைவருமே சோக கீதங்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்கள். இவர்களால், அந்தப் பிரிவின் வலி, மாறாத வடுக்களாகிவிடுகின்றன.