’ஒலிதான் ஒரு படத்தின் பாதி உணர்ச்சிகளைத் தீர்மானிக்கிறது. ஒரு பார்வையாளனின் கண்களைக் காட்டிலும், அவனது செவிகளின் வழியாகவே நான் அவனை எளிதில் எனது கதையுலகிற்குள் இழுத்துச் செல்கிறேன்.’ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg)
சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் (Visual Medium) என்று எப்போதும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சரியானதுதான். ஆனால், ஒரு சினிமாவின் ஆன்மா அதன் ஒலி வடிவமைப்பில் (Sound Design) தான் ஒளிந்திருக்கிறது. திரையில் ஓடும் ஒரு கற்பனையான காட்சியைப் பார்வையாளனின் மூளை ’நிஜம்’ என்று நம்புவதும் உண்மையில் இந்தச் சத்தங்களால்தான்.
1. SFX : Sound Effects- எதார்த்தத்தின் அடித்தளம்
ஒரு காட்சியில் நாம் காணும் பொருட்கள் மற்றும் மனிதர்களின் அசைவுகளுக்கு நம்பகத்தன்மை தருவது SFX எனப்படும் ஃபோலி (Foley) ஒலியமைப்புகள்தான். ஒரு கதாபாத்திரம் மரத்தரையில் நடப்பதற்கும், சிமெண்ட் தரையில் நடப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த ஒலியமைப்பே தீர்மானிக்கிறது. காய்ந்த சருகுகள் மிதிபடும் சத்தம் அல்லது ஒரு கதவு திறக்கும் மெல்லிய கிரீச் சத்தம் அந்தச் சூழலை உயிர்ப்புடன் மாற்றுகிறது. கேமராவில் காட்டப்படாத விஷயங்களைக் கூட ஒலியால் உணர்த்த முடியும். உதாரணமாக, ஒரு மூடிய அறைக்குள் இருக்கும் போது, தூரத்தில் கேட்கும் ஆம்புலன்ஸ் சத்தம் அல்லது மழையின் ஓசை போன்ற திரைக்கு வெளியே நடக்கும் சொல்லப்பட வேண்டிய நிகழ்வுகளைப் பார்வையாளனுக்குச் சொல்லாமல் சொல்கிறது ஒலியமைப்பு.
2. BGM : Background Music- உணர்ச்சிகளின் தூண்டுகோல்
ஃபோலி ஒலியமைப்பு ஒரு காட்சியை நிஜம் என நம்ப வைக்கும் போது, பின்னணி இசை நமது உணர்ச்சிகளோடு விளையாடுகிறது. இது பார்வையாளனின் இதயத் துடிப்பையே தீர்மானிக்கும் கருவியாக செயல்படுகிறது. ஒரு சோகமான காட்சியில் மெல்லிய வயலின் இசையோ அல்லது ஒரு பரபரப்பான சண்டைக் காட்சியில் அதிரடித் தாள இசையோ இல்லையென்றால், அந்தக் காட்சிகள் முற்றிலுமாக சிதைந்துவிடுகின்றன. திகில் படங்களில் திரையில் பயமுறுத்தும் உருவம் தோன்றுவதற்கு முன்பே வரும் அந்த விசித்திரமான இசைதான் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வருகிறது. இசையின் மூலம்தான் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்க முடியும். காட்சிகள் தோற்றுப்போகும் இடங்களை, பின்னணி இசை வென்று கொடுக்கிறது.
3. The Power of Silence- அமைதியின் அவசியம்
ஒலி வடிவமைப்பின் மிக உயரிய உத்தி 'அமைதி' (Silence). ஓர் இரைச்சலான சண்டைக் காட்சிக்கு நடுவே அல்லது ஒரு மிகப்பெரிய விபத்திற்குப் பிறகு வரும் திடீர் நிசப்தம், அந்தத் தருணத்தின் பாரத்தை அல்லது அதிர்ச்சியை பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கிறது. சில நேரங்களில் அதிகப்படியான இசையை விட, ஒரு கதாபாத்திரத்தின் 'மூச்சுக்காற்று' சத்தம் மட்டுமே கூட அந்தத் தருணத்தை வலிமையானதாக ஆக்கிவிடுகிறது. காதலுக்கு மரியாதை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சற்று நினைவு படுத்திப் பாருங்கள். ‘இவள் என் மருமகள், என்கிட்ட கொடுத்துடுங்க’ என்று ஸ்ரீவித்யா சொல்வதற்கு முன்னால் வரும் சில விநாடிகள் மௌனமும், அவர் கேட்டபின்பு வரும் தாளமும் மொத்தப் பார்வையாளர்களையும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டுபோனதை யார்தான் மறந்திருக்க முடியும்? அதுவே, The Power of Silence மற்றும் Background Music இரண்டுக்குமான அற்புதமான உதாரணம்.
4. Immersive Experience- ஒரு முழுமையான அனுபவம்
இன்றைய நவீனத் தொழில்நுட்பங்களான Surround Sound, Dolby Atmos போன்றவை மேற்சொன்ன ஒலியமைப்புகளை முப்பரிமாணத்தில் (3D) வழங்குகின்றன. ஒரு பறவை திரையில் இடமிருந்து வலமாகப் பறக்கும்போது, அதன் சிறகடிப்பின் சத்தமும் அதே திசையில் நகர்வது பார்வையாளனை அந்தக் கதையின் உலகிற்குள்ளேயே இழுத்துச் செல்கிறது.
சிறந்த ஒலி வடிவமைப்பு என்பது பார்வையாளனுக்குத் தனித்துத் தெரியக்கூடாது. அது அவனை அறியாமலேயே கதையோடு ஒன்றச் செய்ய வேண்டும். ஓர் ஒலிக்கலைஞனின் வெற்றி என்பது ஒரு சிறு மௌனத்தின் மூலம் பார்வையாளனை அழவைப்பதிலோ, ஒரு சிறு கீறல் சத்தத்தின் மூலம் அவனைப் பதற வைப்பதிலோதான் இருக்கிறது. மிகச்சிறந்த ஒலி வடிவமைப்பு என்பது கேட்கப்பட வேண்டியது அல்ல, உணரப்பட வேண்டியது.