ஒரு தலைவரிடம் நாம் எதை எதிர்பார்க்க வேண்டும்?

ஒரு நபர் அரசியலுக்குள் வருகிறார் என்றால், அவர் இதுவரை செயல்பட்ட துறையில் எப்படி நடந்துகொண்டார் என்பது முக்கியம். அவர் அரசின் விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் மதித்து அந்த வேலையைச் செய்தாரா? தன்னுடன் பணிபுரிந்தவர்களிடம் நியாயமாக நடந்துகொண்டாரா?
Leader
LeaderChatGPT - AI
Published on

ஒரு நடிகர் என்று மட்டுமல்ல, எந்த ஒரு நபர் அரசியலுக்குள் வந்தாலும், அவரிடம் நாம் எதை எதிர்பார்க்க வேண்டும்? 

முதலில், அவரது அறிவு, சிந்தனைத் தெளிவு மற்றும் சமூகப் பார்வை. ஒருவர் அரசியலுக்கு வர முடிவு செய்கிறார் என்றால், அது திடீரென நிகழும் உணர்ச்சிவசப்பட்ட விளைவாக இருக்கக்கூடாது. அதற்கு முன்பே, அவர் சமூக விஷயங்களில் தொடர்ந்து அவரது கருத்துகளை வெளியிட்டிருக்க வேண்டும்; பொதுநலப் பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும்; தன்னுடைய சிந்தனையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான் நேரடி அரசியலுக்குள் அவர் வந்திருக்க வேண்டும். 

அடுத்து, அவசியமானது - நேர்மையும், தைரியமும்! ஒரு நபர் அரசியலுக்குள் வருகிறார் என்றால், அவர் இதுவரை செயல்பட்ட துறையில் எப்படி நடந்துகொண்டார் என்பது முக்கியம். அவர் அரசின் விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் மதித்து அந்த வேலையைச் செய்தாரா? தன்னுடன் பணிபுரிந்தவர்களிடம் நியாயமாக நடந்துகொண்டாரா? அவரது நிறுவனம் அல்லது பொறுப்பு வெளிப்படைத் தன்மையுடம் இருந்ததா? வரி செலுத்துதல் போன்ற சட்டபூர்வமான கடமைகளைச் சரியாக நிறைவேற்றினாரா? என்பதெல்லாம் அவரது நேர்மையின் அளவுகோல்கள். அதேபோல் தைரியம். அவர் முன்பு வெளிப்படுத்திய கருத்துகள், ஆளும் அதிகாரத்திற்கே எதிரானவையாக இருந்தாலும், அதைத் தயக்கமின்றி சொல்லத் துணிந்தாரா? அதற்குப் பின்விளைவுகள் இருந்தால் அதை எப்படி எதிர்கொண்டார்? சமாதானமாகப் போக, முடிவுகளிலிருந்து பின் வாங்கினாரா, செய்யாத தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறாரா? விமர்சனங்களையும், அழுத்தங்களையும் தாங்கியிருக்கிறாரா? இவையே ஒரு அரசியல்வாதியின் தைரியத்துக்கான, வலிமைக்கான அடையாளங்கள்.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது கண்ணியம். கண்ணியமான பேச்சும், நடத்தையும் இந்த மண்ணின் அரசியல் வரலாறு நமக்கு வலியுறுத்திக் கற்றுத்தந்த ஒரு மதிப்பாகும். கருத்து வேறுபாடு இருந்தால், எதிரியைக்கூட இழிவாகப் பேசுவது நமது பண்பல்ல. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்துவந்து விமர்சிப்பதும் சரியானதல்ல. கருத்தைக் கருத்தால் எதிர்ப்பதே அரசியல் பண்பாடு. மரியாதையுடன், தெளிவான வார்த்தைகளில், தகுந்த தரத்தில் விவாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தாக்குதல், கருத்தை நோக்கி இருக்க வேண்டும் தவிர, மனிதரை நோக்கி இருக்கக்கூடாது.

