நான் தென்காசிக்காரனா, திருநெல்வேலிக்காரனா?

அந்தக் காலத்தில் மாவட்டங்கள் மிகவும் பரந்த பரப்பளவை கொண்டிருந்தன. போக்குவரத்து மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால், நிர்வாகச் சேவைகள் மக்களைச் சென்றடைவது சிரமமான ஒன்றாக இருந்தது.
AI Image depicting of Alangulam
AI Image depicting of Alangulam AI GENERATED
Published on

சென்ற தேர்தலில், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் எங்கள் ஊருக்குள் வந்து பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள். அடப்பாவிகளா! நாங்கள் இருப்பதோ திருநெல்வேலி மாவட்டத்துக்குள், ஆலங்குளம் இருப்பதோ தென்காசி மாவட்டத்துக்குள்! மாவட்ட எல்லை கூட தெரியாமல், இந்த வேட்பாளர்கள் பண்ணுகிற அட்டகாசம் பொறுக்கமுடியவில்லையே, என்று சலித்துக்கொண்டோம். ‘ஏய், மாக்கான்! அவன் சரியாதான் பிரச்சாரம் பண்ணிக்கிட்டுப் போறான். உன் ஊருதான்யா, ஆலங்குளம் தொகுதிக்குள்ள வருது’ என்று வடிவேலு கண்டக்டராக வரும் காமெடியில், பஸ் மாறி ஏறிப்போய் டிரைவரிடம் திட்டு வாங்குவாரே அப்படி ஆகிவிட்டது எங்கள் நிலைமை!

சரிதான், மாவட்ட எல்லைகளையும், சட்டமன்ற தொகுதி எல்லைகளையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே என்று இறங்கினால், சில சுவாரசியங்கள் தென்பட்டன.

இந்தியாவில் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடந்த ஆண்டு 1956. அது இந்திய அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த மறுசீரமைப்பின் மூலம் பல மாநிலங்கள் மொழியை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டன. அப்போது மதராஸ் மாகாணம் (Madras State) என்று அழைக்கப்பட்ட நமது மாநிலம், அதற்கு முன் இப்போது இருப்பதைப்போல இருக்கவில்லை. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து, இப்போதைய தமிழ்நாட்டின் பெரும் பகுதியோடு கூட, ஆந்திராவின் பெரும்பகுதி, கன்னட, கேரளாவின் குறிப்பிடத் தகுந்த பகுதிகளையும் கொண்ட பெரிய மாநிலமாக இருந்து. 1956ல் தான் ஆந்திர, கன்னட, கேரள பகுதிகள் விடுவிக்கப்பட்டு, கன்னியாகுமரி இணைக்கப்பட்டு, எல்லைகள் சீரமைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு தோன்றியது. அப்போதும் அதன் பெயர் என்னவோ மெட்ராஸ் மாகாணமாகவேதான் தொடர்ந்தது. அதை மாற்றிட பேரறிஞர் அண்ணா முதல்வராகித்தான் வரவேண்டியிருந்தது என்பது வேறு கதை!

1956, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

அவை: சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி.

அந்தக் காலத்தில் மாவட்டங்கள் மிகவும் பரந்த பரப்பளவை கொண்டிருந்தன. போக்குவரத்து மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால், நிர்வாகச் சேவைகள் மக்களைச் சென்றடைவது சிரமமான ஒன்றாக இருந்தது. மக்கள் தொகை அதிகரிப்பும், நிர்வாகக் காரணங்களும், அதிகரிக்க அதிகரிக்க, பின்னால், இந்தப் பெரிய மாவட்டங்கள் பலவாகப் பிரிக்கப்பட்டன.

சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தொடக்கத்திலிருந்து இன்று வரை மாற்றத்துக்கு ஆளாகமல், அப்படியே உள்ளன. (3 to 3)

முதன்முறையாக 1965ல் சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சேலம் மற்றும் தர்மபுரி என இரண்டு மாவட்டங்களாக்கப்பட்டன. 1997ல் மீண்டும் சேலம் மாவட்டம், இரண்டாக சேலம், நாமக்கல் என இரண்டாகப் பிரிய, 2004ல் தர்மபுரியும் இரண்டாக்கப்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாகின்றன. (1 to 4)

1974ல் திருச்சி மற்றும், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பகுதிகள் இணைக்கப்பட்டு புதிதான புதுக்கோட்டை மாவட்டம் உருவானது. (0 to 1)

