பிறந்து நான்கு மாதமேயான பட்டைவால் மூக்கன் பறவை 11 நாட்களில் அலாஸ்காவில் இருந்து டாஸ்மேனியாவுக்கு 13,560 கி.மீ தொலைவு நிற்காமல் பறந்து சாதனை படைத்துள்ளது.
பி 6 என்று பெயரிடப்பட்ட இந்த பறவை, கடந்த 2022 ம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன், உடலில் 5 கிராம் எடையுள்ள சூரிய சக்தியில் இயங்கும் செயற்கைகோள் டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) செயற்கைக்கோள் இந்தப் பறவையை கண்காணித்து, தகவலை உறுதி செய்துள்ளது. இந்தப் பறவைதான் உலகிலேயே நீண்ட தொலைவு நிற்காமல், பயணித்த உயிரினம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பட்டை வால் மூக்கன் பறவை 'உள்ளான்' இனத்தைச் சேர்ந்தது. நீண்ட அலகு , பட்டை போன்ற வாலை கொண்டிருக்கும். 230 முதல் 450 கிராம் வரை எடை கொண்டிருக்கும்.
சிறு பூச்சிகள், தாவரங்கள், மீன்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் ஆர்க்டிக் கடலோரத்தில் அதிகமாக வசிக்கின்றன. இரு வருடங்களுக்கு ஒரு முறை, குளிர்காலத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு இவை, புலம் பெயர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த சமயத்தில் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும். பசிபிக் கடலின் மேல் பறக்கும் போது, பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு நிலப்பரப்பே தென்படாது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பயணத்தை மேற்கொள்கின்றன.
பயணத்தைத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னரே, அலாஸ்காவில் வயிறு முட்ட உணவுகளை சாப்பிடத் தொடங்குகின்றன. இதனால், உடலில் கொழுப்புச்சத்து அதிகளவில் உருவாகியிருக்கும். பறக்கும் போது, இந்தப் பறவை தனது உடலை மாற்றியமைத்துக் கொள்கிறது. அதாவது வயிறு, கல்லீரல் போன்ற பெரிய உறுப்புகளைச் சுருக்கி, எடையைக் குறைத்துக் கொள்கிறது. பறக்கும் போது, உடலில் அதிகமாக சேமிக்கப்பட்ட கொழுப்பு எரிந்து பறக்கும் சக்தியை தருகிறது. இதனால், உணவு தேட வேண்டிய அவசியம் எழாது. பல நாட்கள் வரை அவற்றால் உணவு இல்லாமல் பறக்க முடியும். போதுமான சக்தி உடலில் சேர்ந்த பின்னரே, இந்தப் பறவைகள் பறக்க தொடங்குகின்றன.
பி 6 பறவை பூமியின் காந்தப்புலத்தை இயற்கையான திசைகாட்டியாகப் பயன்படுத்துகிறது. இந்தப் பறவையின் கண்களில் உள்ள சிறப்பாக ஒரு புரதம் அமைந்துள்ளது. இதனை 'கிரிப்டோக்ரோம்' என்று சொல்கிறார்கள். இது, காந்தப் புலங்களைக் கண்டறிந்து, டாஸ்மேனியா நோக்கிப் பறக்க வழிகாட்டுகிறது நட்சத்திரங்கள், சூரியனின் நகர்வு மற்றும் வாசனையை வைத்தும் கூட வழியைக் கண்டுபிடித்து இவை பறக்கின்றன.
B6 பறவை 11 நாட்கள் தரையிறங்காமல், மணிக்கு 55 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பறந்து டாஸ்மேனியாவை அடைந்துள்ளது. அதேவேளையில், பறக்கும் போதே அது உறங்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறது. மூளையின் ஒரு பாதி உறங்கும். மற்றொரு பாதி, தொடர்ந்து பறக்க விழிப்புடன் இருக்கும். இது ஒரு கண்ணைத் திறந்து கொண்டே உறங்குவது போன்றது.
புலம்பெயர் பறவைகள் ஆற்றலைச் சேமிக்க நிலப்பரப்புக்கு ஏற்ப உயரத்தை மாற்றி பறக்கின்றன. பாலைவனங்களுக்கு மேல் பறக்கும் போது, அதிக உயரத்தில் பறக்கின்றன. இதனால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீருக்கு மேல் பறக்கும் போது, தாழ்வாக பறக்கின்றன. இதனால் , நல்ல காற்றோட்டம் கிடைப்பதோடு, ஆற்றலையும் சேமித்துக் கொள்கின்றன.
பருவகால மாறுதல்களின் போது தங்களின் வாழ்விடத்தை சில காலம் மாற்றி அமைக்கும் முயற்சியில் பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்து செல்கின்றன. பின்னர், தங்கள் வாழ்விடத்திற்கே திரும்பி வந்து விடுவது வழக்கம்.
பி6 பறவையின் இந்தச் சாதனை, இயற்கையின் அதிசயத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆனால், காலநிலை மாறும்போது, பறவைகள் அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. காலநிலை மாற்றத்தால் பறவைகள்தான் அதிக இடர்பாடுகளை சந்திக்கின்றன. இத்தகைய, இடர்பாடுகளைக் கடந்து, பி6 பறவை படைத்த இமாலய சாதனை பறவையியல் நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.