Leader
LeaderChatGPT - AI

அடுத்ததாக மிக முக்கியமானது உண்மை! எந்தச் சூழலிலும் உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதோ, உண்மையை வசதிக்கேற்றபடி மறைப்பதோ, திரிப்பதோ கூடாது. ஓர் அரசியல் நிலைப்பாடு வலிமையாக இருக்க வேண்டுமெனில், அது துல்லியமான தரவுகளாலும், உறுதியான ஆதாரங்களாலும் வலுசேர்க்கப்பட வேண்டும். வெறும் உணர்ச்சியாலோ, வாட்சப் தகவல்களாலோ மக்களை திசை திருப்புவது கூடாது. உண்மை எனும் அணையா நெருப்பினடியில்தான், ஒரு வாதம் எப்போதும் நிலைத்து நிற்கும். ஒருவேளை கருத்துகளைச் சொல்லும் போது தவறுகள் நடக்கலாம், கவனப்பிசகு ஏற்படலாம், தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். அப்படியான சந்தர்ப்பங்களின் போது அதை மறைக்காமல் ஒப்புக்கொள்வதும், தேவையானால் வருத்தம் தெரிவிப்பதுமே, உண்மையான நேர்மை.

அடுத்ததாக நாம் எதிர்பார்க்க வேண்டியது வரலாற்று அறிவும், தொலைநோக்குச் சிந்தனையும். அரசியல் என்பது வெறும் தேர்தல் வெற்றிக்கான திட்டமல்ல; அது அந்த சமூகத்தின் வரலாற்றை புரிந்துகொள்ளுவதிலிருந்து தொடங்க வேண்டும். கடந்த நூற்றாண்டுகளில் நாம் எந்தவிதமான சமூகக் கட்டமைப்பில் வாழ்ந்தோம்? ஜாதி, மதம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் போன்ற என்னென்ன காரணங்கள், எப்படியெப்படி நம்மை முடக்கியது? அவற்றை மாற்ற யார் யார் முயன்றார்கள்? அவர்கள் எடுத்த வழிமுறைகள் என்னென்ன? அவற்றின் பலம் என்ன? பலவீனம் என்ன? -இந்த விமர்சனத் தெளிவே ஓர் அரசியல்வாதியின் அறிவின் ஆழத்தை வெளிப்படுத்தும். சமூக முன்னேற்றம் எதனால் ஏற்படுகிறது? அறிவியல் சிந்தனையாலா? சமத்துவ வாய்ப்புகளா? ஆன்மீக நம்பிக்கைகளாலா? இலவசங்கள் வேண்டுமா, வேண்டாவா? இட ஒதுக்கீடு என்பது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு ஒரு தெளிவும், நிலைப்பாடும் மிக அவசியம்.

மேலும், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான ஒரு தெளிவான பார்வையும், திட்டமிடலும், இலக்கும் அவரிடம் இருக்க வேண்டும். இன்று நாம் எதை அடித்தளமாக அமைத்தால் நாளைய தலைமுறை பலமாக நிற்கும் எனும் கேள்விக்கான பதிலை அவருக்கு முன்வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவரிடம் இந்தத் தெளிவுகள் எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இருந்தால்தான் சிறப்பு. இல்லையெனில், அரசியலுக்குள் வந்தபிறகாவது அவரது பேச்சுகள், அறிக்கைகள், நிலைப்பாடுகள் மூலம் அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

Leader
Leader CHatGPT - AI

மேலும் ஒருசில விஷயங்கள் இருக்கின்றன, இவை ஒரு தலைவரிடம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவை இருந்தால் நன்றே தவிர, இல்லாததால் ஒருவரை தகுதியற்றவராகக் கருத வேண்டிய அவசியமில்லை.

