கடந்த 1976ம் ஆண்டு மே 14ம் தேதி அன்னக்கிளி படம் வெளியானது. கருப்பு வெள்ளைப் படங்கள் குறைந்து வண்ணப்படங்கள் வெளியான காலத்திலும், அன்னக்கிளி கருப்பு வெள்ளைப் படமாகவே வெளி வந்தது. சிவகுமார் ஹீரோ. சுஜாதா ஹீரோயின். இந்தப் படத்தில்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு , தமிழ் திரையுலகில் ஓர் இசையமைப்பாளர் அறிமுகமானார். அவர்தான் பண்ணைபுரத்து நாயகன். தமிழக மக்களின் மனதில் கோலோச்சும் இளையராஜா. இவரது இசையமைப்பில் இந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது.
குறிப்பாக, ஜானகி பாடிய 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடல் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கத் தொடங்கியது. அதேபோல, எஸ்.ஜானகி பாடிய மற்றொரு பாடலான 'சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்' என்ற பாடலும் செம ஹிட். அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் இந்தப் பாடல் தவறாமல் இடம் பிடித்தது.
'அன்னக்கிளி படத்துக்கு புதுமுகத்தை இசையமைப்பாளராகப் போட வேண்டாம்' என்று பலரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால், இளையராஜா மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையால் இசையமைப்பாளரை கடைசி வரை பஞ்சு அருணாசலம் மாற்றவில்லை. விளைவாக, தமிழ் திரையுலகுக்கு பெருமைமிகு இசையமைப்பாளர் புதியதாக கிடைத்தார். இளையராஜா மட்டுமல்ல, இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு கிடக்கும் தெங்குமரஹாடா என்ற சிறிய கிராமமும் தமிழகம் முழுவதும் பாப்புலரானது. ஆம்... அன்னக்கிளி படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது.
'அன்னக்கிளி' படத்தின் கதாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் , கிராமத்துச் சூழல் கதைக்காக ஒரு வித்தியாசமான கிராமத்தை தேடிக் கொண்டிருந்தார். அந்த தருணத்தில் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் ஒரு குடும்பம் போலவே செயல்படுவார்கள். படத்தின் ஹீரோ சிவகுமார் கோவை மாவட்டத்துக்கு சென்று லொகேஷன் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். படத்தின் இயக்குநர்கள் தேவராஜ்- மோகன், இயக்குநர் சுப்பு, மக்கள் தொடர்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர் சிவகுமார் ஆகியோர் உடனடியாகக் கிளம்பி கோவைக்கு வந்துள்ளனர். மூன்று நாள்கள் கோவையில் தங்கி பவானிசாகர் அணை பகுதியிலுள்ள கிராமங்கள், பேரூர் சுற்று வட்டார கிராமங்கள், பொள்ளாச்சி சேத்துமடையைச் சுற்றியுள்ள கிராமங்களைப் பார்த்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளனர். ஆனால், இந்த கிராமங்களில் எல்லாம் படக்குழுவினர் எதிர்பார்த்த ஏதோ ஒன்று மிஸ்ஸாகியுள்ளது. படக்குழுவினருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது, படத்தின் ஆர்ட் டைரக்டர் பாபு திடீரென்று , 'லொகேஷன் நான் கண்டுபிடிச்சுட்டேன்' என்று கத்தியுள்ளார். 'தெங்குமரஹாடாவில் படத்தை எடுக்கலாம்' என்று இயக்குநர்களிடத்தில் கூறியுள்ளார். 'தெங்குமரஹாடாவா? அப்படி ஒரு கிராமமா, அது எங்கே இருக்கிறது?' என்று இயக்குநர்கள் கேட்க, பவானிசாகர் அணையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த அழகிய கிராமத்தைப் பற்றி பாபு கூற தொடங்கியுள்ளார். அவர், சொல்லச் சொல்ல படக்குழுவினருக்குள் தெங்குமரஹாடா கிராமத்தைக் காண அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, படக்குழுவினர் தெங்குமரஹாடா புறப்பட்டனர். பவானி சாகரில் இருந்து காட்டுக்குள் சென்றபோது, அடர்ந்த வனத்தில் பாதை முழுவதும் யானைகள், மான்கள் மற்றும் மயில்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளன. ஒரு இடத்தில், மான் ஒன்று புலியால் அடிக்கப்பட்டு பாதி உடலுடன் கிடந்ததைக் கண்டு படக்குழுவினர் பயந்தே போனார்கள். ஒரு வித பீதியுடன் பயணித்தே தெங்குமரஹாடா சென்றடைந்துள்ளனர்.
