nandinin agarwal  
வணிகம்

கின்னஸ் சாதனை: உலகின் இளம் பெண் ஆடிட்டர் யார் தெரியுமா?

16 வயதே நிரம்பிய நந்தினி அகர்வாலுக்கு ஆடிட்டருக்கான பயிற்சி அளிக்க, பல நிறுவனங்கள் தயங்கின. ஆனால், அவரது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

எம். குமரேசன்

பட்டயக் கணக்காளர் எனப்படும் 'சார்ட்டட் அக்கவுண்டன்ட்' படிப்பிற்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உள்ளது. வருவானம் மற்றும் நிதி சார்ந்த தேவைகளுக்கு ஆடிட்டர்கள் அவசியம் என்பதால், சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை சார்ட்டட் அக்கவுண்டன்ட்களுக்கு டிமான்ட் அதிகமாக இருக்கிறது. ஆனால், சிஏ தேர்வில் வெற்றி பெற அளவற்ற உழைப்பும் நிறைய அறிவுத்திறனும் தேவை. ஆடிட்டராக தேர்ச்சி பெற ஒருவர் மூன்று கட்டத் தேர்வுகள் எழுத வேண்டும். இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகம் நடத்தும் சிஏ முதல்நிலை, இடைநிலை தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இடைநிலைத் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, ஏதாவது ஆடிட்டிங் நிறுவனத்தில் பணி புரிந்து 3 ஆண்டுகள் அனுபவத்தைப் பெற வேண்டும். பயிற்சிக்காலம் முடிந்ததும், சிஏ ஃபைனல் தேர்வை எழுதலாம்.

இப்படி, பல கட்டங்களை கடந்துதான் ஆடிட்டராக முடியும். இந்தியாவிலேயே , கடினமான தேர்வு முறை கொண்டதுதான் ஆடிட்டருக்கான தேர்வு. இத்தகைய, கடினமான படிப்பை 19 வயதிலேயே பாஸ் செய்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் மாணவி ஒருவர். அவர் யார் ?

nandini linkedin profile

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினோ நகரைச் சேர்ந்தவர் நந்தினி அகர்வால். இவர் 13 வயதிலேயே, 10ம் வகுப்பு பாஸ் செய்து விட்டார். 15 வயதில், 12ம் வகுப்பை பாஸ் செய்த பிறகு, சார்ட்டட் அக்கவுண்டன்ட் படிக்க முடிவு செய்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2021ம் ஆண்டு சார்ட்டட் அக்கவுண்டன்ட் இறுதித் தேர்வு எழுதினார். அதில், 800 மார்க்குகளுக்கு 614 மார்க் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பிடித்தார். அப்போது, நந்தினி பிறந்து, 19 ஆண்டுகள் 330 நாள்களே ஆகியிருந்தது. இந்த சமயத்தில் 83 ஆயிரம் மாணவர்கள் சி.ஏ. எழுதினர்.

அப்போது, அதே தேர்வு எழுதிய நந்தினியின் சகோதரர் சச்சின் 568 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 18வது ரேங்க் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு அப்போது 21 வயதாகியிருந்தது. இளம் வயதிலேயே ஆடிட்டர் ஆன பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் நந்தினி அகர்வாலின் சாதனை இடம் பெற்றுள்ளது.

தற்போது, உலகின் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக நந்தினி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 'சி.ஏ. வில் பாஸ் செய்வது எப்படி?' என சமூகவலைத் தளங்களில் டிப்சும் வழங்குகிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களில் இவரை ஆறு லட்சம் பேர் பின் தொடருகின்றனர். தனது சாதனை குறித்து நந்தினி கூறுகையில், ''எனக்கு வயது குறைவாக இருந்ததால், சி.ஏ.கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கத் தயங்கின. ஆனால், எனது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. நான் எனது 16 வயதிலேயே நிதி முதலீடு செய்யத் தொடங்கினேன். என்னிடம், பணம் இருப்பதால் நிதி முதலீடு செய்யவில்லை. நிதி முதலீடு செய்வதை இளம் வயதிலேயே பழக்கமாக்கிக் கொள்ள வேண்டுமென்பதால், அதில் ஈடுபட்டேன். இது, நமது தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்த சாதனைக்கும் வயது ஒரு தடையே அல்ல. முயற்சியும், திறமையும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்'' என்கிறார்