அவற்றில் முதலில் படிப்பு. இந்த முன்னேறிய காலகட்டத்தில் கல்வி மிகவும் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. பள்ளி, கல்லூரிக் கல்வி என்பன அறிவின் முழுமை அல்ல என்றாலும், அதுவே தொடக்கம். உலகைப் புரிந்துகொள்ளவும், தரவுகளை வாசிக்கவும், கொள்கைகளை ஆராயவும் கல்வி உதவுகிறது. ஆகவே, அது இருந்தால் நல்லது. ஆனால், உயர்கல்வி இல்லாதவர் நல்ல அரசியல் சிந்தனை கொண்டிருக்க முடியாது என்று நாம் முடிவு செய்து விடவும் முடியாது. அடுத்து, பேச்சுத்திறன். நம் அரசியல் வரலாற்றில் கலைநயமிக்க உரைகளால் மக்களை ஈர்த்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்போரை மயங்க வைக்கும் தமிழாற்றல் அவர்களிடம் இருந்திருக்கிறது. அதனால், பேச்சுத்திறன் ஒரு முக்கியமான அரசியல் கருவி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நல்ல பேச்சாளர் என்பதாலேயே, அவர் நல்ல தலைவர் என்று ஆகிவிட முடியாது. வாய் பேச முடியாத ஒருவருக்கு தலைமைத் தகுதி முழுமையாக இருக்கலாமல்லவா? நல்ல சிந்தனை, நேர்மை, தைரியம் ஆகியவை இருக்கும்போது பேச்சுத்திறன் குறைவாக இருந்தாலும் அது தடையாகிவிடக்கூடாது. எழுதி வைத்துப் படிப்பதென்பது எவ்வகையிலும் குற்றமாகாது. 

அடுத்து வள்ளல்தன்மை. அரசியலுக்கு வருமுன்போ, வந்த பிறகோ ஏழைகளுக்கு உதவி செய்திருக்கிறாரா? பணம் கொடுத்தாரா? உணவளித்தாரா? ரத்ததானம் செய்தாரா? நோட்டுப்புத்தகம் கொடுத்தாரா? இலவச மருத்துவமனை கட்டினாரா? என்ற கேள்விகள் பொதுவாக எழுகின்றன. உதவி செய்வது நல்ல குணம்தான். ஆனால், தனிப்பட்ட உதவிகள் மட்டுமே ஒருவரின் தலைமைத் திறனை நிரூபிப்பதில்லை. அதைவிட, கொள்கை முடிவுகள் மூலம் சமூகத்தையே மேம்படுத்தும் திறனே அரசியலில் முக்கியமானது. 

Leader
Leader ChatGPT AI



ஆனால், இதையெல்லாம் விடுத்து உண்மையில் நாம் ஒரு தலைவரிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? நமக்கு, அவசியமேயில்லாத தனிநபர் விஷயங்களில்தான் நம் கவனம் அதிகமாகச் செல்கிறது.

ஒருவர் தனது குடும்ப வாழ்க்கையை எப்படிச் செலுத்துகிறார்? பாரம்பரிய முறையில் வாழ்கிறாரா, இல்லையா? அவரது மனைவி அவருக்குப் பின் தூங்கி முன் எழுகிறாரா? அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாமா, கூடாதா? அவருக்கு விவாகரத்து செய்ய உரிமை உண்டா, இல்லையா? விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்யலாமா, கூடாதா? யாராருடன் நட்பு வைத்திருக்கிறார்? எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறார்? என்ன உணவருந்துகிறார்? எந்த விலையிலான ஆடைகள், கைக்கடிகாரங்கள் அணிகிறார்?- இவ்வாறான விஷயங்களே பொதுவாக அதிக விவாதத்திற்குரியதாக மாறுகின்றன. ஆனால், இவை அனைத்துமே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகள். அதில், நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரது கொள்கை நிலைப்பாடுகள், நிர்வாகத் திறன், சமூகப் பார்வை இவைதான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட வாழ்க்கை அல்ல.


ஒரு தலைவர், நல்ல கணவரா, நல்ல தந்தையா என்பதை நமக்கு முழுமையாக அறியும் வாய்ப்பு கிடையாது. அவரது வீட்டின் கதவுகள் மூடப்பட்ட பின் நடக்கும் வாழ்க்கை, அவருடையது. அங்கே நடப்பவை நமக்குத் தெரியாது, தெரியவேண்டிய அவசியமுமில்லை. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரின் பொதுப் பொறுப்பு -இந்த இரண்டிற்கும் இடையிலான வரம்பை தெளிவாக வைத்துக்கொள்வதே ஒரு முதிர்ந்த சமூகத்தின் அடையாளமாக அமையும்.

Puthuyugam
www.puthuyugam.com