வெடிமருந்திலிருந்து ஸ்னைப்பர் துல்லியம் வரை... துப்பாக்கியின் வளர்ச்சி

துப்பாக்கியின் வரலாறு வெடிமருந்திலிருந்தே தொடங்குகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சீனாவின் வேதியியலாளர்கள் தவறுதலாகக் கண்டுபிடித்ததே வெடிமருந்து (Gunpowder).
AI Generation of Different types of Guns
AI Generation of Different types of GunsAI GENERATION
Published on

சமீபத்தில், டிவியில் ஓர் ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்தது. கி.பி. 1500 -களில் நடப்பது போன்ற ஒரு கதை அது. ஒரு கப்பலிலிருந்து கடற் கொள்ளையர்கள் பலர் ஒரு தீவில் இறங்குகிறார்கள். அந்தத் தீவில் இருந்த மக்கள், மறைவுகளில் இருந்துகொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்கள். அப்போது கப்பலிலிருந்து வந்த கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியால் தீவுவாசி ஒருவனைச் சுடுகிறான். அது குறி தவறுகிறது. உடனே அவன், துப்பாக்கியைத் தரையில் வைத்து, குழலை மேல்நோக்கி நிறுத்திக்கொண்டு அதில் வெடிமருந்தை நிரப்புகிறான். பின்னர் அதை ஒரு குச்சியால் குத்தி இறுக்கிவிட்டு, குண்டை உள்ளே தள்ளி மீண்டும் சுடத் தயராகிறான். அது வரை அந்தத் தீவுவாசி என்ன புளியங்காயா பறித்துக்கொண்டிருப்பான்? கொள்ளையனின் தலை துண்டாகி விழுகிறது. துப்பாக்கி எவ்வளவு ஆபத்தான ஆயுதமாக இருந்திருக்கிறது பாருங்கள். எதிராளிக்கல்ல, பயன்படுத்துபவனுக்கு! ஆனால், இன்று?

துப்பாக்கியின் வரலாறு வெடிமருந்திலிருந்தே தொடங்குகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சீனாவின் வேதியியலாளர்கள் தவறுதலாகக் கண்டுபிடித்ததே வெடிமருந்து (Gunpowder). கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட், நுண்கரி, சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையான இது முதலில் பட்டாசு, தீ சமிக்ஞ போன்றவற்றில் பயன்பட்டு, பின்னர் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் உதவியோடு போர்க்களத்துக்கு வந்தது.

13-ஆம் நூற்றாண்டில் பீரங்கிகளின் மிகச்சிறிய வடிவமாக ஒரு குழாய் வடிவிலான துப்பாக்கி (Hand cannon) கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது துப்பாக்கிக் குழலுக்குள் மருந்தைச் செலுத்தி அழுத்தி அடைத்து, குண்டைப் போட்டு, மருந்தில் நெருப்பை வைப்பதுதான் தொழில் நுணுக்கம். இதில் வடிவம், துல்லியம், வேகம், ரீலோடிங் நேரம், வெடிமருந்தைப் பற்றவைத்தல் என எல்லாமே பிரச்சினைக்குரியதாக இருந்தது. குறி தவறினால் கூட பரவாயில்லை, ஆனால் பல நேரங்களில் துப்பாக்கியே வெடித்து, பயன்படுத்துபவரின் கைகளையும், உயிரையும்தான் பறிப்பதாக இருந்தன. 15–16-ஆம் நூற்றாண்டுகளில் Matchlock, Wheellock துப்பாக்கிகள் வந்துவிட்டன. அவை பற்ற வைக்கும் நுட்பத்தை முன்னேற்றியிருந்தன. அதாவது வெடிமருந்தைப் பற்ற வைக்க, இன்றைய லைட்டரைப் போல, ஒரு தீப்பொறியை உருவாக்கும் வசதி இவற்றில் இருந்தன. இதனால் துப்பாக்கி வெடிப்பது குறைந்தது. வடிவத்தில் முன்னேற்றம், அதனால் கையாள்வதில் முன்னேற்றம், துப்பாக்கிக் குண்டின் வேகம், துல்லியம் ஆகியவற்றிலும் மெல்ல மெல்ல முன்னேற்றம் கிடைத்தது. இவற்றில் ஒன்றைத்தான் மேற்குறிப்பிடப்பட்ட சினிமாவில் நாம் பார்த்திருக்கக்கூடும். 18-ஆம் நூற்றாண்டில் உருவான Percussion Cap முறை, பற்றவைப்பை இன்னும் மேம்படுத்தியது.

16th Century Battlefield Representation
16th Century Battlefield Representation AI GENERATED

காசிமிர் (Casimir Lefaucheux) எனும் பிரஞ்சு ஆய்வாளர் 1835ல், பின் ஃபயர் (Pin-fire) எனும் உலோக உறையிலான (Metallic cartridge) புல்லட்டை அறிமுகப்படுத்தியதுதான் துப்பாக்கியை மிக ஆபத்தான ஒரு ஆயுதமாக மாற்றியது. இதுவே இன்றைய நவீன ஒருங்கிணைந்த புல்லட்டுகளுக்கு முன்னோடி. இது வெடிமருந்து, குண்டுகள் இரண்டையும் தனித்தனியே கையாளும் சிக்கலை முற்றிலுமாக நீக்கியது. அதே காலகட்டத்தில் குழலுக்குள் சுருள் வடிவ கீறல்கள் (Rifling) வந்தது. இது, துல்லியத்தையும் பல மடங்கு உயர்த்தியது. அப்போது நிகழ்ந்த தொழிற்புரட்சி துப்பாக்கியை இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றது. ஒருங்கிணைந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதுமே, அது வரை ரீலோடிங் எனும் பெரிய சிக்கல், ஒன்றுக்கு மேற்பட்டக்கு குண்டுகளின் தொகுப்புகள் (Cartridge) உருவாக்கப்பட்டு தீர்க்கப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சியும், உலகப் போர்களும் துப்பாக்கித் தொழில்நுட்பத்தை வேகமாக முன்னேற்றின. அன்று வெடிமருந்தைக் குழலுக்குள் செலுத்துவதற்குள் கழுத்தறுபட்டு இறந்த நிலை மாறி, இன்று  இரண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள குறியையும் கூட மிகத்துல்லியமாகத் தாக்கும் Sniper rifles வந்துவிட்டன. கூடவே, Guidance systems, Laser sight, Thermal imaging போன்ற நவீன வசதிகளும் துப்பாக்கிகளோடு இணைந்துள்ளன.


துப்பாக்கி ஒரு சாதாரணமான ஆயுதமல்ல; அது அரசியல், ஆட்சி, காலனித்துவம், புரட்சி என உலக அரசியலையும், மக்களையும் நேரடியாகப் பாதித்த ஒரு கருவி. 1700க்குப் பிறகு போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியாவுக்குள் நுழையவும், நிலைபெற்று வலுப்பெறவும் துப்பாக்கிகள்தான் உதவின. துப்பாக்கிகள்தான் பெரும்பாலான நாடுகளின் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளன. மனிதன், இப்படியான ஆபத்துகளை உருவாக்குவதற்கான ஒரே காரணம் அதிகாரம்! உண்மையில் அதிகாரம் என்பதுதான் எந்தத் துப்பாக்கிகளை விடவும் ஆபத்தானது.

Puthuyugam
www.puthuyugam.com