Independent Films 
சினிமா

சுயாதீன சினிமாக்கள்: சிக்கல்களும், தீர்வும்!

ஆதி தாமிரா

சமீபத்தில், இயக்குநர் விஜய் ஆம்ஸ்ட்ராங், குழந்தைகளை மையமாக வைத்து எழுதி, இயக்கி, உருவாக்கியிருந்த, ’வன மடி’ எனும் சுயாதீன சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னளவில் அது ஒரு சிறப்பான முயற்சியாகத்தான் தோன்றியது. முழுக்கத் தயராகி, சென்சார் சான்றிதழ் பெறப்பட்ட பின்னும் ஏன் இன்னும் தியேட்டர்களுக்கு இது வரவில்லை என்று நான் அவரிடம் கேட்ட போது, அவரிடம் பதிலில்லை! சுயாதீன சினிமாக்களின் இன்றைய கசப்பான நிலைமை இதுதான்.

ஒரு சுயாதீனத் திரைப்படத்தை (Independent Cinema) உருவாக்குவது என்பது ஒரு கலைப்பயணம் மட்டுமல்ல, அது ஒரு போர்க்களம். பெரிய நட்சத்திரங்களோ, கோடிக்கணக்கான முதலீடோ, பெரும் விளம்பரச் செலவுகளோ இல்லாமல், ஒரு கதையை மட்டுமே மூலதனமாக வைத்துப் படம் எடுக்கும் போராட்டம். அதிலுள்ள சவால்கள்தான் என்னென்ன?

சுயாதீன சினிமா (Independent Cinema): கதையே கதாநாயகன்!


சினிமா என்பது ஒரு கலை வடிவம் என்பதைத் தாண்டி, அது ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்ட சூழலில், 'சுயாதீன சினிமா' என்பது அதை இன்னும் கலைவடிவமாகவே நிலைத்திருக்கச் செய்ய அல்லது நிரூபிப்பதற்கான ஒரே வழியாகத் திகழ்கிறது. வணிகச் சூத்திரங்கள் (Commercial Formulas) எனும் விலங்குகளை உடைத்து, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான பார்வையைத் திரையில் கொண்டு வருவதே இதன் ஆதாரமான நோக்கம்.

1. எதிர்கொள்ளும் சவால்கள்


சுயாதீனத் திரைப்படங்களை உருவாக்குவதில் உள்ள சவால்கள் மலை போன்றன. நிதி திரட்டுதல்தான் இந்தச் செயல்பாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய சவால். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தயாரிப்பாளர்கள், கலை முயற்சிகளுக்குப் பணம் முதலீடு செய்யத் தயங்குவார்கள். பெரும்பாலும் 'கூட்டு முதலீடு' (Crowdfunding) அல்லது தனிநபர்களின் சொந்த சேமிப்பை நம்பியே இந்தப் படங்கள் தொடங்கப்படுகின்றன. அடுத்து வருவது, தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு. குறைவான பட்ஜெட்டில் தரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சிரமமானது. ஆனால், சினிமா எனும் கலையின் மீது தீராத காதல் கொண்ட கலைஞர்கள் இணையும்போது அவ்வப்போது இது சாத்தியமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படியே ஒரு நல்ல படத்தை எடுத்து முடித்தாலும், விநியோகம் மற்றும் திரையிடல் (Distribution and Screening) எனும் இறுதிக்கட்டம், இன்னும் கடினமானதாக மாறியிருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள சூழலில், சிறிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை, அல்லது மிகக் குறைவான காட்சிகளே ஒதுக்கப்படுகின்றன. மாறாக, அவற்றுக்கு நியாயமான அரங்குகள் கிடைத்திட வேண்டும். ஒரு சினிமாவை மக்கள்தான் தங்களுக்குப் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர, அது யாரோ சில வியாபாரிகளின் முடிவாக மட்டுமே ஆகிவிடக்கூடாது.

Irai Movie

2. கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

  
இத்தனைச் சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய டிஜிட்டல் உலகம் சுயாதீன சினிமாவுக்கான ஒரு பொற்காலமாக உருவாக்கியுள்ளது. இன்று, உங்கள் கதைகளைப் படமாக்க விலையுயர்ந்த கேமராக்கள் தேவையில்லை. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் அல்லது குறைந்த விலையிலான டிஜிட்டல் கேமராக்கள் மூலமே உலகத்தரம் வாய்ந்த காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். திரையரங்குகள் படைப்பாளிகளைக் கைவிட்டாலும், சர்வதேசத் திரைப்படத் திருவிழாக்கள் (Film Festivals) மற்றும் OTT தளங்கள், யூடியூப் போன்றவற்றின் மூலமாக சுயாதீனப் படங்களை பார்வையாளர்கள் முன் வைத்துவிட முடியும். மேலும், இவை உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய உதவுகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் இயக்குநர்கள் தங்கள் படத்தைப் பார்வையாளர்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லவும் முடிகிறது. ஒரு சிறிய 'டிரெய்லர்' வைரலானால் போதும், அதுவே மிகப்பெரிய விளம்பரமாகிவிடும்.

சமீபத்தில், ஜெயச்சந்திர ஹஸ்மி எழுதி இயக்கி, யூட்யூபில் வெளியான பத்து நிமிட ‘இரை’ எனும் குறும்படம் பரவலாகப் பேசப்பட்டது. அனேக குறும்பட விழாக்களிலும் கவனிக்கப்பட்டிருக்கிறது.

3. சுயாதீன சினிமாக்களின் பலம்


சுயாதீன சினிமாவின் முதன்மையான பலம் 'படைப்புச் சுதந்திரம்' (Creative Freedom). இங்கே செயற்கையான எழுச்சியூட்டக்கூடிய சண்டைக் காட்சிகளையோ, நடனக்காட்சிகளையோ, காதல் காட்சிகளையோ தேவையில்லாமல் திணிக்க வேண்டிய அவசியமில்லை. சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளையும், அரசியலையும் எவ்வித சமரசமுமின்றிப் பேச முடியும். எளிய மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலை உயிர்ப்புடன் பதிவு செய்யமுடியும்.

சுயாதீன சினிமா என்பது ஒரு மாரத்தான் ஓட்டத்தைப் போன்றது. இதற்குப் பொறுமையும், விடாமுயற்சியும் மிக முக்கியம். வசூலை விட, ஒரு நல்ல படைப்பைத் தந்துவிட்டோம் என்ற மனத்திருப்தியே ஒரு சுயாதீன இயக்குநரின் மிகப்பெரிய ஊதியம். இறுதியாக, நல்ல கதைகளே, ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடிப்படைத் தேவையாக இருக்கின்றன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்!