Kara Movie Vels Film International
சினிமா

கர – விமர்சனம் #Kara

தனுஷ் மட்டுமல்லாது, இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இயக்குநர் விக்னேஷும், அவரது முதல் படமான போர்தொழிலும் கூட முக்கியமான காரணம்தான்.

ஆதி தாமிரா

ஒரு வங்கி, ஒரு கிராமத்திலிருக்கும் அப்பாவி விவசாயிகள் நிறைய பேருக்கு, நிலத்தை அடமானம் பெற்றுக்கொண்டு டிராக்டர் வாங்க லோன் கொடுக்கிறது. மழையை நம்பியிருக்கிற, விவசாயம் நிச்சயமில்லாத இராமநாதபுரம் விவசாயிகள் ஏன் அத்தனை ரிஸ்க் எடுக்கப்போகிறார்கள்? முதலில் எந்த வங்கியாவது இப்படி ரிஸ்க் எடுக்குமா? அத்தனை பேருமா முட்டாள்களாக இருப்பார்கள்? சொல்லப்போனால், பத்து பேர் சேர்ந்து கூட ஒரு டிராக்டர் வாங்கலாம் எனும் யோசனை கூட யாருக்காவது எழுந்திருக்கும். வீட்டுக்கு ஒரு சைக்கிள் வைத்துக்கொள்வது போல, ஒரு டிராக்டர் வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் ஓடாமல், பாழடைந்து நிற்கிறது, அதற்குக் காரணம் 90களின் தொடக்கத்திலிருந்த டீஸல் தட்டுப்பாடாம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்தான், ஆனால் விவசாயம் பொய்த்துப்போனதற்கு அதைத் தவிர படத்தில் வேறொன்றுமே காட்டப்படவில்லை. இந்தப் பிரச்சினையால், அப்பா கேஎஸ்ஆர் படும் துயரையெல்லாம் பார்த்து, மனம் பதறும் மகன் தனுஷ், அதே வங்கியைக் கொள்ளையடித்து சரி செய்ய நினைக்கிறார். செய்தாரா என்பது கதை!

ஓகே, இது பின்னணிக் கதைதானே, விவசாயம், லோன், கஷ்டம், அப்பாவை எல்லாம் விடுங்கள்; தனுஷ் பரபரப்பாகக் கொள்ளையடித்தாரா, சுவாரசியமாக இருந்ததா அதைச் சொல்லுங்கள் ஐயா என்கிறீர்களா? முதலில் இப்படியான பொறுப்பு மிக்க மகன் தனுஷ் ஏன் ஒரு திருடனாக இருக்க வேண்டும்? அவர் தொடக்கத்தில் ஒரு திருடனாக இருக்கிறார். வெளியேவும் திருடுகிறார், வீட்டில் ஏழைத்தகப்பன் சேமித்து வைத்திருக்கும் பணத்தையும் திருடிவிடுகிறார். படிக்கவில்லை, நல்ல வேலையில்லை. பெற்றோரின் அன்பையும், அவர்களின் பொருளாதாரக் கஷ்டத்தையும் புரிந்துகொள்ளாமல் வீட்டை விட்டும் ஓடிப்போகிறார். இப்படியான தனுஷின் கதாபாத்திர வார்ப்பின் மீது நமக்கெப்படி ஓர் ஆர்வம் ஏற்படும்? அவர் கொள்ளையடித்தால் என்ன, அவரை போலீஸ் பிடித்தால் நமக்கென்னவென்றுதான் தோன்றுகிறது.

வங்கிக் கொள்ளைக் காட்சிகளில் கூட நம்பகத்தன்மையில்லை. விட்டால், வங்கி ஊழியர்கள் அத்தனை பேரும், தனுஷ் வருகிறார் என்று தெரிந்தால், அவர்களாகவே கையைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு சுவரோரமாய் போய் நின்றுவிடுவார்கள் போலிருக்கிறது. ஆங்காங்கே சில நல்ல காட்சிகள் இருக்கின்றன, அவ்வளவுதான்.

தனுஷ் மட்டுமல்லாது, இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இயக்குநர் விக்னேஷும், அவரது முதல் படமான போர்தொழிலும் கூட முக்கியமான காரணம்தான். போர்தொழிலில் நம் அனைவரையும் தன் அருமையான திரைக்கதையால், கதாபாத்திர வடிவமைப்பால் கட்டிப்போட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தில் அந்த ஆளுமையை கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அருமையான 1990 ஆர்ட் ஒர்க், நடிகர்களின் நடிப்பு, சிறப்பான மேக்கப், இசை, ஒளிப்பதிவு என எல்லாம் பிரமாதமாக அமைந்திருக்கிறது. மேக்கப்பை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். வேறு கமிட்மெண்ட் இருக்கிறது, என் கெட்டப்பில் மட்டும் கைவைக்காதே என்று தனுஷ் சொல்லிவிட்டாரோ என்னவோ, அவரைத் தவிர, கேஎஸ்ஆர், எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், கருணாஸ், மமிதா பைஜு, சூரஜ், ஜெயராம் என ஒவ்வொரு நடிகரின் மேக்கப்பும் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமியோ ரோலில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் வியப்பூட்டுகிறார். இத்தனை இருந்தும் படம் நமக்கு ஏமாற்றத்தைத்தான் தந்திருக்கிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.