வழக்கமாக, ஒரு படத்தின் முதல் பாகம் வெளியாகி அதன் வரவேற்பைப் பொறுத்தே இரண்டாம் பாகம் தொடங்கப்படும். அது தியேட்டருக்கு வருவதற்குள் அந்தப் படத்தின் மீதான நம் ஆர்வமே வடிந்துபோய் விடக்கூடும். ஆனால் துரந்தர் 2 அந்த நடைமுறையை மாற்றியிருக்கிறது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டு, தயாராக இருந்த இரண்டாம் பாகத்தை முதல் பாகம் வெளியான சில மாதங்களிலேயே, வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி கதைக்கான அவசியம், கதை மீதான நம்பிக்கைதான் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஒரு படத்தின் வெற்றியோ, வியாபாரப் பேராசையோ அதற்கான காரணமாகக் கூடாது.
அதிலும் முக்கியமாக, படம் சுமார் 3 மணி 50 நிமிடங்களுக்கு மேல் ஓடுவது, இன்றைய வேகமான சினிமா சூழலில் ஒரு சவாலான விசயம்தான்! 2000க்கு முன்பான இந்திய சினிமாக்கள் சராசரியாக 2.45 மணி நேரம் ஓடின. பாடல்கள், காமெடி டிராக்குகள், இன்டர்வல் பிளாக் என நமது சினிமா கட்டமைப்புதான் அதற்குக் காரணம். ஆனால், நகர்ப்புற பார்வையாளர்களின் கவன நேரம், வேகமான எடிட்டிங், OTTயின் தாக்கம் போன்ற காரணங்களால், இன்று அந்தச் சராசரி நேரம் சுமார் 2.15 மணி நேரமாகக் குறைந்திருக்கிறது.
இதற்கிடையில் ஹே ராம், தவமாய் தவமிருந்து, ஆர்ஆர்ஆர், லகான் போன்ற சில நீளமான படங்கள் விதிவிலக்காக அவ்வப்போது வந்தாலும், அவை அரிதானவைதான். இப்படியான சூழலில், 3 மணி 50 நிமிடங்கள் ஓடினாலும், பார்வையாளர்களின் கவனத்தையும், ஆர்வத்தையும் தக்க வைப்பதில் துரந்தர் 2 வெற்றி பெற்றிருக்கிறது.
தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் நுழைந்து தீவிரவாதச் செயல்கள் செய்வார்கள், அவர்களை முறியடிக்க எதிரிநாட்டுக்குள் இந்திய உளவு அதிகாரிகள் மாறு வேடத்தில், அண்டர்கவர் ஆபரேஷன் மூலமாகப் புகுந்து தீவிரவாத்தை முறியடிப்பார்கள் எனும் இந்தக்கதை நமக்குப் புதியதல்ல.
துரந்தர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத் தொடங்கும் இந்தப் படத்தின் கதை, நாயகன் ஏன் இந்த ஆபத்தான பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதிலிருந்து தொடங்கி, அவர் மெதுவாக எதிரி அமைப்பின் உச்ச நிலைகளுக்குள் ஊடுருவி, எப்படி அவர்களை உள்ளிருந்தே அழிக்கும் வேலையைப் பார்க்கிறார் என்பதை விவரிக்கிறது. இறுதிக்கட்டத்தில் உண்மை வெளியாகி, நாயகன் மெயின் வில்லனோடு ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டு ஜெயித்ததும் படம் முடிகிறது. எவ்வளவு பெரிய உலகப்போரையே, நமது ஆட்கள் படமாக எடுத்தலும், இந்த ஒண்டிக்கு ஒண்டி சண்டையை மட்டும் விடமாட்டார்களய்யா!
இந்தக் கதையமைப்பு காரணமாக, திரைக்கதை எவ்வாறு நகரும் என்பதை நம்மால் எளிதாகக் கணிக்க முடிவது பெரிய குறை. இருந்தாலும், சில நிஜ சம்பவங்களைக் கோர்த்த விதமும், மேக்கிங்கில் காட்டிய தரமும், அந்தக் குறையை ஓரளவுக்கு மறைக்கிறது.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் சண்டைக் காட்சிகள். மிகவும் தீவிரமாகவும், பரபரப்பாகவும் அமைந்துள்ளன. சண்டைகளின் கொடூரம் சில இடங்களில் அளவை மீறுகின்றன. அந்தக் காரணத்தால் இது சிறார் பார்க்க இயலாததாகி விடுகிறது. முதல் பாகத்தில் வில்லனாக வந்த அக்ஷய் கன்னா உருவாக்கிய அச்ச உணர்வு நினைவில் நிற்கும் வகையில் இருந்தது. அதே அளவிலான உளவியல் தாக்கத்தை இந்தப் படத்தில் மேஜர் இக்பால் வேடத்தில் வரும் அர்ஜுன் ராம்பால் முழுமையாக உருவாக்க முடியவில்லை எனலாம்.
நிஜ சம்பவங்களை இணைக்கிறேன் பேர்வழி என்று பிஜேபிக்கு பெரிய ஜால்ரா அடித்திருக்கிறார்கள். சில காட்சிகள், குறிப்பாக பணமதிப்பிழப்பு போன்ற விஷயங்களுக்கு தரப்படும் காரணம் எல்லாம் காதில், வாழைப்பூவைக் கட்டித் தொங்கவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. பிஜேபிகாரர்களே கூட, ‘அடாடாடா, கதாசிரியன் என்னமா சிந்திச்சிருக்கான், இந்த யோசனை நமக்குத் தோன்றாமல் போய்விட்டதே’ என்று வருந்துமளவுக்கு இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காரணத்தால், இந்தப் படம் நிச்சயம் தேசிய விருதுகளை அள்ளும். போரடிக்கவில்லை, அதனால் பார்க்கப் பரிந்துரைக்கலாம்.