தெங்குமரஹாடா என்றால், தென்னை மரங்கள் நிறைந்த பகுதி என்று அர்த்தம். கிராமத்தைச் சுற்றி அழகிய மாயாறு சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வாழைத்தோட்டம், வயல்வெளிகள் நிறைந்த கிராமத்தைப் பார்த்ததும் படக்குழுவினர் மயங்கியே போனார்கள்.
அப்போது, இந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் மட்டுமே வசித்தன. தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஒரு பேருந்து இயக்கப்படும். கிராம மக்களுக்கு வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே திரைப்படங்களைப் பார்த்திருந்தனர். மற்றவர்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. இந்த அழகிய கிராமமும் வெள்ளந்தி மக்களும் படக்குழுவினருக்குப் பிடித்துப் போக, உடனடியாக படப்பிடிப்பு தொடங்கியது.
சிவகுமார், சுஜாதா, ஜெயலட்சுமி, எம்.என். ராஜம், எஸ்.வி. சுப்பையா, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, ஸ்ரீகாந்த் என அனைத்து நடிகர்- நடிகைகளும் அந்த கிராமத்தில் தங்கி நடித்தனர். தங்கள் வீடுகளை நடிகர், நடிகைகள் தங்குவதற்காக கிராம மக்கள் கொடுத்தனர். கழிப்பறை வசதி இருந்த வீடுகளில் நடிகைகள் தங்கினர். நடிகர்கள் உள்ளிட்ட பிற கலைஞர்கள் இயற்கை உபாதையைக் கழிக்க மாயாறு நதிக்கரைதான் உதவிகரமாக இருந்துள்ளது.
தேவராஜும் மோகனும் தெங்குமரஹாடாவில் 20 நாட்களில் 70 சதவீத படப்பிடிப்பை முடித்தனர். இளையராஜா இசையமைத்த “மச்சானப் பார்த்தீங்களா,” “அன்னக்கிளி உன்னைத் தேடுதே,” “சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தா வேணும்” ஆகிய பாடல்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. இந்த கிராமத்தில் ஹோட்டல் எல்லாம் கிடையாது. 20 நாட்கள் நடந்த படப்பிடிப்பின் போது, நடிகர் நடிகைகளுக்கு கிராம மக்கள் தங்களால் முடிந்த உணவைத் தயாரித்துக் கொடுத்தனர். நடிகர் சிவகுமார் ஒரு நாள் மதியம் மாதம்பட்டியில் இருந்து கிட்டத்தட்ட 100 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை தொக்கு வரவழைத்து உணவு வழங்கி மகிழ்ந்தார். அன்னக்கிளி படம் வெளியானதும், தெங்குமரஹாடா கிராமத்தின் அழகைக் கண்டு தமிழக மக்களும் அசந்து போனார்கள். தொடர்ந்து, ஏராளமானோர் இந்த கிராமத்துக்கும் வரத் தொடங்கினர்.
தெங்குமரஹாடா எங்கே உள்ளது... தற்போதைய நிலை என்ன?
தெங்குமரஹாடா கிராமம் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும், அங்கிருந்து நேரடியாகப் போக்குவரத்து இல்லை. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக மட்டுமே, இந்த கிராமத்துக்குச் செல்ல முடியும். பவானி சாகரில் இருந்து 22 கி.மீ தொலைவு அடர்ந்த வனத்தில் மண் பாதையில் பயணித்தால், தெங்குமரஹாடா கிராமம் வரும். அதற்கு, முன்னதாக மாயாறு ஒடும். ஆறு வரை, பஸ் செல்லும். பின்னர், பரிசலில் மாயாற்றைக் கடந்து கிராமத்துக்குள் போக வேண்டும்.
தற்போது, கிராம மக்கள் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தெங்குமரஹாடா கிராமம் முதுமலை புலிகள் வனக் காப்பக பகுதிக்குள் வருகிறது. இதனால், இங்கு வசித்து வரும் 495 குடும்பத்தினரை தமிழக அரசு, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது. தற்போது , சுற்றுலாப்பயணிகளுக்கோ வெளியூர் மக்களுக்கோ தெங்குமரஹாடா செல்ல அனுமதியில்லை.