அடுத்து, 1979ல் கோயம்புத்தூரிலிருந்து, ஈரோடு பிரிந்து தனி மாவட்டமானது. 2009ல் கோயம்பத்தூர் மற்றும் ஈரோடு இரண்டு மாவட்டங்களிலிருந்துமே பகுதிகள் இணைக்கப்பட்டு புதிதாக திருப்பூர் மாவட்டம் பிறந்தது. (1 to 3)

Difference between 13 districts to 38 districts
Difference between 13 districts to 38 districtsAI GENERATED

1985ல் மதுரை மாவட்டம், மதுரை, திண்டுக்கல் என இரண்டாக்கப்பட்டது. பின்னர் மதுரை மீண்டும் 1996ல் இரண்டாக்கப்பட்டு மதுரை, தேனி என இரு மாவட்டங்களானது.(1 to 3)

அதே 1985ல் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. (1 to 3)

1986ல் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி என இரண்டாக்கப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மீண்டும் 2019ல் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என இரண்டாக்கப்பட்டது. (1 to 3)

வட ஆற்காடு 1989ல் வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் 2019ல் வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. (1 to 4)

1991ல் தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக்கப்பட்டு தஞ்சாவூர், நாகப்பட்டிணம் என்று மாவட்டங்கள் உருவாகின. 1997ல் இந்த இரண்டு மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பெறப்பட்டு திருவாரூர் மாவட்டம் உருவானது. 2020ல் நாகப்பட்டிணம், இரண்டாக்கப்பட்டு நாகப்பட்டிணம், மயிலாடுதுறை என இரு மாவட்டங்களயின. (1 to 4)

1993ல் தென்னாற்காடு மாவட்டம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 2019ல் விழுப்புரம் இரண்டாக்கப்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்கள் தோன்றின. (1 to 3)

1995ல் திருச்சி மாவட்டம், திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாக உருவெடுத்தது. பின்னர் 2007ல் பெரம்பலூர், இரண்டாகி பெரம்பலூர், அரியலூர் என இரண்டு மாவட்டங்களானது. (1 to 4)

சென்னையைச் சூழ்ந்திருந்த செங்கல்பட்டு மாவட்டம், முதலில் 1997ல் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டன. இவற்றில், காஞ்சிபுரம் மீண்டும் 2019ல் இரண்டாக்கப் பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு எனப் பெயரிடப்பட்டன. (1 to 3)

இதன் விளைவாக, 1956 ஆம் ஆண்டில் இருந்த 13 மாவட்டங்களைக் கொண்ட மாநிலம், இன்று 38 மாவட்டங்களைக் கொண்ட நிர்வாக அமைப்பாக வளர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி, நிர்வாக மாற்றங்கள் மற்றும் சமூக வளர்ச்சியின் ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது.

அடுத்து, ஆலங்குளம் தொகுதி, திருநெல்வேலி மாவட்டத்துக்குள் எட்டிப்பார்ப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பல இடங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள், பக்கத்து மாவட்டத்துக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பது தெரியவந்தது. 

மாவட்டங்கள், தாலுகாக்கள், சட்டமன்ற எல்கைகளெல்லாம் வேறு வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்படுபவை. சட்டமன்றத் தொகுதிகள், மக்கள் தொகை அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசால், வரையறுக்கப்படுபவை. ஆனால், மாவட்ட, வட்ட எல்கைகள் மற்றும் அதன் ஆளுமை முழுக்கவும் தமிழ்நாட்டு அரசின் கைகளில் இருக்கின்றன. நிர்வாக வசதிகளுக்காக, பிற காரணங்களுக்காக  இந்த எல்கைகளை நெகிழ்த்தும் போது இந்தச் சிக்கல் எழுவதைத் தவிர்க்கமுடியாது. அதோடு, இப்படியான எல்கைகளெல்லாம் ஒரு நிர்வாக வசதிக்காகத்தானே தவிர, மக்கள் பணியாற்றிடும் நம் அலுவலர்களையும், நம் மக்கள் பிரதிநிதிகளையும் பிரிப்பதற்காக அல்ல என்று தத்துவார்த்தமாக அணுகி, மகிழ்ச்சியடைந்து கொள்ளலாம்.

Puthuyugam
www.puthuyugam.com