Spielberg, Lucas, Cameron, Christopher Nolan, Peter Jackson 
சினிமா

ஹாலிவுட் பட ரசிகர்களே... இந்தப் பதிவு உங்களுக்குத்தான்! #TOP10 Directors #Hollywood

ஹாலிவுட்டின் கடந்த 50 ஆண்டுகளில், சற்றே கலைத்தன்மை மிகுந்த ஸ்டான்லி குப்ரிக், ஃப்ரான்சிஸ் போர்ட் கொப்பலா, மார்ட்டின் ஸ்கார்சஸி போன்ற முக்கியமான இயக்குநர்களை தவிர்த்துவிட்டு, கமர்ஷியல் ஏரியாவில் கலக்கிய ஆட்களைக் கவனிப்போம்.

ஆதி தாமிரா

சினிமா என்பது ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம். திரையரங்கிற்கு வரும் மக்களைத் தங்களது பிரம்மாண்டமான காட்சிகளாலும், விறுவிறுப்பான கதைகளாலும் கட்டிப்போடும் மாயாஜாலம் தெரிந்தவர்கள்தான் வெகுஜன சினிமா இயக்குநர்கள். ஹாலிவுட்டின் கடந்த 50 ஆண்டுகளில், சற்றே கலைத்தன்மை மிகுந்த ஸ்டான்லி குப்ரிக், ஃப்ரான்சிஸ் போர்ட் கொப்பலா, மார்ட்டின் ஸ்கார்சஸி போன்ற முக்கியமான இயக்குநர்களை தவிர்த்துவிட்டு, கமர்ஷியல் ஏரியாவில் கலக்கிய ஆட்களைக் கவனிப்போம். வசூலை அள்ளிக் குவித்து, ஹாலிவுட் படங்களை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த, உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட டாப் 10 இயக்குநர்கள் இதோ:

1. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) – King of Blockbusters


உலகளாவிய திரைப்பட வரலாற்றில் ‘பிளாக்பஸ்டர்’ (Blockbuster) எனப்படும் பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களின் சகாப்தத்தை உருவாக்கியதில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். கோடைக்கால, விடுமுறைக்கால கொண்டாட்டங்களுக்கான பிரம்மாண்டமான சினிமாக்கள் எனும் யோசனையைத் தொடங்கியவரும் இவர்தான். ஸ்பீல்பெர்க்கின் திரைப்படங்கள் பெரும்பாலும் மனித உணர்வுகள், வியப்பூட்டும் கற்பனை உலகங்களை மையமாகக் கொண்டிருக்கும். எளிமையான கதைகளை பிரம்மாண்டமான காட்சிகளாக மாற்றுவது இவரது தனிச்சிறப்பு.

  
கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: ஜாஸ் (Jaws - 1975), ஜுராசிக் பார்க் (Jurassic Park - 1993) ஈ.டி (E.T. the Extra-Terrestrial), இண்டியானா ஜோன்ஸ் (Indiana Jones), க்ளோஸ் என்கௌண்டர் ஆஃப் தி தேர்ட் கைண்ட் (Close Encounters of the Third Kind).

2. ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) – King of Box office


உலகளவில் அதிக வசூல் செய்த முதல் நான்கு திரைப்படங்களில், மூன்று திரைப்படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். கேமரூன் தனது படங்களுக்காக நவீன கேமராக்கள், மோஷன் கேப்சர் (Performance Capture) மற்றும் மேம்பட்ட கணினி வரைகலை (CGI) போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறார். ரசிகர்களை விழியிமைக்காமல் பார்க்க வைக்கிற, வியக்க வைக்கிற வித்தையில் கை தேர்ந்தவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: ஏலியன்ஸ் (Aliens), டெர்மினேட்டர் 2 (Terminator 2: Judgment Day), ட்ரூ லைஸ் (True Lies), டைட்டானிக் (Titanic - 1997), அவதார் (Avatar - 2009).

3. கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) – King of Mind-bending Cinema


காலத்தின் பரிமாணங்களை மாற்றியமைத்து, பார்வையாளர்களின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் அறிவியல் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். நோலனின் திரைப்படங்களின் மிகப்பெரிய பலம் திரைக்கதை. நேர்கோட்டில் இல்லாமல், முன்னும் பின்னுமாகச் செல்லும் விவரிப்பு (Time loops and non-linear narrative) இவரது தனிமுத்திரை. இயற்பியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்களை மிகத் துல்லியமாகத் திரையில் கொண்டுவருபவர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CGI) காட்சிகளை விட, முடிந்தவரை நிஜமான காட்சிகளைப் படமாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: 'Memento' (2000), இன்செப்ஷன் (Inception - 2010) இன்டர்ஸ்டெல்லார் (Interstellar - 2014) டெனெட் (Tenet - 2020) ஓப்பன்ஹைமர் (Oppenheimer - 2023).

4. ஜார்ஜ் லூகாஸ் (George Lucas) – King of the Galaxies


ஹாலிவுட் சினிமாவின் அறிவியல் புனைகதை மற்றும் கற்பனை உலகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்த படைப்பாளி ஜார்ஜ் லூகாஸ். விண்வெளி சாகசப் படங்களின் (Space Opera) சகாப்தத்தை உருவாக்கி, உலகளாவிய பாப் கலாச்சாரத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் இவர். திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்படும் வணிகப் பொருட்களின் (Merchandising) சந்தையை வேறு தளத்துக்குக் கொண்டு போனவை இவரது படங்கள்தான். நவீன திரைப்படங்களுக்கான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (VFX) நிறுவனமான Industrial Light & Magic (ILM)-ஐ உருவாக்கியவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: அமெரிக்கன் கிராஃபிடி (American Graffiti), ஸ்டார் வார்ஸ் (Star Wars - 1977).

5. பீட்டர் ஜாக்சன் (Peter Jackson) – King of Fantasies


பிரம்மாண்டமான நாவல்களைத் திரைப்படமாக மாற்றுவதிலும், கற்பனை உலகங்களை (Fantasy Worlds) தத்ரூபமாகத் திரையில் கொண்டுவருவதிலும் நிகரற்றவர் பீட்டர் ஜாக்சன். நிஜத்தில் இல்லாத ஒரு மாய உலகத்தை, அங்கே வாழும் உயிரினங்கள் மற்றும் தனித்துவமான மொழிகளுடன் தத்ரூபமாக செதுக்குபவர். அவரது குழந்தைப் பருவத்தை அழகாக்கிய கிங்காங் படத்தை, புதிய தொழில்நுட்பத்தில் பிரமிக்கத்தக்க அளவில் மீளுருவாக்கம் செய்து உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கு மீண்டும் தந்தவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் (The Lord of the Rings Trilogy - 2001-2003), கிங் காங் (King Kong - 2005), தி ஹாபிட் (The Hobbit Trilogy - 2012-2014).

Michael Bay, Ridley Scott, Quentin Tarantino, David Fincher, Russo Brothers (Anthony J Russo, Joseph V Russo)

6. ரிட்லி ஸ்காட் (Ridley Scott) – King of Epic Worlds


ஹாலிவுட் சினிமாவின் பிரம்மாண்டமான காவியங்கள் மற்றும் அறிவியல் புனைகதை உலகங்களை மிகச்சிறப்பாகத் திரையில் கொண்டுவந்த பன்முகத்தன்மை கொண்ட இயக்குநர் ரிட்லி ஸ்காட். வரலாற்றுப் படங்கள் மற்றும் எதிர்கால உலகங்களை (Epic & Futuristic worlds) வடிவமைப்பதில் நிகரற்றவர். ஒவ்வொரு காட்சியையும், ஓவியம் போல செதுக்குவது இவரது வழக்கம். ஒளி மற்றும் நிழலின் பயன்பாட்டைத் தனது படங்களில் மிக நேர்த்தியாகக் கையாண்டவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: பிளேட் ரன்னர் (Blade Runner - 1982), தெல்மா அண்ட் லூயிஸ் (Thelma & Louise), கிளாடியேட்டர் (Gladiator - 2000), தி மார்ஷியன் (The Martian - 2015).

