Paid Review  ChatGPT Image
சினிமா

விலை பேசப்படும் விமர்சகர்கள் #Manipulation

இன்னும் பல வழிகளில் இப்போது ஒரு திரைப்படம் திரையரங்கிற்கு வரும் முன்பே, அது குறித்த ஒரு பிம்பம் பொதுமக்களிடையே உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரமும், திட்டமிடப்பட்ட உத்திகளும் உள்ளன.

ஆதி தாமிரா

ஒரு சினிமாவின் வெளியீடு பல காரணங்களால் தள்ளிப்போய், கடைசியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட நாளிலும், தயாரிப்புத் தரப்புச் சிக்கல்களால் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் தொழில்முறை சிக்கல். அதற்காக, அந்தப் படத்தின் இயக்குநர் ஒரு விடியோ போட்டு சமூகவலைத் தளங்களில் புலம்பியழுவதை எப்படி எடுத்துக் கொள்வது? படத்தை வெளியிடுவதில் சிக்கலிருந்தால் அவர் சட்ட உதவியைத்தானே நாட வேண்டும்? அந்த அழுகைக்கு, படத்தின் மீதான ஒரு சிம்பதியை உருவாக்கிட வேண்டும் என்பது நோக்கம் இருக்குமா?

ஒரு படம் வெளியாகி, முதல் காட்சி முடிவிலேயே ஓர் இயக்குநர் தாம் ஒரு பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறி, வெறித்தனமாக கத்தி, கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி, அதை விடியோவாக பொதுவெளியில் பரப்புவதை எப்படி எடுத்துக்கொள்வது? படம் வெற்றி பெற்றிருக்கிறதா, மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறதா என்பதை அறியவும், உற்சாகத்தை வெளிப்படுத்தவும் ஒன்றிரண்டு நாட்கள் வரையாவது காத்திருக்க வேண்டமா? ஏன் இப்படியான அவசரக் கொண்டாட்டம் (Earlier celebration) இந்த அவசரக் கொண்டாட்டத்துக்கு, படம் மிகச்சிறப்பாக இருக்கிறது என்றொரு தோற்றத்தை ரசிகர்களிடையே உருவாக்குவது நோக்கமாக இருக்குமா? இவை எல்லாவற்றையும் ரசிகர்களின் மனநிலையைத் திரிக்கும் (Manipulation) செயல்களாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 

இதுமட்டுமல்ல, இன்னும் பல வழிகளில் இப்போது ஒரு திரைப்படம் திரையரங்கிற்கு வரும் முன்பே, அது குறித்த ஒரு பிம்பம் பொதுமக்களிடையே உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதாரமும், திட்டமிடப்பட்ட உத்திகளும் உள்ளன. அதில் மிக முக்கியமானவை 'பெய்டு ரிவியூ' (Paid Reviews) மற்றும் 'பி.ஆர் கலாச்சாரம்' (PR Culture).

போஸ்டர்களையும், துண்டறிக்கைகளையும், செய்தித்தாள் விளம்பரங்களையும் பார்த்துப் படம் பார்க்க வந்த காலம் மாறிவிட்டது. இப்போது விளம்பரங்களின் வடிவமே வேறாகியிருக்கின்றன. காலத்துக்கேற்ப விளம்பர ஊடகங்கள் மாறலாம், அதன் வடிவங்கள் மாறலாம், தவறில்லை. ஆனால், அதுவே போலிப்பிம்பங்களை உருவாக்கும் ஓர் ஏமாற்று வேலையாக மாறிப்போனால்? அப்படித்தான் ஆகியிருக்கிறது இன்றைய நிலைமை. படப்பிடிப்புத் தளத்திலிருந்து குழுவினருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டவை எனும் பெயரில், புகைப்படங்கள், மற்றும் விடியோக்கள் முதலில் வெளியாகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து வெளியாகும், டீஸர், ப்ரோமோ விடியோக்களை விடவும் இப்படியான எதிர்மறையான செய்திகள் மக்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால், அவை உண்மையிலேயே திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டவையா, அல்லது படக்குழுவினரே அப்படியானப் படங்களைக் கசியவிடுகிறார்களா என்பது தெரிவதில்லை. இவற்றின் மூலமாக அந்தப் படம் குறித்த தொடர்ச்சியான உரையாடல்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்குகிறார்கள்.

யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு, டிவி, பத்திரிகை விமர்சனங்களை விட திரையரங்க வாயில் கருத்துகள் (Public Opinion), இன்ஸ்டா கருத்துகள் மற்றும் யூடியூப் விமர்சனங்களே ஒரு படத்தின் வெற்றியையே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன. ஆனால், இந்த மூன்று விசயங்களிலுமே சம்பந்தப்பட்டவர்கள் படக்குழுவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு உண்மைக்கு மாறாக விமர்சனம் செய்கின்றனர். மோசமான படங்களை, நல்ல படங்கள் என்று சொல்வது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு நல்ல படத்தை மோசமாக சித்தரிக்கும் வேலைகளும் கூட நடக்கின்றன.

இவர்களால், உண்மையான விமர்சனங்களுக்கும், விலைபேசப்பட்ட விமர்சனங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவது சிரமமாகிவிடுகிறது. ஒரு சராசரி ரசிகன் இந்த 'பெய்டு' பிம்பங்களை நம்பிப் பணத்தைச் செலவழித்து ஏமாற்றமடைகிறான். அதோடு நேர்மையாக சினிமாவை அணுக நினைக்கும் படைப்பாளிகளும் இதைச் செய்தாக வேண்டிய பியர் பிரஷருக்கு ஆளாகிறார்கள். விளம்பரங்களுக்காகவும், பி.ஆர் வேலைகளுக்காகவும் தயாரிப்பாளர்கள் செலவிடும் தொகை, படத்தின் பட்ஜெட்டில் ஒரு கணிசமான பகுதியை ஆக்கிரமிக்கிறது. இது சிறு முதலீட்டுப் படங்களுக்கு (Small Budget Films) மிகப்பெரிய சுமையாக மாறுகிறது.

இந்த நிலையை மாற்றிட ரசிகர்கள் முன்பை விட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரக்கப்பறக்க வெளியாகும் முதல் நாள் விமர்சனங்களை விட, அடுத்தடுத்த நாட்களில் வரும் பொதுமக்களின் கருத்தே உண்மையானது என்பதை அவர்கள் உணர வேண்டும். நம்பிக்கைக்குரிய ஆன்லைன் விமர்சகர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும், பிறரைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான், ஓர் ஆரோக்கியமான சூழல் உருவாகும். சினிமா என்பது ஒரு கலை மற்றும் வணிகம். அதில் விளம்பரம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த விளம்பரம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.