Thirukkural on Milk Bikis biscuits in Tamil Nadu. (Photo credit: Britannia)
வணிகம்

திருக்குறள் பிஸ்கட்; பிரிட்டானியாவின் விளம்பர யுத்தி!

பொட்டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்களில் திருக்குறளின் வரிகள் இடம் பெற்றுள்ளன. அந்த பிஸ்கட்களைச் சேகரித்து, அந்த வார்த்தைகளை ஒன்றிணைப்பதன் மூலம், குழந்தைகள் திருக்குறளை உருவாக்கலாம்.

எம். குமரேசன்

தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றாலும், 'பிரிட்டானியா மில்க் பிகிஸ்' (Britannia Milk Bikis) பிஸ்கட் வாங்கினால், ஒரு வித்தியாசமான விஷயத்தை நீங்கள் பார்க்கக் கூடும். ஆண்டாண்டு காலமாகத் தமிழக வீடுகளில் ஒரு முக்கிய சிற்றுண்டியான, பிஸ்கட்தான் அது. ஆனால், அதைத் திருப்பிப் பார்த்தால், ஒரு தமிழ்ச் சொல் உங்கள் கண்ணில் படக்கூடும். அது சாதாரண சொல் அல்ல; பிறப்பு முதல் இறப்பு மற்றும் அவற்றுக்கு இடைப்பட்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைக்கும் தொன்மையான தமிழ் அறநூலான திருக்குறளின் சொற்கள்தான் பிரிட்டானியாவின் பிஸ்கட்களில் இடம் பெற்றுள்ளன.

பிரிட்டானியாவின் மில்க் பிகிஸ் பிஸ்கட்டுக்கான இந்தப் பிரசாரம், சற்று வித்தியாசமானது. அதாவது, பிஸ்கட் பொட்டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்கள் ஒவ்வொன்றிலும் திருக்குறளின் ஒரு சொல் இடம் பெற்றுள்ளன. அந்த பிஸ்கட்களைச் சேகரித்து, அந்தச் சொற்களை ஒன்றிணைப்பதன் மூலம், குழந்தைகள் திருக்குறளை உருவாக்கலாம். இதனால், கற்றல் மற்றும் விடாமுயற்சி போன்ற பயிற்சி குழந்தைகளுக்கு உருவாகக்கூடும். இதற்கு 'திருக்குறள் சேலஞ்ச்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் அன்றாடம் சாப்பிடும் பிஸ்கட்டின் மூலம் திருக்குறளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே நோக்கம் என்கிறார்கள். வகுப்பறை தொடங்கி பொதுப் போக்குவரத்து, சுவர்கள், தொலைக்காட்சித் தொடர்கள், பட்டிமன்ற மேடைகள் எனத் தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே திருக்குறளுடன் சேர்ந்த வளர்ந்தவர்கள் தமிழர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் இயற்றப்பட்ட 133 அதிகாரங்களில் 1,330 குறள்களையும் கொண்ட இந்த நூல், அன்றாட வாழ்விற்கான மிகச் சிறந்த வழிகாட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பள்ளியில் கற்பதன் மூலம் பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த நூல் அறிமுகமானதே!

30 ரூபாய் விலை கொண்ட 150 கிராம் எடையுள்ள 'திருக்குறள் பிஸ்கட்'கள் வழக்கமான 'மில்க் பிகிஸ்' பிஸ்கட்களிலிருந்து சற்று மாறுபட்டவை. இவை மெல்லியதாகவும், அளவில் பெரியதாகவும் உள்ளன.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் பிரபாகர் என்பவர் கூறுகையில், "நான் 30 ரூபாய்க்கு இந்தப் புதிய பிஸ்கட் பாக்கெட்டை வாங்கினேன். அதில் சுமார் 20 பிஸ்கட்டுகள் இருந்தன; அவற்றில் இரண்டில் மட்டுமே திருக்குறளின் 'கசடற' மற்றும் 'கற்றபின்' ஆகிய சொற்கள் இடம்பெற்றிருந்தன.

எனவே, ஒரு முழுத் திருக்குறளையும் உருவாக்க நீங்கள் பல பாக்கெட்டுகளை வாங்க வேண்டியிருக்கும். ஒரு குறள் இரண்டு வரிகளையும், ஏழு சொற்களையும் கொண்டது. வார்த்தைகள் வெவ்வேறு பாக்கெட்டுகளில் இடம் பெற்றால், ஒரே ஒரு குறளை முழுமையாகச் சேர்ப்பதற்கே பல பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஒரு கலாச்சார முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டாலும், ஒரு கோணத்தில் பார்க்கும்போது, ​​பிஸ்கட்களை விற்பனை செய்வதற்கும் விற்பனையை அதிகரிப்பதற்குமான யுத்தியாகவே எனக்குத் தோன்றுகிறது ''என்கிறார்.

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், ''இரண்டு வாரங்களுக்கு முன்புதான் திருக்குறள் அச்சிடப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. தற்போதைக்கு மக்கள் இவற்றைத் தேடி வந்து வாங்குவதில்லை. விற்பனை வழக்கமான அளவிலேயே உள்ளது. அதேவேளையில், சில குழந்தைகள் இதைப் பற்றி அறிந்து கொண்டு திருக்குறள் பிஸ்கட்களைப் பெற்றோருடன் வந்து வாங்கிச் செல்கின்றனர். திருக்குறளை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. விற்பனை சூடுபிடிக்கக் காலம் பிடிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டானியாவின் மில்க்பிகிஸின் சந்தை மதிப்பு மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் கோடி. இதில்,90 சதவிகிதம் தமிழகத்தைச் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் காபி, பால், டீ, கட்டஞ்சாயா போன்றவற்றுடன் சேர்த்து மில்க் பிகிஸ் பிஸ்கட்டைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, திருக்குறள் பிஸ்கட்களை அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க, இந்த யுத்தியை பிரிட்டானியா நிறுவனம் கடைப்பிடித்துள்ளதாகத் தெரிகிறது.