Rajini in Baasha 
சினிமா

ஹீரோ பில்டப் : எதிர்பார்ப்பும், யதார்த்தமும்!

டேய், அவரு பாம்பேல யாரு தெரியுமாடா? இந்த ரத்தம்லாம் அவருக்கு ஒரு மேட்டரே இல்லடா’ என்று திரைக்கு வெளியே ரசிகர்களான நாம் கொந்தளித்தோம். இதுதான் பெர்ஃபெக்ட் ஹீரோ பில்டப்புக்கான உதாரணம்!

ஆதி தாமிரா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் ஒரு காட்சி. ஆனந்தராஜ், ரஜினிகாந்தை ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி யார் என்று பார்வையாளர்களான நமக்குத் தெரியும். ஆனால், அது ஆனந்தராஜுக்கோ, பிறருக்கோ தெரியாது. ரஜினியின் முகத்தில் ரத்தம் வழிகிறது. பின்னணி இசை உணர்வெழுச்சியைத் தூண்டும் வண்ணம் பரபரக்கிறது. தம்பி ஓடிவந்து, ‘இப்படி அடித்துவிட்டுப் போகிறானே, உங்களுக்குக் கோபமே வராதா?’ என்று கேட்கிறார். அதற்கு நக்கலாக சிரித்துவிட்டுப் போகிறார் ரஜினிகாந்த். ‘டேய், அவரு பாம்பேல யாரு தெரியுமாடா? இந்த ரத்தம்லாம் அவருக்கு ஒரு மேட்டரே இல்லடா’ என்று திரைக்கு வெளியே ரசிகர்களான நாம் கொந்தளித்தோம். இதுதான் பெர்ஃபெக்ட் ஹீரோ பில்டப்புக்கான உதாரணம்!

சினிமாவில் 'ஹீரோ பில்டப்’ (Hero Build-up) காட்சிகள் பெரும் ஆரவாரமான உணர்வெழுச்சியைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வல்லவை. ஒரு சாதாரண கதாபாத்திரத்தை, பெரும் ஆற்றல் மிக்கவராகவோ அல்லது ஒரு பெரும் லட்சியத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவராகவோ முன்னிறுத்த இந்த நுணுக்கம் அவசியமானது. 

பில்டப் என்பது ஒரு வகையான புனைவாக்க வடிவம். ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, அதைப் பற்றிய கதைகள், பிற கதாபாத்திரங்களின் பயம் அல்லது வியப்பு ஆகியவற்றின் மூலமாக, அதன் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு செல்வதே இந்த உத்தி. கேமரா கோணங்கள் (Low angles), பின்னணி இசை (BGM), ஸ்லோ மோஷன் (Slow-motion) மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் ரியாக்‌ஷன் (Reaction shots) ஆகியவற்றைப் பயன்படுத்தி நாயகனுக்கு ஒரு 'உயர் பிம்பத்தை' அல்லது 'அசுர பிம்பத்தை' கட்டமைப்பார்கள். நாயகனின் முகத்தைக் காட்டாமல், அவரது கை, கால் அல்லது நிழலை மட்டும் காட்டி, இறுதியில் முகத்தைக் காட்டும் போது பார்வையாளர்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்துவார்கள்.

இதெல்லாம் சேர்ந்து ஓர் அநீதி நடக்கும்போது அல்லது வில்லன் பலமாக இருக்கும்போது, அந்தச் சூழலை உடைக்க நம் 'ஹீரோ' வந்துவிடுவார், அவர் வந்தால் அவ்வளவுதான் என்ற எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடம் ஒருவித 'Adrenaline Rush'-ஐ ஏற்படுத்துகிறது. 

ஆனால், இது சினிமாவுக்குத் தேவைதானா?

மேலே சொன்ன பாட்ஷா பட உதாரணமே, ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு பில்டப் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கும். இந்திய மற்றும் உலகளாவிய கமர்ஷியல் சினிமாவில் (Marvel படங்கள் உட்பட), ஹீரோ பில்டப் என்பது மிக அவசியமான ஒன்று. இது வசூலை ஈட்டுவதற்கான ஒரு முக்கியமான காரணியாக செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில் சாதாரண மனிதர்களாக இருக்கும் பார்வையாளர்கள், திரையில் ஓர் அசாத்தியமான நாயகனைப் பார்க்கும்போது ஒருவிதமான மனநிறைவைப் பெறுகிறார்கள்.

ஆனால், சில நேரங்களில், இப்படியான ஹீரோ 'பில்டப்' காட்சிகளால் கதையின் லாஜிக் மற்றும் ஓட்டம் சிதைந்துவிடுகிறது. பில்டப்புக்காகவே, கதைக்குத் தொடர்பில்லாத அறிமுகப் பாடல் அல்லது சண்டைக் காட்சிகள் வைக்கப்படும் போது படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகின்றன. மிகைப்படுத்தப்பட்ட பில்டப்கள், கதையின் யதார்த்தத் தன்மையை (Realism) கெடுத்துவிடுகிறது. இதனால் பார்வையாளர்களால் கதாபாத்திரத்தோடு ஆழமாக ஒன்ற முடியாமல் போய்விடுகிறது.

ஹீரோ பில்டப் என்பது சமையலில் சேர்க்கப்படும் 'மசாலா' போன்றது. அது சரியான அளவில் இருந்தால் மட்டுமே உணவின் சுவையை, கதையின் உணர்வைக் கூட்டமுடியும். ஆனால், மசாலாவே உணவாக மாறிவிட்டால் அதை யாராலும் ஏற்கவே முடியாது. போலவே, பில்டப் என்பது ரஜினிகாந்தாகவே இருந்தாலும், நடிகர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர அந்த நடிகருக்கானதாக இருக்கக்கூடாது. பில்டப் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பைக் காட்சிகளால் நியாயப்படுத்த முடியாவிட்டால், அந்த பில்டப்பே அந்த சினிமாவின் பெரும் பலவீனமாகவும் மாறிவிடும்!