யார் இந்தச் சிகைக் கொற்றன்? #CikaiKoṟraṉ

அப்படி, இன்றிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பாக அங்கே சென்ற தமிழர்களும் தங்கள் பெயர்களை அங்கே பதித்திருக்கிறார்கள் என்பதுதான் இங்கே வெளிப்பட்டிருக்கும் செய்தி.
 Valley of the Kings region of Egypt. சிகைக் கொற்றன்
Valley of the Kings region of Egypt. சிகைக் கொற்றன்minnambalam.com
Published on

பிப்ரவரி 2026, 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை சென்னையில் நடந்த தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில்தான், இந்த சிகை கொற்றன் பற்றிய ஒரு முக்கியமான செய்தி வெளியானது. அதுவே உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர்களான இங்கோ ஸ்ட்ராச் (Ingo Strauch) மற்றும் சார்லட் ஸ்மித் (Charlotte Schmid) ஆகியோர் எகிப்தில் உள்ள புகழ்பெற்ற 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Kings) எனும் பகுதியில் அமைந்துள்ள பாரோ (Pharaoh) மன்னர்களின் கல்லறைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல்லறைச் சுவர்களில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.பி. 1 - 3 ஆம் நூற்றாண்டு) 30-க்கும் மேற்பட்ட இந்திய மொழி எழுத்துகளைக் கண்டறிந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டவை தமிழ்-பிராமி (தமிழி) எழுத்துகளாகும்.

இந்த கல்வெட்டுகள் ஏற்கனவே, 100 ஆண்டுகளுக்கு முன்பாக, ஜூல் பயாய் எனும் ஆய்வாளராலும் கண்டுபிடிக்கப்பட்டவைதான். ஆனால், அப்போது அவரால் அவை இந்திய மொழிகள் என்று இனம் காணமுடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவை தமிழ் பிராமி என்றே கண்டறியப்படாமலேயே இருந்திருக்கின்றன. இப்போது, ஆய்வாளர் இங்கோ ஸ்ட்ராச்சினால், அவை தமிழ் என்ற உண்மை உலகுக்கு முன்னால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

எகிப்தின் புகழ்பெற்ற 'மன்னர்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Kings) எனும் பகுதியில் கி.மு 1100 முதல் கி.மு 1600 காலகட்டத்தில் எகிப்தை ஆண்ட சுமார் 65 மன்னர்களின் கல்லறைகள் அமைந்துள்ளன. அதன் பிறகான ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகெங்கிலுமிருந்து வந்த பயணிகள், வணிகர்கள் அந்தப் பள்ளத்தாக்கை பார்வையிட்டு வந்திருக்கின்றனர். மரபார்ந்த காரணங்களால் மரியாதை செலுத்திட, ஆய்வு நோக்கம், களஞ்சியங்களைப் பார்வையிட என இந்தப் பயணிகள் இந்தக் கல்லறைகளைப் பார்த்துச் சென்றமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்படி வந்து சென்றோரில் சிலர், தங்கள் வரவையும் அங்கே உள்ள சுவர்களில் பதித்துச் சென்றிருக்கிறார்கள். இவை அரசர்களால் முறையாகச் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அல்ல; மாறாக, அங்கு வணிகம் செய்யவோ அல்லது சுற்றிப் பார்க்கவோ சென்றவர்கள், தாங்கள் வந்து சென்றதை அடையாளப்படுத்தச் செதுக்கிய 'கிராபிட்டி' வகை எழுத்துக்களாகும்.

2,000+ year old Tamil inscriptions found in pyramids
2,000+ year old Tamil inscriptions found in pyramids@Ayyappan_1504

அப்படி, இன்றிலிருந்து 2000 வருடங்களுக்கு முன்பாக அங்கே சென்ற தமிழர்களும் தங்கள் பெயர்களை அங்கே பதித்திருக்கிறார்கள் என்பதுதான் இங்கே வெளிப்பட்டிருக்கும் செய்தி. இந்தக் கல்லறைகளில் சுமார் 6 கல்லறைகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணக்கிடைக்கின்றன. சிகை கொற்றன், கோபன், கீரன், முத்தன், சாத்தன், தத்தன் முதலான தமிழ்ப் பெயர்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் குறிப்பாக "சிகை கொற்றன்" (Cikai Koṟraṉ) என்ற பெயர் 5 வெவ்வேறு கல்லறைகளில் மொத்தம் 8 இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. 'சிகை' என்பது தலைமுடி அல்லது மணிமுடியைக் குறிக்கும் ஒரு சமஸ்கிருதச் சொல். ஆனால், 'கொற்றன்' என்பது சங்க காலத்தில் வீரர்கள் அல்லது தலைவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தூய தமிழ்ச் சொல். கொற்றம், கொற்றவை, கொற்றவன் போன்ற சொற்களோடு தொடர்புடையவை.

கல்லறை ஒன்றின் சுவரில் "சிகை கொற்றன் வர கண்ட" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. "சிகை கொற்றன் இங்கே வந்தான், பார்த்தான்" என்பது இதற்கான பொருள்.

இந்தச் சிகை கொற்றன் தமிழ்நாட்டிலிருந்து கடல்கடந்து வணிகம் செய்த ஒரு வணிகராக இருந்திருக்கலாம். அல்லது ரோமானிய எகிப்திற்கு வணிகம் செய்யச் சென்ற வணிகர், அங்கிருந்து நைல் நதி வழியாக உள்நாட்டிற்குள் பயணம் செய்து, எகிப்திய மன்னர்களின் கல்லறைகளைப் பார்வையிட்ட ஒரு 'சுற்றுலாப் பயணியாக' இருந்திருக்கலாம். அல்லது வணிகம் செய்யச் சென்ற வணிகர்களின் பாதுகாப்புக்காகச் சென்ற வீரனாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது சங்க காலத் தமிழர்களின் கடல்கடந்த வணிகத்தொடர்பையும், சுற்றுலா நாட்டத்தையும் காட்டும் சான்றாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு எகிப்தின் கடற்கரை நகரங்களான பெரெனிகே (Berenike) போன்ற இடங்களில் மட்டுமே தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இப்போது எகிப்தின் இதயப் பகுதியான மன்னர்களின் பள்ளத்தாக்கில் கிடைத்திருப்பது, தமிழர்கள் எகிப்தின் உட்பகுதிகள் வரை சென்றதை உறுதிப்படுத்துகிறது.

இதிலிருந்து, 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வணிக நோக்கத்துடனும், சுற்றுலா மனப்பாங்கிலும் உலகெல்லாம் பயணம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும், பண்பாட்டு ரீதியிலான சிந்தனையையும், பரவலான எழுத்தறிவையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

Puthuyugam
www.puthuyugam.com