salman in panmasala advertisement  
சினிமா

பிரபலங்கள் பான்மசாலா விளம்பரங்களில் நடிக்கலாமா? வெடித்த சர்ச்சை! #SalmanKhan

'ஐந்து ரூபாய்க்கு விற்கும் பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவைப் பயன்படுத்த முடியும்? சல்மான் கானும் ராஜ்ஸ்ரீ பான் மசலா நிறுவனமும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்'' என்று குற்றம் சாட்டி கோட்டா நகர நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எம். குமரேசன்

நடிகர் சல்மான்கான், திரைப்படங்களைத் தாண்டி ஏராளமான விளம்பரங்களில் நடித்தும் வருவாய் ஈட்டி வருகிறார். சமீபத்தில் ராஜ்ஸ்ரீ பான் மசாலா என்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் “குங்குமப்பூ பூசப்பட்ட ஏலக்காய்” மற்றும் “குங்குமப்பூ பூசப்பட்ட பான் மசாலா” என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகர பாஜக தலைவரும் வழக்கறிஞருமான இந்தர் மோகன் சிங் ஹானி என்பவர், 'ஐந்து ரூபாய்க்கு விற்கும் பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவைப் பயன்படுத்த முடியும்? சல்மான் கானும் ராஜ்ஸ்ரீ பான் மசலா நிறுவனமும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்'' என்று குற்றம் சாட்டி கோட்டா நகர நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், பான்மசாலா கடுமையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்த விளம்பரம், பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களை உட்கொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கின்றன. ராஜ்ஸ்ரீ பான் மசாலா நிறுவனமும், அதன் விளம்பரத் தூதரான நடிகர் சல்மான் கானும், தங்கள் தயாரிப்பில் குங்குமப்பூ இருப்பதாகக் கூறி, அதை உட்கொள்ள இளைஞர்களிடத்தில் கூறுகின்றனர். சல்மான்கான் இளைஞர்களுக்கு ஒரு நெகடிவ் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களோ அல்லது திரைப்பட நட்சத்திரங்களோ குளிர்பானங்களைக் கூட விளம்பரப்படுத்துவதே இல்லை. ஆனால் , இந்திய நடிகர்கள் புகையிலையையும் பான் மசாலாவையும் விளம்பரப்படுத்த முன் வருகிறார்கள். வாய்ப்புற்று நோய் ஏற்பட பான் மசாலா முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, இளைஞர்களிடம் தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம்'' என்றும் தன் மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, நுகர்வோர் ஆணையம் மனுவை ஏற்றுக்கொண்டு, சல்மான் கான் மற்றும் ராஜ்ஸ்ரீ பான் மசாலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Shah Rukh Khan in vimal panmasala advt.

தொடர்ந்து, ஜனவரி 6ம் தேதி ராஜ்ஸ்ரீ பான் மசாலாவை புரமோஷன் செய்ய தடை விதித்தும், விளம்பரங்களை வெளியிடவும் தடை விதித்து ஆணையம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது. ஆனால், ஜெய்ப்பூர், கோட்டா உள்ளிட்ட நகரங்களில் ஜனவரி 9ம் தேதி வரை விளம்பர பதாகைகள் நீக்கப்படவில்லை. இது ஆணையத்தின் உத்தரவை மீறியதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கில் ஆஜராக சல்மான் கானுக்கு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சல்மான்கான் ஆணையத்தில் நேரடியாக ஆஜராகவில்லை. இதையடுத்து, இறுதியாக வரும் ஏப்ரல் 13ம் தேதி ஆணையத்தின் முன் ஆஜராக இறுதி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆஜராகவில்லையென்றால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

மேலும்,''சல்மான்கான் புகழ்பெற்ற நடிகராக இருப்பவர். எனினும், அவர் சட்டத்திற்குட்பட்டவர்தான். அவர் சட்டத்தின் முன் ஆஜராகாதது மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழக்க வைத்து விடும்' என்றும் நுகர்வோர் ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து, சல்மான்கான் தரப்பு ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு சென்றது. இந்த வழக்கில், 'தற்போது சல்மான்கான் நேரில் ஆஜராகத் தேவையில்லை' என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சல்மான்கானுக்கு தற்போதைக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

நடிகர் சல்மான்கான் மட்டுமல்ல கோடிகளில் குளிக்கும் மற்றொரு சூப்பர்ஸ்டரான ஷாருக்கானும் பான்மசாலா போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார். ஷாருக்கானின் சொத்து மதிப்பு 12,400 கோடி ஆகும். இந்தியாவிலேயே பணக்கார நடிகர் அவர்தான். ஒரு முறை பான்மசாலா விளம்பரத்தில் நடிப்பது குறித்து ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பிய போது, ''அது போன்ற பொருட்களுக்கு முற்றிலும் தடைவிதித்தால் நான் ஏன் நடிக்கப் போகிறேன். சிகரெட், பான் மசாலா போன்றவை சட்டப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கின்றன. அப்படியிருக்கையில், நடிகர்களை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள். வருவாயைத் தருவதால்தானே அவற்றை தயாரிக்கிறீர்கள். அதனால், எனது வருவாயைத் தடுக்காதீர்கள்'' என்று பதிலளித்தார்.