வரலட்சுமி சரத்குமார் பல மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது, இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார் . அவர் இயக்கிய படம்தான் 'சரஸ்வதி' . இந்த படத்தின் டிரெய்லர் வெளீயீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் இன்னோரு வித்தியாசமான விஷயமும் நடந்தது. படத்தின் வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவியும் வரலட்சுமியின் தாயுமான சாயாதேவி பங்கேற்று நடிகை ராதிகா உள்பட அனைவரையும் பாராட்டி பேசியது அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் சாயாதேவி பேசியதாவது, ''சரத்குமார், ராதிகா, நிக்கோலஸ் ஆகியோரின் ஆதரவால்தான் வரலட்சுமியால் இத்தகைய விஷயங்களை சாதிக்க முடிகிறது. தாய்கிழவி படத்தில் சிறப்பாக நடித்த ராதிகாவுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் நடிப்பை கண்டு நான் வியந்து போகிறேன். இன்னும் பல சிறந்த படங்களில் நடித்து நீங்கள் புகழ் பெற வேண்டும் '' என்றார். மேலும், தூர்தர்ஷனில் தான் தொகுப்பாளராக பணியாற்றிய போது, நடிகை ராதிகாவை பேட்டி எடுத்த விஷயத்தையும் இங்கு அவர் நினைவு கூர்ந்தார் .
பொதுவாக, விவாகரத்து செய்து கொள்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடும் கோபத்தில் இருப்பார்கள். தனது கணவரை இரண்டாவதாக கட்டிய பெண்ணை வசை பாடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், சாயா தேவி மிகுந்த மெச்சூர்டாக இந்த விஷயத்தை அணுகுவதாகவும், இரு தனிநபர்களின் உரிமையையும் அவர் மதிக்கும் மனம் கொண்டவராக இருப்பதாகவும் இணையதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில், ''கடவுள் எங்கள் குடும்பத்தைக் கருணையுடன் நடத்துகிறார். வரலட்சுமியின் தாயான சாயாதேவியை நான் விவாகரத்து செய்திருந்தாலும், அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்'' என்று தனது முன்னாள் மனைவி குறித்து பெருமையாகப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1984ம் ஆண்டு நடிகர் சரத்குமார் சாயாதேவியை திருமணம் செய்தார். 2001ம் ஆண்டு சரத்குமார் சாயாதேவியைப் பிரிந்து , நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது, இந்தத் தம்பதிக்கு வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் இருந்தனர். நடிகை ராதிகாவுக்கு ரேயான் என்ற மகள் உண்டு. பின்பு, சரத்குமார் - ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். வரலட்சுமி நிக்கோலஸ் திருமணத்திலும் சாயாதேவி பங்கேற்றார். அன்னையர் தினத்தில் சாயாதேவி, ராதிகா இருவருக்குமே வாழ்த்துகள் கூறுவதை, வரலட்சுமி வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது, சாயாதேவி விவாகரத்து பெறும் பெண்களின் நலனை நோக்கமாகக் கொண்டு 'சேவ் சக்தி' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் விவகாரத்து பற்றி ஊடகம் ஒன்றுக்கு சாயாதேவி அளித்த பேட்டியில், ''திருமணம் செய்வதற்கு மனதளவில் நீங்கள் தாயாராக இருக்க வேண்டும். திருமணம் ஒருநாள் கூத்து கிடையாது. திருமண வாழ்க்கையில் பயணிக்க நீங்கள் அனைத்து விஷயங்களில் சரியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். அதெல்லாம் உண்மையான திருமணமே கிடையாது. நீங்கள் தவறான காரணத்துக்காகத் திருமணம் செய்தால் விவாகரத்தில்தான் போய் முடியும் ''என்று கூறியிருந்தார்.
'சரஸ்வதி 'படத்தை வரலட்சுமி மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் ஆகியோர் தங்கள் 'தோசா டைரீஸ்' பேனரின் கீழ் தயாரித்துள்ளனர். கிஷோர், நவீன் சந்திரா, பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், பிரியா மணி ஆகியோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். குழந்தைக் கடத்தலை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.