கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரைக் கேட்டாலே இந்தியர்கள் அலறிய காலம் உண்டு. கடந்த 1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிரிட்டன் மகாராணி முதலாம் எலிசபெத்தால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதுதான் இந்த கம்பெனியின் நோக்கம். 1613ம் ஆண்டு இந்தியாவில் சூரத் நகரில் இருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டது. பருத்தி, நறுமணப்பொருட்கள், தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அதேவேளையில், இந்த நிறுவனத்திடம் 2.5 லட்சம் வீரர்கள் கொண்ட ராணுவமும் இருந்தது. முதல்கட்ட போர்களில் பலம் வாய்ந்த முகலாயப்படைகளை வெல்ல முடியாமல் கிழக்கிந்திய கம்பெனி தோற்று கொண்டுதான் இருந்தது. ஆனால் 1765ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிழக்கிந்திய கம்பெனி, முகலாய பேரரசர் ஷா ஆலமைத் தோற்கடித்தது. இதன் பின்னர், இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி ஏற்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857ம் ஆண்டு மே 10ம் தேதி மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் தொடங்கிய சிப்பாய் கலகம் தொடங்கியது. 1856 ம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக இன்ஃபீல்ட் பி-53 என்ற புதிய துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கியில் தோட்டாக்களை உள்ளே போடுவதற்கு கார்ட்ரிட்ஜை வாயால் கடிக்க வேண்டியிருந்தது. இந்த துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் கார்ட்ரிட்ஜ்களில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதன் காரணமாகவே, சிப்பாய் கலகம் வெடித்தது. மங்கல் பாண்டே (சிப்பாய் எண் 1446)என்ற இந்திய ராணுவ வீரர்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடி உயிரை தியாகம் செய்த முதல் இந்தியர் ஆவார்.இவர், ஆங்கிலேயே ராணுவ அதிகாரிகளை தாக்கினார். இவரை பிடிப்பதற்கு முன், தன் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த மங்கள் பாண்டேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு சக இந்திய வீரர்கள் முன்னிலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். சிப்பாய் கலகம் 1806ம் ஆண்டு நடந்த வேலூர் கலகத்தின் தொடர்ச்சியாகவும் பார்க்கப்பட்டது. இதையடுத்தே, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, 1858ம் ஆண்டு முதல் பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது.
இந்தியாவிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரைக் கேட்டாலே, சுரண்டல் மற்றும் வன்முறை போன்ற எதிர்மறை சிந்தனையே உருவாகும். இந்த நிறுவனத்தால், ஏற்படுத்தப்பட்ட செயற்கை பஞ்சத்தால் வங்காளத்தில் மட்டும் 3 கோடி மக்கள் இறந்தனர். கிழக்கிந்திய கம்பெனி கிட்டத்தட்ட 152 ஆண்டுகளுக்க முன்பே மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா கிழக்கிந்திய கம்பெனியின் முழு உரிமத்தை 2010ம் ஆண்டு வாங்கினார். அதன்மூலம் அந்தப் பெயரைப் பயன்படுத்தும் உரிமையும் இவருக்கு வந்தது. இந்தியாவை ஆண்ட நிறுவனத்தை இப்போது இந்தியர் வாங்கிவிட்டார் என்று பெருமையாகப் பேசப்பட்டது. உயர்ரக தேயிலை, காபி, சாக்கலேட்டுகள், நறுமணப் பொருட்கள், உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் விற்பனை செய்து வந்தது.
ஒரு முறை கார்டியன் பத்திரிகைக்கு சஞ்சீவ் மேத்தா அளித்த பேட்டியில், ''எதிர்மறையான காலனித்துவத்தின் அடையாளத்தை நேர்மறையான ஒன்றாக மாற்றுவதற்காக இதை வாங்கினேன். ஒரு இந்தியர் இப்போது கிழக்கிந்திய கம்பெனியை சொந்தமாக வைத்திருப்பது பாசிடிவான விஷயம் '' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லண்டனில் மேஃபேர் பகுதியில் 2000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு கொண்டிருந்த கடையும் மூடப்பட்டு விட்டது. தற்போது, இந்த இடத்தை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் வெப்சைட்டும் இயங்கவில்லை. கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கிழக்கிந்திய நிறுவனத்துடன் தொடர்புடைய சார்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.