ARMurugadoss Sivakarthikeyan X
சினிமா

இன்னொரு 'துப்பாக்கி' யாகுமா மதராஸி?

விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் இயக்குநரும், விஜய் 'துப்பாக்கி’யைக் கொடுத்த ஹீரோவும் ஒன்று சேரும் படம் 'மதராஸி' என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆதி தாமிரா

GOAT படத்தில் கேமியோவில் வந்த விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கையளிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களிலும் அதைத்தாண்டியும் பரபரப்பாகப் பேசப்பட்டது.  அந்தக் கதைப்படி காட்சி அமைக்கப்பட்டிருந்தாலும்,  ‘இதுல வேற என்னமோ இருக்கு.. இனி அரசியலுக்குப் போறதால விஜய் தன்னோட இடத்துக்கு அடுத்து எஸ்கே வர்றதத்தான் அப்டி சொல்லிருக்காரு’ என்றெல்லாம் ஹேஷ்யங்கள் பேசப்பட்டன.

இந்நிலையில் செப்டம்பர் 5ல் வெளியாகிறது ‘மதராஸி’.  விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘துப்பாக்கி படத்தின் இயக்குநர் ஏஆர்.முருகதாஸின் படம் என்பதும், விஜயிடமிருந்து துப்பாக்கியை - படத்தில்- பெற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் ஹீரோ என்பதாலும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது மதராஸி. 

madharasi

ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன்  

விஜய் நடித்து, எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படத்தில் அசோஷியேட் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். அஜித்குமாரின் தீனா மூலம்  திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமானார். அஜித்துக்கு ‘தல’ பட்டத்தைக் கொடுத்ததே தீனா படம்தான். முருகதாஸ், பின்னாளில் துப்பாக்கி, கத்தி என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களை விஜய்க்குக் கொடுத்தார்.  

விஜய்காந்தின் ரமணா, சிரஞ்சீவிக்கு ஸ்டாலின்,  சூர்யாவுக்கு தமிழிலும் அமீர்கானுக்கு இந்தியிலும் கஜினி என்று ஹீரோக்களுக்கான மாஸ் படம் கொடுப்பதில் ஏஆர் முருகதாஸ் பேசப்படும் இயக்குநர். தர்பார் உட்பட ஒரு சில படங்கள் சரியாகப் போகவில்லை என்றாலும் ஹீரோக்களுக்கான மாஸ் காட்சியை படத்தில் தவறாமல் கொடுத்துவிடுவார். தீனாவில் ஒவ்வொரு ஆயுதங்களாக அஜித்குமார் எடுத்துவைக்கும் காட்சி, ரமணாவில் மகாநதி சங்கர் விஜயகாந்தைப் பார்த்ததும் தன் அடியாட்களிடம் ‘நமக்குலாம் கடவுள் நடக்கறதுக்குத்தான் கால் கொடுத்திரு..  அவருக்கு ஒதைக்கறதுக்குன்னே கொடுத்திருக்காரு’ என்று சொல்லும் காட்சி,   தர்பாரின் ரயில்வே ஸ்டேஷன் சண்டைக்காட்சி, கஜினி மொத்தப்படமுமே என்று ஹீரோ ராஜ்யம்தான்.

madarasi

இன்னொரு புறம் சிவகார்த்திகேயன்,  முருகதாஸுடன் கைகோப்பது இது முதன்முறை அல்ல. மெரினா, மனங்கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்றூ கிராமத்து சப்ஜெக்ட்களில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனை ஸ்டைலிஷ் ஹீரோவாக எல்லா செண்டரிலும் ஹிட் அடிக்க வைத்த மான் கராத்தே, ஏ.ஆர்.முருகதாஸின் கதைதான். அதன்பின் தான், சிவகார்த்திகேயன் எப்படிப்பட்ட சப்ஜெக்டிலும் பொருந்தும் ஹீரோவாக மாறி திரைத்துறையில் முன்னேறினார். குழந்தைகள், ஃபேமலி ஆடியன்ஸ் என்று  எம்ஜிஆர், ரஜினி, விஜய் பாணியிலேயே சிவகார்த்திகேயனும் பயணிக்கலானார்.

தேர்ந்தெடுத்து தன் பாதையில் போய்க்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அமரன் ஒரு பெரிய மைல்ஸ்டோன். திமிறும் உடலும், கோபமான கண்களும் என ராணுவ மேஜராகவே வாழ்ந்திருப்பார் சிவகார்த்திகேயன். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பதால் படத்தின் இறுதியில் அவர் இறந்துவிடுவார்.  ‘ஒரு தீபாவளி அன்று ஹீரோ இறப்பதாக இருக்கும் ஒரு படம் ஓடுமா?’ என்றெல்லாம் பேசப்பட்ட ஜோசியங்களைத் தாண்டி படம் வசூல் மழையைப் பொழிந்தது. 

Madarasi

அதற்குப் பிறகு வரும் படம் மதராஸி.  வசனங்களில் ஹைலைட்டாக எதாவது கொளுத்திப்போடும் ஏஆர். முருகதாஸ் மதராஸிலும் தன் பஞ்ச்சை வைக்கத் தவறவில்லை. துப்பாக்கி படத்தில் விஜயுடன் மோதும் வில்லன் வித்யும் ஜமால். மதராஸியிலும் அவர் தான் வில்லன். டிரெய்லரில் ‘துப்பாக்கி யார் கைல இருந்தாலும் வில்லன் நான்தான்’ என்று அவர் வசனம் பேச, சமூக ஊடகங்களில் அது பெரிதும் பேசப்பட்டது. இதுவும் இன்னொரு 'துப்பாக்கி' என்று பேசப்படும் அளவு ஹிட்டாகும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ஏற்கெனவே சொன்னது போல அஜித், விஜய், சூர்யா, அமீர்கான் என்று ஹீரோக்களுக்கான இயக்குநர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து என்ன தருவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இங்கே தர்பார், இந்தியில் சிக்கந்தர் இரண்டும் பெரிதாகப் பேசப்படும்படியாக இல்லாத நிலையில் ஏஆர். முருகதாஸுக்கு மதராஸியின் வெற்றி பெரிதும் தேவைப்படுகிறது . அமரனில் 300 கோடி எண்ணிக்கையைத் தொட்ட ஹீரோவான பிறகு சிவகார்த்திகேயனுக்கும் இது முக்கியமான படம்.

என்ன ரிசல்ட் என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்!