கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், பாரம்பரிய கோழிக்கோடு ஹல்வாவை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக மாற்றி வெற்றி கண்டுள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டம் ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த ஷபாஸ் அகமது, சானு முஹம்மது, இர்பான் சஃபர், தவுசீப் அலி ஆகியோர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து நண்பர்கள். கோழிக்கோடு ஹல்வா அந்தப் பகுதியில் ரொம்பவே பாப்புலர். இதனை, 'சாடன் ஹல்வா' என்றும் சொல்வார்கள். இந்த ஹல்வா சிவப்பு, மஞ்சள், கருப்பு வண்ணத்தில் இருக்கும்; பராம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும். ஆனால், முறையாக பிராண்டிங் செய்யப்படாததால், கோழிக்கோடு ஹல்வா பிரபலமாகவில்லை. ஒருமுறை, நண்பர்களில் ஒருவரான ஷபாஸ் அகமது காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றுள்ளார். காஷ்மீரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் , கோழிக்கோடு ஹல்வாவை வாங்கி அனுப்பும்படி, அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார். அதுபோல, பல நண்பர்களும் கோழிக்கோடு ஹல்வாவை விரும்பி கேட்டுள்ளனர். எனவே, கோழிக்கோடு ஹல்வாவை பிராண்டிங் செய்வதில்தான் பிரச்னை இருக்கிறது என்பதை ஷபாஸ் அகமது புரிந்து கொண்டார்.
பின்னர், ஷபாஸ் தனது நண்பர்களையும் கூட்டுச் சேர்த்து 30 ஆயிரம் செலவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான், 'காலிகட் கசின்ஸ் பிரைவேட் லிமிடெட்'. 2023ம் ஆண்டு இறுதி வாக்கில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கோழிக்கோடு ஹல்வாவை Fulva- என்று மாற்றி பிராண்டிங் செய்யத் தொடங்கினர். முதலில் , நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்தே ஹல்வா தயாரிப்பது , பேக்கிங் செய்வது, விற்பனை செய்வது என அனைத்து வேலைகளையும் செய்தனர். இயற்கையான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, இயற்கையான வண்ணங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் ஹல்வாவை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
தொடர்ந்து, ஆன்லைன் ஆர்டரில் பெற்று பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து, ஏராளமான வாடிக்கையாளர்களைச் சம்பாதித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் Fulva என்ற பிராண்ட் பதியத் தொடங்கியது. அடுத்ததாக, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், மலப்புரம் என கேரளாவில் 10 நகரங்களில் Fulva ஸ்டோர்களை திறந்தனர். தற்போது, இந்தியா முழுவதும் Fulva விற்பனையாகிறது. 8 வெளிநாடுகளுக்கும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 45 பேர் இவர்களிடத்தில் பணியாற்றுகின்றனர்.
Fulva பிராண்ட் தொடங்கப்பட்ட முதல் ஆண்டே 1.34 கோடிக்கு வர்த்தகம் செய்தது. கடந்த 2025ம் ஆண்டில் அதுவே, 3.9 கோடியாக உயர்ந்தது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அசுர வளர்ச்சியைக் கண்ட, பிரபல தொழிலதிபரும் இன்வெஸ்டருமான அமன் குப்தா இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளார். இந்த அமன் குப்தா பிரபல boAt நிறுவனத்தை 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிரமாண்ட நிறுவனமாக மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நண்பர்கள் கடும் உற்சாகமடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு விற்பனையை 20 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
நண்பர்கள் இணைந்து தொடங்கிய இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஓர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதாவது, சமீபத்தில் முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு நடந்த நாளில், முதல்முறையாக ஒட்டு போட வந்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு Fulva பிராண்டை வழங்கி தேர்தல் ஆணையம் வரவேற்றது. இதனால், லட்சக்கணக்கான கேரள மக்களிடத்தில் இப்போது, fulva பிராண்ட் ரொம்பவே பாப்புலர்.