moringa 
வணிகம்

ஆஸ்திரேலியாவில் முருங்கைக்குத் தடை! பின்னணி என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை, முருங்கை பாரம்பரிய உணவு. ஆனால், ஆஸ்திரேலிவைப் பொறுத்தவரை எந்த வரலாற்று சிறப்பும் இல்லாத, புது வகையான உணவாகவே பார்க்கப்படுகிறது.

எம். குமரேசன்

இந்தியர்களுக்கு முருங்கைக்காய் , முருங்கைக்கீரை முக்கியமான உணவு. இரும்புச்சத்து நிறைந்த முருங்கையை உண்பது உடலுக்கும் நல்ல பலத்தை கொடுக்கும் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. சாம்பாரில் மட்டுமல்ல இந்தியர்கள் சமைக்கும் பல வகைக் குழம்புகளில் முருங்கைக்காய் சேர்க்கப்படுகிறது. காரக்குழம்பு, மீன்குழம்பு, கருவாட்டுக்குழம்பு, கத்தரிக்காய் குழம்புகளில் முருங்கைக்காயைப் பயன்படுத்துவது இந்தியாவில் வழக்கம்.

முருங்கைக்காயை தனியாக அவியல் செய்து சாப்பிடும் வழக்கம் கூட இந்தியர்கள் மத்தியில் உள்ளது. முருங்கைக்கீரையை அவித்துச் சாப்பிடுவதும் இந்தியர்களுக்கு பிடித்தமானது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதுவரை, முருங்கைக்காயை எந்தத் தடையும் இல்லாமல் சாப்பிட்டு வந்தனர். ஆனால், தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் முருங்கைப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரேசிலில் முருங்கையை உணவுப் பொருட்களாக பயன்படுத்தத் தடையுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய முருங்கை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா , நியூசிலாந்து நாடுகளில் முருங்கைக்கு தடை விதிக்கப்படக் காரணம் என்ன?

Food Standards Australia New Zealand (FSANZ), நிர்ணயித்துள்ள தரவிரிசையின் அடிப்படையில், முருங்கை உணவுக்கு எந்தப் பாரம்பரிய வரலாறும் கிடையாது. அது புதிதாக சந்தைக்கு வந்த உணவுப் பொருள் மட்டுமே. தரவரிசையின் கீழ், எந்தவொரு புதிய உணவுப் பொருளும் ஆஸ்திரேலியாவில் வணிக விற்பனைக்கு அங்கீகரிக்கப்படுவதற்காக, முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும். இதில், அறிவியல் தரவுகளும் அடங்கும். உணவுப்பொருளிலுள்ள நச்சுத்தன்மை, பாதுகாப்புச் சான்றுகள் போன்றவை ஆராயப்படும். முருங்கை இலைகள், காய்கள், விதை, எண்ணெய் மற்றும் பொடிபோன்ற பொருட்கள் ஆகியவற்றை FSANZ ஆய்வு செய்தது. அப்போது, முழுமையான பாதுகாப்புத் தரத்தை முருங்கை உணவுப் பொருட்கள் எட்டவில்லை. அறிவியல் சான்றிதழ்களும் போதுமானதாக இல்லை. இதைக் காரணம் காட்டி, FSANZ ஆஸ்திலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் முருங்கைக்குத் தடை விதித்துள்ளது.

Drumstick Samba

இதனால், முருங்கையைப் பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என்று எண்ணி விட வேண்டாம். மாறாக, ஆஸ்திரேலியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு தேவைப்படும் விரிவான, தரவுகளை ஈடுசெய்யவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முருங்கைத் தயாரிப்புகளை உணவு அல்லது ஊட்டச்சத்து பொருட்களாக சட்டப்பூர்வமாக விற்க முடியாது. இதில், உலர்ந்த இலைகள், பொடிகளும் அடங்கும்.

அதேபோல, முருங்கைப் பொருட்களை எந்த ரூபத்திலும் ஆஸ்திரேலியாவில் இறக்குமதியும் செய்ய முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் முருங்கைமரங்கள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் வளரும் முருங்கைக்காய், முருங்கை இலைகளைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. வணிகரீதியிலான விற்பனை மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தயாரிப்புகள் அந்த நாடுகளின் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக பூர்த்தி செய்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்தியாவைப் பொறுத்த வரை, முருங்கை மற்றும் அதன் மதிப்புக் கூட்டுப் பொருள் உற்பத்தியில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலும் முருங்கைக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. மேற்காசிய போர் காரணமாக கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முருங்கை ஏற்றுமதி ஏற்கனவே சரிந்துள்ளது. விமான சரக்கு கட்டண உயர்வு இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால், ஏற்றுமதியாளர்கள் முருங்கை மதிப்புக் கூட்டு பொருட்களை உள்நாட்டிலேயே விற்க முயன்று கொண்டிருக்கின்றனர்.