ராணுவம் இல்லாத நாடு -கோஸ்டா ரிகா

Costa Rica
Costa Ricawww.visitcostarica.com
Published on

90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி ரூபாயை, தனது ராணுவத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்கிறது இந்தியா. இந்த மதிப்பு தமிழ்நாட்டின் 1 ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். இந்தியாவுக்கு 9 லட்சம் கோடி என்பது, தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3% மற்றும் ஆண்டு பட்ஜெட்டில் ஏறத்தாழ 15% செலவு! இதைப்போலவே, தங்கள் ராணுவத்துக்காக சீனா 300 பில்லியன் டாலர்களையும், அமெரிக்கா 1000 பில்லியன் டாலர்கள் வரையும் செலவு செய்கின்றன. 

ஆனால், இந்தப்புவியில் இராணுவம் இல்லாத ஐஸ்லாந்து, பனாமா, மொனோக்கோ போன்ற நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் மத்திய அமெரிக்க நாடுகளுள் ஒன்றான கோஸ்டா ரிகா (Costa Rica). ஒரு நாட்டின் மிகப்பெரிய செலவாக இருக்கும் இராணுவத்துக்கு ஆகும் செலவை, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற வளர்ச்சிப் பணிகளுக்காகச் செலவிட்டால் என்ன நடக்கும்?

உயர்ந்த கல்வியறிவு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாறலாம். பொது சுகாதார கட்டமைப்பை மிக வலுவானதாக்கலாம். அதனால், மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கலாம். ஆம், இதையெல்லாம் கோஸ்டா ரிகா சாதித்திருக்கிறது. காடுகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு மண்டலம் என்பது கோஸ்டா ரிகாவில் 25% ஆக இருக்கிறது. இந்தியாவில் இது 6% ஆக இருக்கிறது. சிறப்பான அரசு மருத்துவக் கட்டமைப்பு இருப்பதால், கோஸ்டா ரிகாவின் சராசரி மனித ஆயுட்காலம் 81 வயதாகவும், இது இந்தியாவில் 70 ஆகவும் இருக்கிறது. கல்வியறிவு கோஸ்டா ரிகாவில் 98% ஆகவும், இந்தியாவில் 77% ஆகவும் உள்ளது. கல்வியறிவின் உலக சராசரி 86% என்பதைக் கவனித்தால், இரு நாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரமுடியும்.

ஆனால், இதையெல்லாம் கோஸ்டா ரிகா எப்படி சாதித்தது? இராணுவம் இல்லையெனில் ஒரு நாட்டின் பாதுகாப்பு என்னவாகும்?

Costarica
Costaricawww.visitcostarica.com

அமெரிக்காவில் நிலைபெற்றுவிட்ட பல்வேறு ஐரோப்பிய காலனிகள், 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ், ஸ்பெயின் போன்ற ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்தன. அப்போது ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலிருந்த மத்திய அமெரிக்க நாடுகளும், பின்னர் 19ம் நூற்றாண்டில், அதாவது 1821ல் விடுபட்டன. தொடர்ந்து குழுவாகவும், மெக்ஸிகோவின் துணையிடனும் இயங்கிவந்த அவை பின்னர், 1840ல் தனித்தனி நாடுகளாகின்றன. அவற்றில் ஒன்றான கோஸ்டா ரிகா, 1948ல் பெரும் உள்நாட்டுப்போரை சந்திக்கிறது. அதில், ஆயிரக்கணக்கான பேர் தீவிரமாகப் பாதிக்கப்படுகின்றனர். 

அதைத் தொடர்ந்து, அப்போது அதன் தலைமைப் பொறுப்பிலிருந்த ஜோஸ் ஃபிகாரஸ் (José Figueres Ferrer) ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அதை 1948 டிசம்பர் 1 அன்று அவர் அறிவித்தார். 

“இந்த நாட்டுக்கு இனி நிரந்தர ராணுவம் தேவையில்லை.”

உள்நாட்டுப் போரின் பிந்தைய குழப்பநிலையில், பல நாடுகளும் தங்கள் இராணுவத்தை வலுப்படுத்துகின்றன, ஆயுதங்களை அதிகரிக்கின்றன. ஆனால், கோஸ்டா ரிகா முற்றிலும் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தது. அந்தச் செலவை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குச் செலவிட முடிவு செய்கிறது.

ஆனால், ராணுவம் இல்லாமல் எப்படிப் பாதுகாப்பு சாத்தியமாகும்?

இராணுவம்தான் இல்லையே தவிர அவர்களிடம் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக, வலுவான தேசிய போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படையும் இருக்கிறது. மேலும், அவசர நிலைகளில் United Nations மற்றும் Organization of American States போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவும் கிடைக்கும். ஆனால், இது போதுமா? கோஸ்டா ரிகா அமைந்துள்ள மத்திய அமெரிக்கப் பகுதி, அரசியல் குழப்பங்களும் உள்நாட்டுப் போர்களும் நடந்த பகுதி. அப்படியிருக்க, இந்த முடிவு ஒரு அபாயமல்லவா? இது எல்லா நாடுகளுக்கும் சாத்தியமா?

இல்லை.

அரசியல் சூழல், புவியியல் அமைப்பு, அண்டை நாடுகளின் நிலை இவை அனைத்தும் இந்த முடிவுக்கான காரணமாக அமைகின்றன. கோஸ்டா ரிகாவின் புவியியல் அமைப்பும், குறைவான இயற்கைக் கனிம வளமும், இன்னொரு நாடு அதை ஆக்கிரமிக்கும் தேவையைக் குறைக்கின்றன. கூடுதலாக, அவர்கள் சர்வதேச ஒப்பந்தங்கள், தூதரக உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால், எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு, கனிமங்கள் நிறைந்த ஒரு நாடு இப்படி இருப்பது சாத்தியமல்ல. அவை, உலகின் பெரும் நாடுகளின் இலக்குக்கு எளிதாக ஆளாகிவிடும். இப்போதே, வலுவான இராணுவங்களை வைத்திருக்கும் நாடுகளே கூட எண்ணெய் வளம் எனும் காரணத்தால், பெரிய நாடுகளின் தாக்குதலுக்கு ஆளாவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கோஸ்டா ரிகா, பாதுகாப்பை முழுமையாக கைவிடவில்லை. ஆனால், பாதுகாப்பின் வடிவத்தை சற்று மாற்றி இராணுவம் எனும் பெரும் செலவீனத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர்.

கோஸ்டா ரிகாவின் மாடல் எல்லா நாடுகளுக்கும் பொருந்தாதுதான். ஆனால், அது முக்கியமான இரண்டு கருத்துகளை நமக்குச் சொல்கிறது. ஒன்று, உங்கள் இராணுவ அமைப்புக்கான தேவையின் அளவு என்ன, அதற்கு எவ்வளவுதான் செலவிடலாம் என்றாய்ந்து அவசியத்துக்கும், வாய்ப்புக்குமிடையேயான சமநிலையைப் பேணுங்கள். இரண்டு, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது ஆயுதங்களால் மட்டுமே வருவதில்லை. கல்வி, சுகாதாரம், சமூகநிலை ஆகியவையும் பாதுகாப்பின் இன்னொரு வடிவமே என்பதை உணருங்கள்.

Puthuyugam
www.puthuyugam.com