actor madavan in his farm  instagram
சினிமா

"நானும் ஒரு விவசாயி!" #ActorMadhavan

இதற்காக, அண்ணனும் தம்பியும் அயராமல் உழைத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இங்கு, பல்வேறு மரங்களை நட்டிருந்தனர். நாட்டு தென்னைகளையும் நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள்.

எம். குமரேசன்

கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகர் மாதவனின் நண்பர்கள் வீட்டுக்குள் முடங்கி ஆம்லெட் போடுவது, உடற்பயிற்சி செய்வது என மும்முரமாக இருந்தனர். ஆனால், நடிகர் மாதவன் வித்தியாசமாக யோசித்தார். இந்த சமயத்தில், ஒரு தரிசு நிலத்தை வாங்கி விவசாயப் பண்ணையாக ஏன் மாற்றக் கூடாது என்று திட்டம் தீட்டினார். அதற்கு முன்னோட்டமாக, மும்பையிலுள்ள தனது வீட்டு மாடியிலேயே சுரைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், தக்காளி போன்றவற்றை பயிரிட்டு வளர்க்கத் தொடங்கினார். இப்படிதான், விவசாயப் பண்ணை அமைப்பதற்குத் தேவையான நுணுக்கமான விஷயங்களைக் கற்றார்.

பின்னர், தனது விவசாயப் பண்ணை உருவாக்கும் கனவை நோக்கி நகர்ந்தார். தனது சகோதரர் சுபயோகனுடன் சேர்ந்து பழனிக்கு அருகே ஒரு கிராமத்தில் தரிசு நிலத்தை வாங்கினார். பின்னர், அந்த நிலத்தை ஒரு விவசாயப் பண்ணையாக மாற்றுவதற்காக இருவரும் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். மண்ணின் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இயற்கை விவசாய முறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதற்காக, அண்ணனும் தம்பியும் அயராமல் உழைத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் இங்கு, பல்வேறு மரங்களை நட்டிருந்தனர். நாட்டு தென்னைகளையும் நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து, அவரது விவசாயப்பண்ணை மரம், செடிகொடிகளால் நிறைந்து பச்சை பசேலென மாறியது. நிலத்தில் மண்புழுக்கள் தென்படத் தொடங்கின. மரங்களில் பறவைகள் வந்து கூடு கட்டி ஆனந்தமாக வாழத் தொடங்கின.

மாதவனின் பண்ணையில் நடப்பட்டுள்ள நாட்டுத் தென்னை மரங்களில் கிடைக்கும் இளநீர் சுவை மிகுந்தது. கடந்த 2020ம் ஆண்டு அவர் வெளியிட்டிருந்த பதிவில், ''தமிழ்நாட்டின் பழனியில் தென்னை சாகுபடி செய்துள்ளோம். பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்தப் பண்ணையைத் தொடங்கியுள்ளேன். புதிய உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும். இது எங்களுக்கு அளித்த மனநிறைவைப் போலவே, உங்களுக்கும் இந்தப் பணி மனநிறைவை அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்த அற்புதமான இடத்தை விட்டுச் செல்வது வருத்தமாக இருக்கிறது. பழனி மக்கள் அனைவருக்கும் நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இப்போது, இந்த பண்ணையில் இளநீர் விளைந்து கொத்து கொத்தாக தொங்குகிறது. இது, நடிகர் மாதவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தப் பண்ணையில் காய்கறிகள் உள்ளூர் மக்களுக்கே சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

இது குறித்து நடிகர் மாதவன் அளித்த பேட்டியில், ''நாடு முழுவதும் கைவிடப்பட்டுள்ள தரிசு நிலங்களை விவசாயத்திற்கு உகந்த இடங்களாக மாற்றுவதற்கு இது ஒரு முன்மாதிரித் திட்டம் ஆகும். எனது வாழ்க்கையின் மிகவும் திருப்திகரமான அனுபவம். அந்தத் தரிசு நிலம் புத்துயிர் பெற்று, விளைச்சலைக் கொடுப்பதைப் பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருந்தது. நிலத்தைத் தயார் செய்வதிலிருந்து, கிணற்றில் என்ன வகை மீன்களை விட்டு வளர்ப்பது என்பது வரை, நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு பாடமும் விலைமதிப்பற்றது. பழனியில் நான் பெற்ற இந்த வெற்றி, இந்தியா - ஏன் - உலகம் முழுவதும் இதைச் செயல்படுத்த என்னை ஊக்குவித்துள்ளது'' என்கிறார்.