மல்லிகை பூ சூடிய நவ்யா நாயருக்கு நடந்த சோகம்  
சினிமா

15 செ.மீ மல்லிகைப்பூவுக்கு 1.25 லட்சம்!

எம். குமரேசன்

மலர்களை கண்டாலே மனம் மகிழும். சுற்றுப்புறத்தை நறுமணத்தால் நிரப்புத் தன்மை கொண்டது மல்லிகை பூக்கள். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை எந்த விழாவானாலும் பெரும்பாலான பெண்கள் முதலில் மல்லிகைப்பூவைதான் தலையில் வைப்பார்கள். அந்தளவுக்கு பெண்களிடத்தில் மல்லிகைப் பூவுக்கு தனி மவுசு உண்டு. அப்படிதான் ஓணம் பண்ணிகையை முன்னிட்டு மல்லிகைப்பூவை ஆசையுடன் தலையில் சூடியிருந்த நடிகை நவ்யா நாயர் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தால் அதிர்ந்து போய் கிடக்கிறார்.

சாதி, மத பேதமின்றி கேரளாவில் வெகு விமரிசையாயக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். உலகம் முழுக்கவுள்ளள மலையாளிகள் எந்த மதம், இனமாக இருந்தாலும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள். அந்தவகையில் ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த மலையாளிகள் சங்கமும் ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் தங்கள் தாய்நாடான கேரளாவிலிருந்து செலிபிரிட்டி யாராவது கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சங்க நிர்வாகிகள் கருதினர். இதையடுத்து, பிரபல நடிகை நவ்யா நாயரை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். நவ்யா நாயரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு உற்சாகமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார்.

நவ்யா நாயர் சிங்கப்பூர் வழியாக மெல்பர்ன் புறப்பட்டு சென்றார். ஆஸ்திரேலியா செல்லும்போது, நவ்யா நாயரின் தந்தை அவருக்காக மல்லிகைப்பூ வாங்கி வந்து கொடுத்துள்ளார். இதனை, 2 துண்டாக வெட்டி 15 செ.மீ கொண்ட மல்லிகைப்பூவை ஆஸ்திரேலியா சென்ற பிறகு சூடுவதற்காக தனது ஹேண்ட் பைக்கில் அவர் வைத்திருந்துள்ளார். மற்றொரு துண்டை தலையில் சூடியபடி விமானத்தில் இருக்கையில் இருந்தபடி நவ்யா புகைப்படம் எடுத்து, ஆஸ்திரேலியா செல்வதாக இன்ஸ்டாவில் புகைப்படமும் வெளியிட்டிருந்தார். ஆனால், ஆஸ்திரேலியா சென்ற பிறகு, மல்லிகைப்பூவால் தனக்கு தலைவலி வரும் என்று அப்போது நவ்யா நாயருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மெல்பர்ன் விமான நிலையத்தில் நவ்யா நாயர் இறங்கிய போது, அவரது ஹேண்ட் பேக்கில் மல்லிகைப்பூ வைத்திருந்ததற்காக 1.25 லட்சம் அபராதம் (1,980 ஆஸ்திரேலிய டாலர் )விதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளிடம் தனக்கு மல்லிகைப்பூ கொண்டு வருவதற்கு தடை இருப்பது குறித்து தெரியாது என்று நவ்யா நாயர் கூறியுள்ளார். ஆனால், 'தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்துங்கள் 'என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி விட்டனர்.

பொதுவாக, ஆஸ்திரேலியாவில் மல்லிகை பூ உள்ளிட்ட எத்தகையை வெளிநாட்டு தாவரங்கள், மலர்களை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் அந்த நாடு கடுமையான உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகிறது இது தெரியாமல் நவ்யா நாயர் சிக்கிக் கொண்டார் .

பின்னர், விக்டோரியாவில் நடந்த ஓணம் விழாவில் கலந்து கொண்ட நவ்யா நாயர் பேசுகையில், 'இது நான் தெரியாமல் செய்த தவறு. வேண்டுமென்று செய்யவில்லை. சட்டத்திற்கு எதிரான செயல்படுவள் நான் இல்லை. அப்படியிருந்தும், அபராதம் விதித்து விட்டனர். அந்த வகையில், 15 செ.மீ மல்லிகைப் பூவை 1.25 லட்சம் கொடுத்து வாங்கியது உலகத்திலேயே நானாகத்தான் இருப்பேன்' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும்போது நீங்கள் முன்னதாகவே என்னென்ன பொருட்களைக் கொண்டு வருகிறோம் என்று கூற வேண்டும். சில உணவு, தாவரப் பொருட்கள் அல்லது விலங்குகளுக்கு அந்த நாட்டில் அனுமதியிவ்லலை. ஆஸ்திரேலிய அரசு அனுமதித்தால் மட்டுமே அவற்றை கொண்டு செல்ல வேண்டும். நவ்யா நாயர் மல்லிகைப் பூவால் தனக்கு இத்தனை பெரிய தொகை அபராதம் இடப்படும் என அறிந்திருக்க மாட்டார்.

ஆனாலும் இணையத்தில் இது வெளியானதன் மூலம், அந்நாட்டின் விதிமுறைகளை மக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற்று வருகின்றனர் என்று ஒரு சாரார் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.