கிரீன்ஹவுஸ் விளைவு என்றால் என்ன? #greenhouseeffect

சூரியனிலிருந்து வரும் அபரிமிதமான வெப்பத்தை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அது தடுக்கப்பட்டு குறைவான வெப்பமே உள்ளே வரவேண்டும். போலவே, உள்ளே வந்த வெப்பம் முழுமையாக எதிரொளிக்கப்பட்டு வெளியேறிவிடவும் கூடாது.
Image depicts of Green House Effect
Image depicts of Green House Effect AI GENEREATED
Published on

எப்போதாவது நம் கண்களில், பெரிய பசுமை நிழற்கூடாரங்களுக்குள் வளர்க்கப்படும் பூச்செடிகள், காய்கறி தோட்டங்கள் கண்களில் படுகின்றன. கேட்டால் கிரீன்ஹவுஸ் விவசாயம் என்கிறார்கள். ஆனால், மீத்தேன் போன்ற கிரீன்ஹவுஸ் வாயுங்கள் வளிமண்டலத்துக்கு ஆபத்தானவை, அவையே புவி வெப்பமடைதலுக்குக் காரணமாக அமைகின்றன என்று படிக்கும் போது, என்னய்யா இது… இந்த கிரீன்ஹவுஸ் விளைவு என்பதுதான் என்ன? கிரீன்ஹவுஸ் வாயுங்கள் என்பன யாவை? கிரீன்ஹவுஸ் விவசாயம் என்பது என்ன? இவற்றுக்கிடையே என்னதான் தொடர்பு? என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன அல்லவா?

வாருங்கள் எளிமையாகப் பார்த்துவிடலாம்!

பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருப்பதற்கு அதன் வளிமண்டலமும், அதிலிருக்கும் வெப்பச் சமநிலையும் ஒரு முக்கியமான, முதன்மையான காரணியாகும். வளிமண்டலத்தில் நடைபெறும் 'பசுமை இல்ல விளைவு (Greenhouse Effect) அதாவது கிரீன்ஹவுஸ் விளைவு என்ற செயல்முறைதான் பூமியை இப்படியான வெப்பச்சமநிலையில் வைக்கிறது. அதெப்படி?

சூரியனிலிருந்து வரும் அபரிமிதமான வெப்பத்தை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அது தடுக்கப்பட்டு குறைவான வெப்பமே உள்ளே வரவேண்டும். போலவே, உள்ளே வந்த வெப்பம் முழுமையாக எதிரொளிக்கப்பட்டு வெளியேறிவிடவும் கூடாது. அப்படி நடந்தால், இரவில் பூமி, மனிதர்களால் தாங்க முடியாத குளிருக்கு உள்ளாகிவிடும். ஆகவே, உள்ளே வந்த வெப்பத்தின் ஒரு பகுதி உள்ளேயே இருக்கவும் வேண்டும். இந்தச் செயல்தான் கிரீன்ஹவுஸ் விளைவு எனப்படுகிறது.

இதைச் செய்வது எது? காற்றில் இருக்கும் சில வாயுக்கள். காற்றில், ஆக்சிஜன் (21%), ஹைட்ரஜன் (78%), பிற வாயுக்கள் (1%) இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் வெப்பத்தை தடுக்கும் ஆற்றல் இல்லாத வாயுக்கள். அப்படியானால் மீதமிருக்கும் 1% சதவீதம் இருக்கும் வாயுக்கள் சேர்ந்துதான் இதைச் செய்கின்றன என்று நினைப்பீர்கள், அதுவுமில்லை. அந்த 1% வாயுக்களில், 0.93% பகுதி ஆர்கன் எனும் மந்த வாயு இடம் பிடித்திருக்கிறது. பெரும்பங்கு இருக்கும் நைட்ரஜனைப் போலவே, இதுவும் ஒன்றும் செய்வதில்லை. அதனினும் சிறு பகுதியாக இருக்கும், 0.07% பங்கில்தான் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஓஸோன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவைதான் இந்த கிரீன்ஹவுஸ் விளைவை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் இவை கிரீன்ஹவுஸ் வாயுக்கள் எனப்படுகின்றன.

Picture represents Earth in Dome
Picture represents Earth in DomeAI GENERATED

அப்படியானால், காடுகளை அழித்தல், வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை போன்றவற்றால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு நமக்கு நல்லதுதானே செய்கிறது என்றால் அதுதான் இல்லை. எப்படி இந்த வாயுக்கள் காற்றில் குறையுமானால் புவி வெப்பம் குறைந்து சிக்கலாகிவிடுமோ, அப்படியே இந்த வாயுக்கள் 0.07ஐ விட அதிகரித்தால் புவி வெப்பம் அதிகரித்து சிக்கலாக்கிவிடும். அதில்தான் இப்போது நாம் மாட்டியிருக்கிறோம். அதாவது காற்றில் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்றவை மனிதர்களின் செயல்பாட்டால் அதிகரித்துதான் இப்போது நாம் புவி வெப்பமாதல் (Global warming) எனும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறோம். அதனால்தான், காற்றில், கார்பன் டை ஆக்சைடைக் குறைக்கும் வேலையில் உலக நாடுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

அப்படியானால், கிரீன்ஹவுஸ் விவசாயம் என்பது என்ன?

குளிர் நாடுகளில், கடும் குளிரால் செடிகள் வாடிவிடாமல் இருக்க, கண்ணாடியால் சூழப்பட்ட அறைகளை உருவாக்கி அதற்குள் செடிகளை வளர்க்கிறார்கள். இதற்கு 'கிரீன்ஹவுஸ்' என்று பெயர். சூரிய ஒளி இந்தக் கண்ணாடி வழியாக உள்ளே வரும்போது வெப்பத்தை உள்ளே கொண்டு வரும். ஆனால், அந்த வெப்பம் மீண்டும் வெளியேற முடியாமல் கண்ணாடியால் தடுக்கப்படும். இதனால் வெளியே பனி கொட்டினாலும், உள்ளே செடிகள் வளரத் தேவையான கதகதப்பான சூழல் இருக்கும். இதே போன்ற ஒரு செயல்பாட்டைத்தான் இந்தியா, ஆப்ரிக்கா போன்ற வெப்ப நாடுகளில், செடிகளைப் பாதுகாக்க, பச்சை நிற வலைகள் விரிக்கப்பட்ட நிழலான அறைகளை உருவாக்கி, வெளியிலுள்ள வெப்பம் செடிகளைத் தாக்காமல், நேரெதிராகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கும் அதே கிரீன்ஹவுஸ் என்றுதான் பெயர். அதாவது, அதிக குளிரோ, அதிக வெப்பமோ தாக்காதவாறு வெப்பச் சமநிலையை உருவாக்கும் ஏற்பாடு அது. அப்படிச் செய்யப்படும் விவசாயமே, கிரீன்ஹவுஸ் விவசாயம் எனப்படுகிறது.

சுருக்கமாக, 0.07% பசுமை இல்ல வாயுக்கள் குறைந்தால் பூமி ஒரு பனிக்கட்டிப் பந்தாக மாறிவிடும். ஆனால், அவை அதிகரித்தால், பூமி ஒரு நெருப்புக் கோளமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, மரங்களை நடுவது மற்றும் பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த வாயுக்களின் சமநிலையைப் பேணுவதே நமது கடமையாகும்.

Puthuyugam
www.puthuyugam.com