Censorship Gemini AI Image
சினிமா

தணிக்கை - ஜனநாயகத்தை என்ன செய்யும்? #CBFC

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (Central Board of Film Censors) என்றிருந்த பெயர், அதன் பிறகு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆதி தாமிரா

’ஒரு கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமையில்லை, கலை தனித்தியங்கக் கூடியது என்று சினிமா உலகமே ஒன்றிய அரசிடம் வாதாடி, அந்த வார்த்தையை நீக்கியப் பிறகும் அதைத் தமிழ் ஊடகத்துறை உட்பட அனைவருமே பயன்படுத்திக் கொண்டிருப்பது சரியல்ல. இனியாவது தணிக்கை எனும் வார்த்தைப் பிரயோகத்தை தவிருங்கள்’, என்று கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ரொம்ப காலமாக நாம் எல்லாருமே அப்படித்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவர் சொன்ன விசயம் எப்போது நடந்தது, நாம் ஏதும் கவனிக்காமல் விட்டுவிட்டோமா என்று ஆச்சரியத்தோடு தேடிப் பார்த்தால், அப்படி ஒரு சம்பவம் 1983ம் ஆண்டே நடந்திருக்கிறது. அதற்கு முன்பாக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (Central Board of Film Censors) என்றிருந்த பெயர், அதன் பிறகு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification) என்று மாற்றப்பட்டுள்ளது. வாரியத்தின் பெயர்தான் ஜனநாயக முறைப்படி மாற்றப்பட்டதே தவிர, அதன் செயல்பாடுகள் இன்று வரை அப்படியேதான் இருக்கின்றன.

கமல்ஹாசன் சென்சாருக்கு எதிரானவர். அவரின் கூற்றுகள், நிலைப்பாடுகள் அனைத்தும் பொருள் பொதிந்தவை. காட்சி ஊடகம் என்பதன் தீவிரத்தன்மையையும், அதன் தாக்கத்தையும் உணர்ந்து உலகமே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வியந்து நின்றது. நாடுகளும், அதன் தலைவர்களும் எதை நம் மக்களுக்குக் காட்டலாம், எதைக் காட்டக்கூடாது என்று அந்தக் கலை வடிவத்துக்குள் மூக்கை நுழைத்தார்கள். அதன் விளைவாக உருவானதே தணிக்கை வாரியங்கள். ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தின் திட்டம் வேறானதாக இருந்தது. அது காட்சி ஊடகத்தை, டிவி, இணையத் தொடர்புடன் கூடிய கணினி, பின் மக்களின் பங்களிப்புடன் கூடிய யூட்யூப் என வளர்த்தெடுத்து, இப்போது ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட் போன் எனும் ஊடகத்தைக் கொடுத்து, அதற்குள் ஓடிடி எனும் காட்சிச் சுரங்கங்களையும் வெட்டி வைத்துவிட்டது. டிவி, இணையம், யூட்யூப், ஓடிடி என இந்தக் காட்சிக் கடலை எப்படித் தணிக்கை செய்வீர்கள் என்று அறிவியல், ஆள்பவர்களைப் பார்த்துக் கேட்கிறது. இவ்வளவு ஆன பிறகும், சினிமாவை மட்டும் தணிக்கை செய்துகொண்டிருக்கிறீர்களே என்று உள்ளுக்குள் நகைத்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்! 

அப்படியானால், சினிமா தணிக்கை தேவையேயில்லையா? 

Censorship



அமெரிக்காவில் அரசின் நேரடித் தலையீடு இல்லாமல், அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு மூலமாக ரேட்டிங் (G, PG, R போன்றவை) வழங்கும் சுயக் கட்டுப்பாடு முறை நிலவுகிறது. ரேட்டிங்குக்கு ஏற்ப படங்களைத் திரையிடும் செயலும், பார்வையாளர்களின் வரவேற்புமே மாறுபடும். அதனால், நடைமுறைச் சந்தை அழுத்தமே ஒரு கட்டுப்பாடாக அங்கே செயல்படுகிறது. பிரிட்டனில் சான்றிதழ் முறை முக்கியமானது என்றாலும், சில நேரங்களில் காட்சிகளை மாற்றச் சொல்லும் நிலைப்பாடும் குறைந்த அளவில் நடக்கிறது. இதற்கு மாறாக, சீனாவில் National Radio and Television Administration அமைப்பு மூலம் அரசு நேரடியாக தணிக்கை செய்கிறது. அரசியல், மதம், வரலாறு போன்ற சென்சிடிவான விஷயங்களில் மிகக் கடுமையான கட்டுப்பாடு அங்கே நடைமுறையில் உள்ளது.

தணிக்கை என்பது இயக்குநர்களின், படைப்பாளிகளின் கற்பனைச் சுதந்திரத்தை, கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறது. அரசியல் விமர்சனங்கள் செய்ய அல்லது சமூக யதார்த்தங்களைத் துணிச்சலாகப் பதிய முடியவில்லை. இது அநீதி. தொலைக்காட்சி அனைவருக்கும் பொதுவாக ஒளிபரப்பப்படுகிறது (Push model), அதற்கே தணிக்கை இல்லாத போது, பயனர் தனக்குத் தேவையானதைத் தேடிப் பார்க்கும் சுதந்திரம் இருக்கக்கூடிய (Pull model) சினிமாவுக்குத் தணிக்கை என்பது அபத்தமானது. இதெல்லாம் தணிக்கைக்கு எதிரானவர்களின் வாதங்கள்.

அதே நேரம், ஆபாசம், வன்முறை மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற காட்சிகள் நம் குழந்தைகளை எளிதில் சென்றடைகின்றன; மதம், சாதி அல்லது தேச விரோதக் கருத்துகள் மூலம் வன்முறை தூண்டப்படவும், மனிதர்களுக்கு வெறுப்பு அதிகமாகவும், சமூகம் சீர்குலையவும் வாய்ப்பு அதிகமாகிவிடும் என்பதெல்லாம் தணிக்கைக்கு ஆதரவானவர்களின் கருத்துகளாக இருக்கின்றன. இதிலும் உண்மை இல்லாமலில்லை!

இதற்கான தீர்வுதான் என்ன?

தணிக்கை (Censorship) என்பதை விட ’வகைப்படுத்துதல்’ (Classification) என்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஒரு சினிமாவைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது என்பது தனிமனித உரிமை. அதே நேரம், சினிமாக்கள் சமூகத்தின் அமைதியையோ அல்லது குழந்தைகளின் எதிர்காலத்தையோ பாதிக்காத வகையிலும், சமூகத்தின் வளர்ச்சிக்கான அக்கறையோடும், உண்மையான விமர்சனங்களையும், சிந்தனைகளையும் தூண்டும் வகையிலும் உருவாக வேண்டியது படைப்பாளிகளின் பொறுப்பு. சினிமாவை அரசாங்கங்கள் கட்டுப்படுத்தும் காலம் கடந்துவிட்டது, இனி மக்கள் அதைக் கட்டுப்படுத்தும் காலம் தொடங்க வேண்டும்!