7. குவெண்டின் டொராண்டினோ (Quentin Tarantino) – King of Stylized Violence


தனித்துவமான மற்றும் ஸ்டைலான வன்முறைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் குவெண்டின் டொராண்டினோ. திரைப்படங்களின் வழக்கமான இலக்கணங்களை உடைத்து, அசாத்தியமான காட்சியமைப்புகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை வியக்க வைத்தவர். வன்முறையை வெறுமனே காட்டாமல், அதனை ஒரு கலை மற்றும் கட்டமைக்கப்பட்ட சண்டை போல (Choreographed Action) ஸ்டைலாகக் கையாள்வது இவரது தனித்திறன். இவரது கதாபாத்திரங்கள் தத்துவார்த்தமான மற்றும் நகைச்சுவை கலந்த வசனங்களுக்குப் புகழ்பெற்றவை.

  
கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: பல்ப் ஃபிக்ஷன் (Pulp Fiction - 1994), கில் பில் (Kill Bill - Vol. 1 & 2), ஜாங்கோ அன்செயின்ட் (Django Unchained - 2012), இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds - 2009).

8. மைக்கேல் பே (Michael Bay) – King of Explosions


காட்சிக்குக் காட்சி அதிவேக கேமரா அசைவுகள், பிரமிக்க வைக்கும் வெடிப்புகள், பிரம்மாண்டமான அதிரடிச் சண்டைக்காட்சிகள் மற்றும் கார் சேஸிங் காட்சிகளைத் திரையில் கொண்டுவந்து ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்தவர் இயக்குநர் மைக்கேல் பே. இவரது அதீத அதிரடி மற்றும் பிரம்மாண்டத்தைக் குறிப்பதற்காகவே ஹாலிவுட்டில் 'Bayhem' (Bay + Mayhem) என்ற புதிய சொல் உருவானது. நிஜ கார்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ தளவாடங்களைப் பயன்படுத்தி நிஜமான வெடிப்புகளை (Practical Effects) உருவாக்கி காட்சிகளின் நம்பகத்தன்மையை துல்லியமாக்கியவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: தி ராக் (The Rock - 1996), ஆர்மகெடான் (Armageddon - 1998), பேட் பாய்ஸ் II (Bad Boys II - 2003), டிரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers – 2007)

9. டேவிட் ஃபின்ச்சர் (David Fincher) – King of Thrillers


ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் போன்ற முன்னோடிகளின் பாதையில் திரில்லர் படங்களை ஆட்சி செய்தவர் டேவிட் ஃபின்ச்சர் (David Fincher). இவர் ஒரு காட்சியைப் படமாக்க நூற்றுக்கணக்கான டேக்குகளை எடுக்கக்கூடியவர், பெர்பெக்ஷனுக்காக அத்தனை மெனக்கெடுபவர் என்று சொல்லப்படுகிறது. இருளின், அடர் வண்ணங்களின் (Dark Aesthetics) அழகை அதிகமும் பயன்படுத்தியவர். அதன் மூலம் நம்மை பதற்றத்துக்கும், தீவிரத்துக்கும் ஆளாக்கியவர். மனிதர்கள் ஏன் குற்றம் செய்கிறார்கள், ஒருவரின் ஆழ்மனதில் என்ன நடக்கிறது போன்ற சிக்கலான வினாக்களைத் த்ரில்லர் கதைகள் மூலம் அணுகியவர்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவரது படங்கள்: செவன் (Se7en - 1995), பைட் கிளப் (Fight Club - 1999), தி சோசியல் நெட்வொர்க் (The Social Network - 2010), கான் கேர்ள் (Gone Girl - 2014).

10. Anthony J. Russo and Joseph Vincent Russo - Kings of Superheroes

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ கலாச்சாரத்தை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்கள், அந்தோணி ரூஸோ மற்றும் ஜோசப் வின்சென்ட் ரூஸோ (Anthony J. Russo and Joseph Vincent Russo) ஆகிய இரு சகோதரர்கள் ஆவர். இவர்கள் ரூஸோ பிரதர்ஸ் (Russo Brothers) என்றும் அழைக்கப்படுகிறார்கள். பல முன்னணிக் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் கையாள்வது மிகச்சவாலான ஒன்று. அதை எந்தவிதக் குழப்பமும் இல்லாமல், கதாபாத்திரங்களின் தன்மை கெடாமல் கையாள்வதிலும், வெறும் சண்டைக் காட்சிகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் தார்மீகச் சிக்கல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.


கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய இவர்களது படங்கள்: கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர் (Captain America: The Winter Soldier - 2014), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (Avengers: Infinity War – 2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (Avengers: Endgame - 2019).