பாலிவுட்டின் மிகச்சிறந்த காதலர்களாக நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் பார்க்கப்படுகின்றனர். 'இருவருக்கும் கருத்து வேறுபாடுகள்.. பிரியப் போகின்றனர்' என்கிற வதந்திகளுக்கு மத்தியில் சமீபத்தில், இந்தத் தம்பதியினர் தங்களது 19வது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் . இந்தத் தருணத்தில் ஐஸ்வர்யா தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ந்திருந்தார்.
இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளி வந்த 'குரு' என்ற படத்தில் நடித்த போதுதான், காதலில் விழுந்ததாக பாலிவுட் உலகம் நம்பிக் கொண்டுள்ளது. ஆனால், தங்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து அபிஷேக் பச்சன் விரிவாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
"2000ம் ஆண்டு வாக்கில் 'Dhai Akshar Prem Ke 'என்ற படத்தில் நடித்த போதுதான் முதன் முதலில் ஐஸ்வர்யாவை நான் சந்தித்தேன். அந்தத் தருணத்தில் எங்களுக்குள் எந்த ரொமான்ஸ் உணர்வும் இல்லை. தொழில்ரீதியாக, நட்புரீதியாக மட்டுமே பழகினோம். அடுத்து சில ஆண்டுகளும் அப்படிதான் போனது. நட்பு மட்டுமே இருந்தது. 2006ம் ஆண்டு ஜே.பி. தத்தா (J P Dutta) இயக்கத்தில் 'உம்ரா ஜான்' என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான், எங்களுக்குள் நட்பை தாண்டிய ஓர் உணர்வு தோன்றியது. படப்பிடிப்பின் ஷெட்யூல்கள், நீண்ட நேரமாக இணைந்து பணியாற்றியது, ஒரே செட்டில் இருந்தது போன்றவை எங்களுக்குள் நெருக்கத்தை உருவாக்கியது. இதுபோன்ற அனுபவம் எங்களுக்கு மற்ற படப்பிடிப்பில் கிடைக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில்தான் எங்களுக்குள் காதலும் உருவானது.
2007ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் 'குரு 'என்ற படத்தில் நடித்தோம். மணி ரத்னம் எங்கள் இருவருக்குமே காட்ஃபாதர் போன்றவர். எங்கள் இருவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியவர். இந்தப் படத்தில் நடித்த போது, எங்களுக்குள் உறவு இன்னும் வளர்ந்து, வலுப் பெற்றது. இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ நியுயார்க் நகரில் நடைபெற்றபோதுதான் , நான் ஐஸ்வர்யாவிடம் என் காதலைத் தெரிவித்தேன். அவரும் ஏற்றுக் கொள்ள எங்கள் காதல், நீண்ட கால கமிட்மெண்டுக்குத் தயாரானது. இரு குடும்பத்தினரும் எங்கள் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பின்னர், அதே ஆண்டில் திருமணம் செய்து கொண்டோம்.
19 வருட கால பந்தம் இது. ஐஸ்வர்யா எனக்கு மனைவி; எனது மகளுக்கு தாயார் என்பது மட்டுமல்ல. எனது ஆத்மார்த்தமான துணையும் ஆவார். இன்று எனது மகளை உரிய மரியாதையுடன் வளர்த்து ஆளாக்கிய பெருமை ஐஸ்வர்யாவையே சேரும்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் இருக்கிறார். மகளுக்கு 16 வயதாகிறது. கடந்த ஆண்டில் ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் பிரிய போவதாக வதந்தி கிளம்பியது.
'தாஸ்வி' படத்தில் தன்னுடன் நடித்த நிம்ரத் கவுர் (Nimrat Kaur )என்ற நடிகையுடன் அபிஷேக் நட்பில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை நடிகை நிம்ரத் மறுத்திருந்தார். 'யார் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். நான் என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்' என்று நிம்ரத் பதிலடி கொடுத்திருந்தார். நடிகர் அபிஷேக் பச்சனும் மௌனமாக இருந்தார். இந்த நேரத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ஐஸ்வர்யா தனது மகளுடன் தனியாக வந்தார். அப்போதிருந்து, அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விடப் போவதாக வதந்தி கிளம்பியது. தற்போது, இந்த வதந்திகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐஸ்வர்யா பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் அபிஷேக்.
ஐஸ்வர்யா ராயை பற்றி இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நடிகை ஐஸ்வர்யாவை இன்ஸ்டாவில் 1.5 கோடி பேர் ஃபாலோ செய்கின்றனர். ஆனால், அவர் ஒரே ஒருவரைதான் ஃபாலோ செய்கிறார்... அது கணவர் அபிஷேக் மட்டும்தான்!
உலக அழகியும் அவரின் உற்றதுணையும் சீரும் சிறப்புமாக 20வது திருமண நாளைக் கொண்டாட வாழ்த்துகள்!