கமரு, பாருவின் மைக்கை மறைத்துப்பேசி விளையாடும் விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில், இது இவர்களுக்கு, ஆப்பாக அமையக்கூடிய எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாகத் தெரிகின்றன.
அடுத்து வழக்காடு மன்றம் டாஸ்க்கில், நான்காவது கேஸ் வந்தது. இந்த வழக்கை விக்ரம், சுபி மீது தொடுத்திருந்தார். ’சுபி, ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பாடி விக்ரமின் காதில் ரத்தம் வர வைக்கிறார்’ என்பது வழக்கு. காமெடியாகத்தான் விக்ரம் இந்த வழக்கை தொடுத்து இருந்தார், நல்லவேளையாக சுபியும் அதற்கு ஒத்துழைத்ததால் இது சுமூகமாக முடிந்தது. காதில் பேண்டேஜ் போட்டுக் கொண்டது, ரத்த சாம்பிள் கொண்டு வந்தது என்று இந்த விளையாட்டை சுவாரசியமாக்க விக்ரம் முடிந்தவரை ஈடுபட்டோடு விளையாண்டது பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. வழக்கு, சுபிக்கு சாதகமாக தீர்ப்பாகியது.
அடுத்து, வெளியே சான்ட்ரா, பாருவிடம் திவ்யாவின் மீதான தன் மனக்குமுறலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பிரஜின் வெளியே போனதிலிருந்து குளித்து முடித்து, நீட்டாக ட்ரஸ் செய்து கொண்டு வந்து ஏதாவது ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பது மட்டும்தான் சான்ட்ராவின் வேலையாக இருக்கிறது. மிஞ்சிப் போனால் பாருவிடம் தன் மனக்கஷ்டத்தை புலம்பிக்கொள்கிறார், அவ்வளவுதான்!
’பிரஜின் வெளியே போனபோது, இந்த திவ்யாவின் நடவடிக்கையை நீ பார்த்தாயா? அதில் கொஞ்சமாவது நியாயம் இருந்ததா பாரு?’
’ஆமா, நியாயமே இல்லை’
’அவளுக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன். பிரஜின் அவளிடம் எவ்வளவு நட்போடு பழகிக்கொண்டு இருந்தார். அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எப்போதடா நானோ அல்லது பிரஜினோ வெளியே போவேன் என்று காத்திருந்திருக்கிறாளா?’
’ஆமா, காத்திருந்திருக்கா’
’அவளுக்காக நாங்க இவ்வளவு செய்திருந்தும் பெஸ்ட் பெர்ஃபார்மர் சொல்லும் போது அவள் எங்கள் இருவரின் பெயரைச் சொல்லவே இல்லை தெரியுமா? ஆனால், யார் வெளியே போவார் என்று கேட்டபோது என் பெயரைச் சொல்கிறாள். புத்தியைக் காட்டிவிட்டாள் பார்த்தாயா பாரு?’
’ஆமா, உடனே புத்தியைக் காட்டிட்டா’
’அவளுக்காக நாமினேசன் ஃப்ரீ பாஸ் எல்லாம் கொடுத்தாரே… அதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல், எப்படி இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் பாரு? கொஞ்சம் கூட நன்றியோ, மனிதாபிமானமோ, இரக்கமோ இவங்களுக்கெல்லாம் இருக்காதா பாரு?’
’ஆமா, இருக்காதா?’
பாருவிடம்தான் மொத்த மனிதாபிமானமும் ஸ்டாக் இருக்கிறது என்று இந்த சான்ட்ராவுக்கு அப்படி ஒரு நம்பிக்கை போலிருக்கிறது. ஆனால், சான்ட்ராவின் புலம்பல்களில் பாருவுக்கு எந்த ஆர்வமும் இல்லை. கடமையே என்று கேட்டுக் கொண்டுவிட்டு, வில்லுப்பாட்டில் வருவது போல கடைசி வரியை ராகத்தோடு ஒத்து ஊதிக்கொண்டிருந்தார். மற்றபடி அவரது கவனம் முழுதும் கையில் வைத்திருந்த ஏதோ உணவுப் பொருளின் மீதுதான் இருந்தது.
அடுத்து, அரோரா பாருவின் மீது, ’இவர் என் மீது வன்மத்தோடு அவதூறு பரப்புகிறார். அடுத்தவர்களிடம் போய் என்னை நாமினேஷன் செய்யச் சொல்கிறார்’ என்று வழக்கு தொடுத்தார். பாரு அவருக்கான வக்கீலாக கமருவையும், ஜட்ஜ் ஆக சான்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார். எவ்வளவு நேர்மை பாருங்கள்! பாருவின் வாதம், நாம் எதிர்பார்த்தது போலவே புளுகுணித்தனமாகத்தான் இருந்தது,
’இந்த வன்மம், அவதூறு என்று அவர் என்னைச் சொல்லும் அனைத்துக் குணங்களும் அவருக்குத்தான் இருக்கிறது. ஆமாம், எனக்கு கமருவின் மீது ஒரு நட்பைத் தாண்டிய ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மைதான். அப்படி ஏற்பட்ட பிறகு, ஒரு நல்ல தோழியாக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இதற்கு மேலும் நாம் கமருவோடு பழகினால், அது பாருவுக்கு பொசசிவ்னஸை உருவாக்குமே என்று யோசித்து, நட்பைத் துண்டித்துவிட்டு போயிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், என் மீது வன்மத்தோடு திரிகிறார்’
விக்ரமின் குறுக்குக் கேள்விகளுக்கும், பாரு முழுவதும் பொய்களையே பதிலாக தந்து கொண்டிருந்தார். அப்போது, பாரு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார்,
’ஒருநாள் கமரு வெயிட் லிப்டிங் செய்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த பிறகுதான் அவன் மீது எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது...‘
’அதாவது, வெயிட் லிப்டிங் செய்த போது, அவரை நீங்கள் ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இல்லையா?’
பாரு சொன்ன அதே ஸ்டேட்மென்ட்டைத்தான் மீண்டும் விக்ரம் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார். தான் சொன்னதிலிருந்த அபத்தத்தை புரிந்துகொண்ட பாரு, உடனடியாகப் பழியை விக்ரமின் மீது போட்டு மடை மாற்றுவதற்காக, உமன் கார்டை தூக்கிவிட்டார்.
’பாருங்கள் நீதிபதி அவர்களே, ஒரு வக்கீல், ஒரு பெண்ணின் மீது எப்படி கொச்சையான அவதூறு பரப்புகிறார் என்று!’
இந்தப் பாயிண்டை வைத்தே கொஞ்ச நேரம் ஆட்டத்தையே உழப்பி விட்டுக் கொண்டிருந்தார் பாரு. இறுதியில், ஜட்ஜ் கனி அரோராவுக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்ல, ஜட்ஜ் சான்ட்ரா பாருவுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னார். தன்னை ஜட்ஜ் ஆக தேர்ந்தெடுத்ததற்கு சான்ட்ராவின் கைமாறு அது. கடைசியில், தீர்ப்பு மக்கள் கைக்குப் போக மக்கள் அரோராவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள். அதற்கும், ‘குரூப்பிசம் வென்றது’ என்று பாரு கேலி செய்துகொண்டிருந்தார். இந்த வினோத்துக்கு என்னாச்சு என்று தெரியவில்லை, கொஞ்ச நாட்களாக கமரு, பாருவுக்கு சப்போர்ட்டாக அவர்கள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்.