எதிரிகளுடன் வீராவேசமாக சவால் விடுவது, 10 பேரை தூக்கிப் போட்டு பந்தாடுவது போன்ற காட்சிகளில், ரஜினிகாந்த் ரசிகர்களிடையே ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு புறம் வைத்து விட்டுப் பார்த்தாலும், இன்னொரு புறம் அவரது அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே அவரைத் தனியே ரசிக்க முடியும். அண்ணாமலையில் பாம்புக் காட்சி, ஊர்க்காவலனில் ராதிகாவின் அட்டகாசம், உழைப்பாளி படத்தில் கிழவராக வேடமிட்டு வந்து கவுண்டமணியை வெறுப்பேற்றும் காட்சி என புகழ்பெற்ற பல காட்சிகள் இருந்தாலும், ரஜினிகாந்தை ரசிக்க, அவரின் குறும்புத்தனம் மிளிரும், நுணுக்கமான இடங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
மன்னன் படத்தின் தொடக்கக் காட்சியில், சாந்தி தேவி நிறுவனத்தில் வேலை கேட்டு வருவார் ரஜினி. அனுமதிக்காகக் காத்திருக்கும்போது, வெளியே அலுவலகத்தில் ஐந்தாறு ஆண்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பக்கமே மறந்தும் திரும்பிவிடாமல், இருக்கும் பெண்கள் மீதே கவனமாக இருப்பார். ஸ்டைலாக கண்ணாடி போட்டுக்கொண்டு, ஒரு பெண்ணிடம், ‘வாட்டீஸ் யுவர் நேம்?’ என்று அவர் வழியும் அழகே அழகு. மேனேஜர் வந்து, ’அலோ, பொம்பளைங்க தவிர வேறு யாரும் உங்க கண்ணுக்கு தெரியாதா? கண்ணாடியைக் கழற்றிட்டு உள்ள போங்க’ என்று சொன்னதும், ‘வயித்தெரிச்சல் கேசு’ என்று நக்கல் செய்துவிட்டு உள்ளே போவார்.
ஊர்க்காவலன் படத்தில், ராதிகாவின் காதல் தொல்லையில் சிக்கியிருப்பார் ரஜினி. நடு இரவில் இட்லி சுட்டு வைத்துக்கொண்டு ரஜினியைக் கொடுமையெல்லாம் படுத்தி முடித்த பின்னர், சந்தைக்கு அழைத்துச் சென்று போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வார் ராதிகா. அந்த ஸ்டுடியோவில் பிறை நிலா போன்றதொரு செட் ஒன்றைச் செய்து வைத்திருப்பார்கள். விருப்பமே இல்லாமல், ராதிகாவோடு அதில் ரஜினி உட்கார்ந்திருக்கும் அழகைப் பார்க்க வேண்டுமே!
தம்பிக்கு எந்த ஊரு படத்தில், செந்தாமரையின் வீட்டில் விருந்தாளியாகத் தங்கும் ரஜினி முதல் நாளில் சாப்பிட அமருவார். இலையில், கேப்பைக்களியும், மிளகாயும் வைக்கப்பட்டிருக்கும். ‘இந்த இட்லி தோசையெல்லாம் உங்கள் வீட்டில் செய்யமாட்டீர்களா?’ என்று அவர் கேட்கும்போது, ரொம்ப இயல்பாக செந்தாமரை சொல்வார், ‘செய்வோமே, பொங்கல் தீபாவளிக்கு’! ‘ரொம்பத் தாராளம்தான்’ எனும் அவரது முகபாவனையையும், அந்தக் களியை அவர் பார்க்கும் அழகையும் இன்னொரு வாட்டி யூட்யூபில் தேடித்தான் பாருங்களேன்.
கைகொடுக்கும் கை படத்தில், பார்வையற்ற ரேவதியை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நடு முற்றத்தில் முக்காலியில் உட்கார்ந்து கொண்டு, அவருக்காக ரஜினி பாத்திரங்கள் தேய்த்துக் கொடுக்கும் அழகை விவரிக்க முடியுமா என்ன!
வேலைக்காரன் படத்தில், ரஜினிகாந்தை டீஸ் செய்வதற்காக மாறுவேடத்தில் வந்து இவர் வேலை பார்க்கும் ஹோட்டலில் வந்து அறையெடுத்துத் தங்கியிருப்பார் விகே.ராமசாமி. போதாத குறைக்கு, ரூம் சர்வீஸில் ரஜினியை அழைத்து ‘அது… அது… அந்த மாதிரி ஒரு பொண்ணு வேணும்’ என்று வெறுப்பேற்றுவார். பதிலுக்குக் கடுப்பான ரஜினி, ‘நீ என் தாத்தாவே இல்லை கிழவா! என் தாத்தா ரொம்ப ரொம்ப ரொம்ப உயர்ந்தவர். நீ ஒரு விஸ்கி கிழவா, பிராந்தி கிழவா, ஊர்சுற்றிக் கிழவா, ரவுடிக் கிழவா, பொறுக்கிக் கிழவா… பொம்பளைப் பொறுக்கிக் கிழவா!’ என்று திட்டிவிட்டு ஆக்ரோசமாக வெளியேறும் காட்சி, ரஜினியின் தனித்துவமான நகைச்சுவை உடல்மொழிக்கு உதாரணமான ஒன்று.
ரஜினிகாந்தின் நகைச்சுவையின் சிறப்பு, அது ஒரு தனியாக காமெடிக் காட்சியாக அமைக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் நடந்து செல்லும் விதத்தில், ஒரு வார்த்தையை உதிர்க்கும் தொனியில், யாரையாவது முறைத்துப் பார்க்கும் அந்த முகபாவனையில் இயல்பாகக் கலந்திருக்கிறது. அதனால்தான், அவரது படங்களை எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது ஒரு சின்ன நகைச்சுவை தருணம் நம் கவனத்துக்குக் கிடைக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல, திரையை மிக இயல்பாக ஆக்கிரமித்த அபூர்வமான எண்டர்டெயினராகவும் ரஜினிகாந்த் ஆனதற்கு, இந்த மாதிரியான நுணுக்கமான தருணங்களும் ஒரு முக்கியக் காரணம்தான்.