Manish Kumar Welco
வணிகம்

சொந்த நாடு போல உழைத்த இந்தியருக்கு ஜப்பானில் நடந்த சோகம்!

ஜப்பானைச் சொந்த நாடு போல கருதி உழைத்த , இந்திய ஹோட்டல் உரிமையாளர் அந்த நாட்டில் இருந்து திடீரென வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.

எம். குமரேசன்

ஜப்பானில் 30 ஆண்டுகளாக உழைத்து, கடும் பாடுபட்டு ரெஸ்டாரன்ட் ஒன்றை உருவாக்கிய இந்திய தொழில்முனைவோர் ஒருவரை, அந்த நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது ஜப்பான் அரசு. இதன் பின்னணி என்ன?

இந்தியாவைச் சேர்ந்த மணீஷ்குமார் என்பவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் குடியேறினார். கடந்த 18 ஆண்டுகளாக Saitama Prefecture நகரில் இந்திய ரெஸ்டாரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி,குழந்தைகளும் ஜப்பானில்தான் வசிக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பான் குடியுரிமை அதிகாரிகள் திடீரென மணீஷ்குமாரின் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், 'உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்' என்று அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், மணீஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். செய்வதறியாது திகைத்து நின்றனர். இதையடுத்து டோக்கியோவில் செய்தியாளர்களிடத்தில் பேசிய மணீஷ்குமார், ''எனது சொந்த நாடு போலவே ஜப்பானைக் கருதி உழைத்தேன். இப்போது நாட்டை விட்டு வெளியேறச் சொன்னதால், நானும் எனது குடும்பத்தினரும் கண்ணீர் வடிக்கிறோம்.எனது குழந்தைகள் ஜப்பானில்தான் பிறந்தனர். ஜப்பானியக் குழந்தைகள்தான் அவர்களுக்கு நண்பர்கள். எனது குழந்தைகளுக்கு ஜப்பான் மொழியை தவிர வேறு ஏதும் தெரியாது. திடீரென, வெளியே போகச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது?'' என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

மணீஷ்குமாரின் இந்த உருக்கமான வேண்டுகோளையடுத்து, ஜப்பான் வாழ் இந்தியர்கள் அவரை ஆதரவு கொடுத்துத் தேற்றினர். தற்போது, மணீஷ்குமாரை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என்று கூறி, அவருக்கு ஆதரவாக 53 ஆயிரம் பேர் கையொப்பமிட்ட மனு ஜப்பான் குடியுரிமைத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. மணீஷ்குமாரும் அவரது குடும்பத்தினரும் ஜப்பான் அரசின் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

Manish Kumar in pressmeet

ஜப்பானில் வெளிநாடுகளில் இருந்து வந்து கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள் நடத்துபவர்களுக்கு பிசினஸ் மேனேஜர் விசா வழங்கப்படுகிறது. சமீபகாலமாக, இந்த விசாவில் ஜப்பானுக்கு வந்து, பிசினஸ் எதுவும் செய்யாமல் பலரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜப்பான் அரசு கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடியுரிமை விதியில் சில திருத்தங்களைச் செய்தது. முன்னதாக, 30 லட்சம் முதலீட்டில் பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டது.

தற்போது, இந்தத் தொகையை 2 கோடியாக ஜப்பான் உயர்த்தியுள்ளது. அதோடு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கண்டிப்பாக முழு நேரப் பணி கொடுக்க வேண்டும். ஜப்பான் மொழியில் நல்ல தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு தொழில் செய்த அனுபவத்துக்கும் சான்றிதழ் காட்ட வேண்டும். வீடுகளில் நடத்தப்படும் தொழில்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. தனி அலுவலகம் கொண்டிருக்க வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டன.

புதிய விதிகளை தொழிலில் பின்பற்றவில்லை என்பதுதான் மணீஷ்குமார் மீதுள்ள குற்றச்சாட்டு. இதையடுத்தே ஜப்பான் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளனர்.

விதியில் செய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பிறகு, ஜப்பான் நாட்டில் பிசினஸ் மேனேஜர் விசா கேட்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. திருத்தத்துக்கு முன்பு, மாதம் 1,700 விண்ணப்பங்கள் இந்த விசா கேட்டு வரும். தற்போது அது 70 ஆக குறைந்து விட்டதாக 'ஜப்பான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் தொழில் நடத்தி வரும் மற்ற வெளிநாட்டவர்களுக்கும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் விதிகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை பாயும். இதனால், ஜப்பானில் புதியதாக தொழில் தொடங்கக் கருதிய வெளிநாட்டவர்களும் தங்கள் முடிவை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள்.